சிவகங்கை டாஸ்மாக் கடையில் குடிபோதையில் இளைஞரின் தப்பு.. 20 லட்சம் ரூபாய் சரக்கு மொத்தமாக காலி
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வைகை ஆற்றின் கரையோரத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு பணியாளர்கள், கடையை வழக்கம்போல் பூட்டிவிட்டு சென்றனர். நள்ளிரவு நேரத்தில் அந்த டாஸ்மாக் கடை திடீரென தீப்பிடித்து எரிந்தது. உள்ளே இருந்த 20 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் வீணாகியது. கதவை உடைத்து டாஸ்மாக் கடைக்குள் புகுந்த வாலிபர், ஆசைதீர மதுகுடித்துவிட்டு இந்த சம்பவத்தை நிகழ்த்தியது தெரியவந்துள்ளது.
குடிமகன்கள் சிலர் குடிபோதையில் செய்யும் காரியம், அவர்களை மட்டுமல்ல,சுற்றியுள்ளவர்களையும் மோசமாக பாதிக்கிறது. நல்லவர்களாக இருப்பார்கள்.. நல்ல குண நலன் உடையவர்களாக இருப்பார்கள். ஆனால் குடிபோதையில் பெண்களிடம் சிலர் தவறாக நடக்க முயற்சி செய்து தர்ம அடி வாங்குவார்கள். அதேபோல் பொதுஇடத்தில் பேசக்கூடாத வார்த்தைகள் பேசி அசிங்கப்படுவார்கள்.. ஒருவர் மீது எவ்வளவு மதிப்பும் மரியாதையும் இருந்தாலும், குடித்த பின்னர் அவர்கள் செய்யும் சிறு காரியம் கூட அவர்களின் மீதான மதிப்பை மொத்தமாக காலி செய்துவிடும்.

மதுபழக்கம் பொதுவாக ஒருவரின் மரியாதையை காலி செய்யும், மதிப்பை காலி செய்யும், பணத்தையும் காலி செய்யும், உடலையும் காலி செய்யும், கடைசியில் உயிரும் போகும்.. ஆனாலும் மது குடிக்கும் எண்ணம் மட்டும் மண்டையில் இருந்து சிலருக்கு போகாது.அப்படிப்பட்ட ஒருவரால் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வைகை ஆற்றின் கரையோரத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்படுகிறது. நேற்று முன்தினம் இரவு பணியாளர்கள், கடையை வழக்கம்போல் பூட்டிவிட்டு சென்றனர். நள்ளிரவு நேரத்தில் அந்த டாஸ்மாக் கடை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி மானாமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் கடை முழுவதுமாக தீ பரவியது. அட்டை பெட்டிகளிலும், அலமாரிகளிலும் இருந்த மதுபாட்டில்கள் வெப்பம் தாங்காமல் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.
இதையடுத்து மானாமதுரை தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து, பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். அந்த கடை பலத்த சேதம் அடைந்தது. இந்த சம்பவத்தில் மொத்தம் ரூ.20 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் சேதமாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இந்த சம்பவம் பற்றி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, சாலைக்கிராமம் பகுதியை சேர்ந்த கவுதம் (வயது 30) அந்த பகுதியில் சுற்றிதிரிந்தது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது, டாஸ்மாக் கடைக்கு அவர்தான் தீ வைத்தார் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து கவுதமை அதிரடியாக கைது செய்தார்கள்.
மேலும் அவரிடம் விசாரித்தபோது, நள்ளிரவில் டாஸ்மாக் கடைக்கு வந்த அவர், பெரிய இரும்பு கம்பியைக்கொண்டு கடையின் பூட்டை நெம்பி திறந்திருக்கிறாராம். பின்னர் உள்ளே சென்று, ஆசைதீர மதுபானங்களை குடித்ததுடன் கல்லாப்பெட்டியை திறந்து பார்த்துள்ளார். அதில் பணம் இல்லாத நிலையில், ஆத்திரம் அடைந்து, அங்கிருந்து வெளியேறும்போது கடைக்கு தீவைத்தாராம். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் சிவகங்கை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications