McDonalds: மெக்டொனால்ட்ஸ் ஊழியர் தவறுதலாக செய்த காரியம்! உணவகத்தில் சிறுமிக்கு நடந்த ஷாக்..பெற்றோர்கள் கவனம்
சிங்கப்பூர்: மெக்டோனால்ட்ஸ் (McDonalds) உணவகத்தில், குளிர்ந்த நீருக்கு பதிலாக கொதிக்க கொதிக்க இருந்த சுடுதண்ணீரை குடிநீர் பாட்டிலில் ஊழியர்கள் தவறுதலாக ஊற்றிக்கொடுத்துள்ளனர். இதனை தெரியாமல் எடுத்து குடித்த மூன்று வயது சிறுமி படுகாயம் அடைந்துள்ளார். சமூக வலைத்தளத்தில் சிறுமியின் தந்தை இந்த நிகழ்வு பற்றி வெளியிட்ட பதிவு வைரல் ஆகி வருகிறது.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல உணவு நிறுவனம் மெக்டொனால்ட்ஸ். உலகம் முழுவதும் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான உணவங்கள் உள்ளன. அவ்வப்போது இந்த நிறுவனத்தின் சேவை குறைபாடு தொடர்பான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பார்க்க முடியும்.

குடிநீர் பாட்டிலில் சுடுதண்ணீர்
இந்த நிலையில் தான் சிங்கப்பூரில் உணவக ஊழியர் ஒருவர் தவறுதலாக சிறுமியின் குடிநீர் பாட்டிலில் சுடுதண்ணீர் ஊற்றியதால், அந்த சிறுமி நாக்கில் காயம் அடைந்துள்ளார். இச்சம்பவம் கடந்த 2026 பிப்ரவரி 1 அன்று குயின்ஸ்வேயில் உள்ள மெக்டொனால்ட்ஸ் ரிடவுட் டீ கார்டன் கிளையில் நடந்தது.
சில நாட்கள் சிரமப்பட்ட அச்சிறுமி, தற்போது குணமடைந்து நலமுடன் உள்ளார். இச்சம்பவம் குறித்த தகவல்களை சிறுமியின் தந்தை ரிதுவான் முகமது, தனது பேஸ்புக்கில் பகிர்ந்தார். இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சிறுமியின் தந்தை வெளியிட்ட அந்த பதிவில் கூறியிருப்பதாவது,
சாதாரண உணவக விசிட்
என் மகளுக்கு குளிர்நீருக்குப் பதிலாக கொதிக்கும் நீர் வழங்கப்பட்டதால் ஒரு சாதாரண உணவக விசிட், மருத்துவமனை பயணமாக மாறியது. எனது மகளின் குடிநீர் பாட்டிலில் குளிர்ந்த நீரை கேட்டேன். ஆனால் ஊழியர் தவறாகப் புரிந்துகொண்டு சூடான நீரால் நிரப்பிவிட்டார்.
கொதிக்க கொதிக்க இருந்த அந்த நீரை, தெரியாமல் குடித்த எனது மூன்று வயது மகள் வலியால் கதறினார். உடனடியாக அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். நாக்கில் சுடு தண்ணீரால் கடுமையான காயம் ஏற்பட்டது. ஊழியரின் அலட்சியம் இல்லாமல் இருந்திருந்தால் இந்தச் சம்பவத்தைத் தவிர்த்திருக்கலாம்" என்று பதிவிட்டுள்ளர்.
குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருமுறை சரிபார்க்க வேண்டியதன் அவசியத்தை இந்த நிகழ்வு காட்டுவதாகவும், இந்தச் சம்பவம் பெற்றோர்களுக்கும், உணவு விடுதிகளும் எச்சரிக்கையுடன் செயல்பட ஒரு எச்சரிக்கையாக அமைய வேண்டும் என்றும் ரிதுவான் குறிப்பிட்டுள்ளார்.
பெற்றோர் எங்களுக்கும் பொறுப்பு உள்ளது
மேலும், "கடினமான பாடங்களே முன்னோக்கிச் செல்லும்போது நம்மை மேலும் கவனமாக ஆக்குகின்றன" என்றும் பதிவிட்டுள்ளார். இந்த நிகழ்வில், முழுக்க முழுக்க ஹோட்டல் ஊழியரை குற்றம் சாட்ட முடியாது எனவும், பெற்றோராகத் தங்களுக்கும் ஒரு பகுதி பொறுப்பு உள்ளது. "உணவகம் மட்டுமே முழு காரணம் என்று நாங்கள் கூறவில்லை.
எங்களின் தவறுகளையும் ஒப்புக்கொள்கிறோம். கவனமுள்ள பெற்றோருக்கும் கூட விபத்துகள் நிகழலாம்," என்றார். தங்கள் மகளுக்கு நடந்ததைப் போல் வேறு எந்த குழந்தைக்கும் நடக்கக்கூடாது என்ற நம்பிக்கையில் இந்தச் சம்பவத்தைப் பகிர்ந்ததாகவும், குழந்தைகளுக்கு வழங்கப்படும் பானங்களை எப்போதும் இருமுறை சரிபார்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மன்னிப்பு கேட்ட நிறுவனம்
சிறுமி விவகாரத்தில் நடந்த தவறுக்கு மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. இது தொடர்பாக நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "வாடிக்கையாளர்களின் பாதுகாப்பே எங்களின் முன்னுரிமை.
சேவை நடைமுறைகளையும், குறிப்பாக சூடான பொருட்களைக் கையாளும் வழிமுறைகளையும் தெளிவான தகவல்தொடர்புகளையும் வலுப்படுத்த உணவகக் குழுவுடன் இணைந்து நாங்கள் மறுஆய்வு செய்து வருகிறோம்," என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications