'திருப்பத்தூரில் ஒரே வாக்கினால் வரலாறு மாறியது'.. தவெக வென்றது குறித்து ஆனந்த் மஹிந்திரா வியப்பு
சிவகங்கை: மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் மற்றும் டெக் மஹிந்திரா லிமிடெட் குழுமத்தின் தலைவரும் பிரபல தொழில் அதிபருமான ஆனந்த் மஹிந்திரா பல்வேறு சமூக பிரச்சனைகள் தொடர்பாக அவ்வப்போது கருத்துக்களை தெரிவிப்பார். அப்படித்தான் தமிழ்நாடு குறித்து தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் பெரிய கருப்பன் தோற்றதையும், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி வென்றதையும் திகைப்புடன் பதிவிட்டுள்ளார்
ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "சமீபத்திய மாநிலத் தேர்தல் முடிவுகள் எந்த விதத்தில் பார்த்தாலும் வியக்கத்தக்கதாகவே அமைந்திருக்கின்றன. ஆனால் என்னைப் பொறுத்தவரை, இந்த ஒரு புகைப்படம் தான் இந்தத் தேர்தலின் மறக்க முடியாத முடிவாக எப்போதும் நிலைத்திருக்கும்.

ஆனந்த் மஹிந்திரா கருத்து
தமிழ்நாட்டின் இந்தத் தொகுதியில் முன்னணியில் இருந்த இரு வேட்பாளர்களுக்கு இடையே 1,66,000-க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆனால், வெறும் ஒரே ஒரு வாக்கினால் வரலாறு மாற்றப்பட்டிருக்கிறது. இந்தப் புகைப்படம் இந்த நாட்டின் ஒவ்வொரு பள்ளியிலும், ஏன் உலகெங்கிலும் காட்டப்பட வேண்டும்.
அப்போதுதான், ஒவ்வொரு குழந்தையும் அவர்கள் வளரும்போது, அவர்கள் பெற்றிருக்கக்கூடிய மிகப்பெரிய அதிகாரம் என்பது அந்த 'ஒற்றை வாக்கின் வலிமை' என்பதைப் புரிந்து கொள்வார்கள். அவர்களுடைய அந்த ஒரே ஒரு வாக்கின் வலிமை." இவ்வாறு ஆனந்த் மஹிந்திரா கூறினார்.
என்ன நடந்தது
2021-2026 தி.மு.க. ஆட்சியில் முதலில் ஊரக உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த பெரிய கருப்பன், ஐந்தாவது முறையாக திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். இங்கு அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறன் போட்டியிட்டார். த.வெ.க. சார்பில் சீனிவாச சேதுபதி என்பவர் களம் கண்டார். இந்த தொகுதியில் மொத்தம் உள்ள 2,65,474 ஓட்டுகளில் 2,13,739 ஓட்டுகள் பதிவாகி இருந்தன.
சீனிவாச சேதுபதி
கடந்த மே 4ம் தேதி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் ஓட்டுகள் எண்ணப்பட்டன. காலையில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தி.மு.க. வேட்பாளரான பெரியகருப்பன் முன்னிலையில் இருந்து வந்தார். மொத்தம் 27 சுற்றுகளாக எண்ணப்பட்டன. 20-வது சுற்று வரை த.வெ.க. வேட்பாளர் சீனிவாச சேதுபதியை விட அமைச்சர் பெரியகருப்பன் சுமார் 5 ஆயிரம் ஓட்டுகள் முன்னிலையில் இருநதுள்ளார்.
பெரிய கருப்பன் தோல்வி
ஆனால், கடைசி கட்ட சுற்றுகளில் த.வெ.க. அதிக வாக்குகளை பெற்றது. எனவே தி.மு.க., த.வெ.க. இடையேயான ஓட்டு வித்தியாசம் குறைந்து கொண்டே வந்ததாது. 25-வது சுற்று நிலவரப்படி பெரியகருப்பன் 77,773 வாக்குகளும், சீனிவாச சேதுபதி 76,646 வாக்குகளும் பெற்றனர். அதாவது இருவருக்கும் இடையே 1,127 ஓட்டுகள்தான் வித்தியாசம். 26-வது சுற்றில் சீனிவாச சேதுபதி முந்தினார். அவர் 80,929 வாக்குகளும், பெரியகருப்பன் 80,730 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
ஒரு ஓட்டில் வெற்றி
இருவருக்கும் 199 வாக்குகள் வித்தியாசம் இருந்தது. இறுதி சுற்றான 27-வது சுற்றில் பெரியகருப்பன் 81,641 வாக்குகளும், சீனிவாச சேதுபதி 82,247 வாக்குகளும் பெற்றிருந்தனர். அத்துடன் நிறுத்தி வைத்திருந்த தபால் வாக்குகளை அதிகாரிகள் எண்ணினார்கள். இதில் கிடைத்த ஓட்டுகளையும் சேர்த்தபோது சீனிவாச சேதுபதியை காட்டிலும் பெரியகருப்பன் 212 ஓட்டுகள் அதிகம் பெற்றிருந்தார். தபால் வாக்குகளில் பெரியகருப்பனுக்கு 1183-ம், த.வெ.க.வுக்கு 365-ம், செல்லாதவையாக 304-ம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே பழுதடைந்த எந்திரங்கள் சரிசெய்யப்பட்டு அதில் இருந்த ஓட்டுகளையும் எண்ணினார்கள். இதில் த.வெ.க. வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83,375 ஓட்டுகளும், தி.மு.க. வேட்பாளர் பெரியகருப்பன் 83,374 ஓட்டுகளும் பெற்றதாகவும், ஒரு ஓட்டு வித்தியாசத்தில் பெரியகருப்பன் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றார். இது இந்தியா முழுவதும் பேசுபொருளாகி உள்ளது.இதுபற்றி தான் ஆனந்த் மஹிந்திரா கருத்து பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications