சிங்கம்புணரி புத்தூர் கட்டு பாண்டி.. நாட்டு வைத்தியரா? உருட்டு வைத்தியரா! ரெய்டில் அதிரடி கைது!
சிவகங்கை: தனது வைத்தியத்தை சோஷியல் மீடியாக்களில், லைவ் போட்டு பிரபலமானவர்தான் இந்த சிங்கம்புணரி புத்தூர் கட்டு பாண்டி. ஆனால் இவரது சிகிச்சையின் உண்மை தன்மை குறித்த பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், தேவக்கோட்டை சப்கலெக்டர் பாண்டி வீட்டிலும், மருத்துவம் பார்க்கும் இடத்திலும் அதிரடியாக ரெய்டு நடத்தி, பாண்டியை கைது செய்துள்ளார்.
ஈழ தமிழ் வழக்கில், எலும்பு முறிவை 'நுடவு' அல்லது 'நுடா என்றுதான் சொல்வார்கள். எனவேதான் புத்தூர் கட்டு வைத்திய சாலைகள் 'நுட வைத்தியசாலை' என்று அழைக்கப்படுகின்றன. ஆனாலும், பல வைத்தியசாலைகள் போலியானவையாக இருப்பதாக புகார்கள் தொடர்ந்து வருகின்றன.

நுட வைத்தியம்
சிறிய அளவிலான எலும்பு முறிவுகள், தசைப்பிடிப்புகளுக்கு நுட வைத்திய சாலைகளில் ட்ரீட்மென்ட்கள் கொடுக்கப்படுகின்றன. சிகிச்சை பலருக்கு பலன் கொடுத்திருக்கிறது. ஆனால், சிலருக்கு சிக்கலைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது. இப்படியான சில உருட்டு வைத்தியசாலைகளில் ஒன்றுதான் சிங்கம்புணரி புத்தூர் கட்டு நுட வைத்தியசாலையும்.
தைலம் பாண்டி
இங்கு சிகிச்சை பெற வருபவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் என்ன? என்பதை லைவாக வீடியோவாக டெலிகாஸ்ட் செய்து பிரபலமானவர்தான் இந்த சிங்கம்புணரி புத்தூர் கட்டு பாண்டி. எனவே இவரிடம் சிகிச்சை பெற தினமும் ஏராளமான மக்கள் வருகின்றனர். ஆனால், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளித்துவிட்டு, மற்ற நோயாளிகளுக்கு தங்கள் தயாரிப்பு தைலத்தை கொடுத்து அனுப்புகிறார் பாண்டி.
தைலம் குறித்து கேள்வி
மாயமில்லே.. மந்திரமில்லே.. தைலம் தேய்த்தால் வலி பறந்துபோகும் என்று சொல்லி 200 மி.லி தைலத்தை ரூ.600க்கு விற்பனை செய்து வந்திருக்கிறார். இந்த தைலம் எப்படி தயாரிக்கப்படுகிறது? இதற்கு வாரண்டி, கேரண்டி ஏதேனும் இருக்கிறதா? என்றெல்லாம் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதிரடி ரெய்டு
இது குறித்து பொதுமக்கள் சிலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இதனையடுத்து சுகாதாரத்துறை கொடுத்த புகாரின் பேரில், தேவகோட்டை சப் கலெக்டர் வெங்கட் வட்ஸ், திருப்புத்தூர் டிஎஸ்பி செல்வக்குமார், தாசில்தார் நாகநாதன் ஆகியோர், பாண்டியின் வீடு மற்றும் கிளினிக்கில் ரெய்டு நடத்தினர். ரெய்டில் சிக்கிய தைலத்தை ஆய்வு செய்த பின்னர் பாண்டியனை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் சிவகங்கையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications