ஆனா.. உனக்கு தைரியம் ஜாஸ்திப்பா! அதிமுக பிரமுகர் கொலை..கலெக்டர் ஆபிசில் பதுங்கிய கொலையாளி குண்டுமணி!
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் அதிமுக கிளை செயலாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தகராறு அதிமுக கிளை செயலாளரை வெட்டி கொலை செய்துவிட்டு தனது பகுதிக்கு தண்ணீர் வசதி வேண்டுமென சமூக ஆர்வலர் என மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க சென்றிருக்கிறார் கொலையாளியான குண்டுமணி.
சிவகங்கை மாவட்டம் நாட்டாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். அது மட்டுமில்லாமல் அதிமுக கிளை செயலாளராகவும் இருந்து வந்தார்.

இந்நிலையில் செவ்வாய்கிழமை அதிகாலை ஐந்து மணிக்கு வழக்கம் போல், தனது பெட்டிக் கடையை திறப்பதற்காக கணேசன் சென்றுள்ளார். அப்போது அங்கு கடைக்கு அருகே பதுங்கி இருந்த மர்ம நபர் கணேசனை கொடூரமாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடினார்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த கணேசன் சிறிது நேரத்திலேயே துடிதுடித்து மரணம் அடைந்தார். காலையில் கணேசன் உயிரிழந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தோர் நாட்டாக்குடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் கணேசனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதிமுக கிளை செயலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்டு அங்கு அதிமுகவினர் அதிகளவில் குவிய தொடங்கினர். எம்எல்ஏ தலைமையில் சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது. தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியும் கணேசன் கொலைக்கு கண்டனம் தெரிவித்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து அரசியல் காரணத்துக்காக கொலை நடந்திருக்கலாம் என கூறப்பட்டது பரபரப்பை மேலும் அதிகரித்தது. இதனால் சிவகங்கை பரபரப்புக்குள்ளான நிலையில் மேலும் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். இந்நிலையில் கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞரான குண்டுமணியை போலீசார் கைது செய்தனர். ஆனால் கைது செய்த இடம் தான் கொஞ்சம் பெரிய இடம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையுடன் சமூக ஆர்வலர் என தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க வேண்டும் என மனு அளித்த அவர் தொடர்ந்து அங்கேயே சுற்றி வந்திருக்கிறார்.
இந்த நிலையில் கொலை தொடர்பாக விசாரணை நடத்திய போது குண்டுமணி தான் கொலை செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்துக்கு சென்ற போலீசார், அவரை அழைத்துச் சென்று அவர் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் தனது மனைவி தன்னை விட்டு பிரிந்து வாழும் சூழலில் அதற்கு மாமியார் கருப்பாயி தான் காரணம் என எண்ணியுள்ளார்.
இதை அடுத்து செவ்வாய்க்கிழமை இரவு மதுரைக்குச் சென்ற குண்டுமணி தனது மனைவி பவித்ராவையும் மாமியார் கருப்பாயையும் அரிவாளால் வெட்டியுள்ளார். தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் நாட்டாக்குடிக்கு தப்பி வந்துள்ளார். இந்நிலையில் காலையில் கடைக்கு கணேசன் வருவதை பார்த்து அவரையும் வெட்டியுள்ளார்.
அதிமுக கிளைச் செயலாளரும், அந்த ஊரில் முக்கிய பிரமுகரான கணேசன் கட்டிய விநாயகர் கோவிலில் இருந்து விநாயகரை, குண்டுமணி தூக்கி சென்று கிணற்றில் போட்டதாக கூறப்படுகிறது. இதனால் குண்டுமணியை கணேசன் தண்டித்துள்ளார். மேலும் தனது குடும்பப் பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு பலமுறை கூறியும் கணேசன் கேட்காததால் ஆத்திரத்தில் அவரை வெட்டி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications