சொந்தக் கட்சி காரரையே..? எச்.ராஜா செய்த சம்பவம்.. திமுகவை குறி வைத்த லிஸ்ட்டால் பாஜகவில் குழப்பம்!
சிவகங்கை : பாஜக மாவட்ட தலைவர் நடத்தும் பள்ளியை திமுக பிரமுகர் நடத்தும் பள்ளி எனக் கூறி பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளது சிவகங்கை மாவட்ட பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம் நடத்தியுள்ள நிலையில், திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி மொழியை கற்றுத் தருவது பற்றி விமர்சித்துள்ள பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார்.
அதில், முன்பு திமுகவில் இருந்தவரும், தற்போதைய சிவகங்கை மாவட்ட பாஜக தலைவருமான மேப்பல் சக்தியின் பள்ளியும் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து நெட்டிசன்கள், சொந்தக் கட்சிக் காரரையே கோர்த்து விடுறீங்களே என விமர்சித்துள்ளனர்.

அமித்ஷா குழுவின் பரிந்துரை
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு இந்தி மொழியை ஊக்குவிப்பதற்கான பரிந்துரைகளை குடியரசுத் தலைவரிடம் சமீபத்தில் அளித்தது. அதில், ஐ.ஐ.டி போன்ற உயர் கல்வி நிறுவனங்களிலும், நவோதயா பள்ளிகளுலும் இந்தி மொழியில் பயிற்றுவிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள், மத்திய அரசு இந்தியைத் திணிக்க முயற்சிப்பதாகக் கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. திமுக இளைஞரணி மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திமுக அரசு தீர்மானம்
தமிழக அரசு உடனடியாக இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றியது. தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த அக்டோபர் 18ஆம் தேதி இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்தி திணிப்புக்கு எதிரான தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது. அரசமைப்பு சட்டத்தின் கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு எதிரான, நம் நாட்டின் பன்மொழிக் கட்டமைப்பிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அளிக்கப்பட்டுள்ள இந்தப் பரிந்துரைகளை ஏற்கக் கூடாது என அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

பாஜக விமர்சனம்
இதற்கிடையே, பாஜக தலைவர்கள், இந்தி திணிப்பு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக விமர்சித்து வருகின்றனர். இந்தியை எதிர்க்கும், தமிழ் தான் எங்கள் உயிர் என பேசும் திமுக நிர்வாகிகள் நடத்தும் சி.பி.எஸ்.இ பள்ளிகளில், எத்தனை பள்ளிகளில் இந்தி பாடம் உள்ளது? இது இரட்டை வேடமாகத் தெரியவில்லையா என பாஜக மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ விமர்சித்தார். இந்நிலையில், பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று ட்விட்டரில் ஒரு பட்டியலை வெளியிட்டார்.

எச்.ராஜா வெளியிட்ட லிஸ்ட்
திமுகவினர் மற்றும், திமுக பிரமுகர்களின் குடும்பத்தினர் நடத்தும் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் இந்தி மொழியை கற்பிப்பதை விமர்சித்துள்ளார் எச்.ராஜா. "இவர்களை அடையாளம் காண்போம். சமச்சீர் கல்வி பள்ளி நடத்தாமல் இந்தி கற்றுக் கொடுக்கும் பள்ளி நடத்தும் இவர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்துவார்களாம். ஏமாற்று பேர்வழிகள். முதலில் இந்தப் பள்ளிகளை சமச்சீர் கல்விக்கான கூடங்களாக மாற்றும் துணிச்சலோ தமிழ் பற்றோ இவர்களுக்கு இருக்கிறதா?" எனக் கேள்வி எழுப்பினார் எச்.ராஜா.

திமுகவினர் நடத்தும் பள்ளிகள்
எச்.ராஜா வெளியிட்ட அந்தப் பட்டியல் பாஜகவிற்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் பள்ளி தொடங்கி, பல்வேறு மாவட்டங்களிலும் திமுகவினர் நடத்தும் பள்ளிகளை பெயர்களோடும், யார் அந்தப் பள்ளிகளுக்கு உரிமையாளர் என்றும் பட்டியலாக வெளியிட்டுள்ளார் எச்.ராஜா.

பாஜக மாவட்ட தலைவர்
அந்தப் பட்டியலில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகேயுள்ள அழகாபுரி போதி இண்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியையும் குறிப்பிட்டு, அதற்கு உரிமையாளராக காளையார்கோவில் முன்னாள் திமுக ஒன்றிய செயலாளர் மேப்பல் சக்தி பெயரையும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலை அப்படியே பகிர்ந்துள்ளார் எச்.ராஜா.

மேப்பல் சக்தி
எச்.ராஜா, திமுக பிரமுகர் எனக் குறிப்பிட்டுள்ள மேப்பல் சக்தி தற்போது சிவகங்கை மாவட்ட பாஜக தலைவராக இருக்கிறார். இத்தனைக்கும் எச்.ராஜாவின் சொந்த மாவட்டமே சிவகங்கை தான். சிவகங்கை மாவட்ட பாஜக தலைவராக இருக்கும் மேப்பல் சக்தியை, திமுக பிரமுகர் எனக் குறிப்பிட்டு எச்.ராஜா விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெட்டிசன்கள் கேள்வி
எச்.ராஜாவின் ட்விட்டர் பதிவுக்கு, "என்ன சார், உங்க கட்சியில் மேப்பல் சக்தி இருப்பது பிடிக்கவில்லையா? அவரையும் கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கிறீர்களே.." என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். பாஜக நிர்வாகி நடத்தும் பள்ளியையும் எச்.ராஜா லிஸ்ட் போட்டது லோக்கல் பாஜக நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications