ஒரு ஓட்டில் பெரிய கருப்பன் தோற்றது எப்படி.. மே 4 நள்ளிரவில் காரைக்குடி மையத்தில் என்ன நடந்தது?
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் திமுகவின் மிக முக்கியமான தலைவர் பெரிய கருப்பன். இவர் தான் திமுகவின் மாவட்ட செயலாளர்.. அமைச்சராகவும் இருந்து வருபவர்.. இவர் திருப்பத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளரிடம் ஒரு ஓட்டில் தோற்றது இந்தியா முழுவதும் பேசப்படுகிறது.. எப்படி நடந்தது.. நள்ளிரவில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணனின் தீவிர ஆதரவாளராக இருந்த பெரியகருப்பன் தி.மு.க.வில் அடிமட்டத்தில் இருந்து வந்தனர். கிளை, ஒன்றிய, மாவட்ட பொறுப்பு என படிப்படியாக மேலே வந்தவர்.. கடந்த 2006-ம் ஆண்டில் சட்டசபை தேர்தலில் களம் இறங்கினார். திருப்பத்தூர் தொகுதி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து நின்ற அ.தி.மு.க. வேட்பாளர் ஒப்பாக் கார்த்திகேயனை 17,873 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார். அப்போது சிவகங்கை மாவட்டத்திற்கு பிரநிதித்துவம் தரும் வகையில், அறநிலையத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.

2011ல் ஜெயித்தவர்
ஆனால் 2011-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. தோல்வி அடைந்து எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது. அப்போது தி.மு.க. சார்பில் பலரும் தோற்றுப்போனார்கள். எனினும் வெற்றி பெற்ற சிலரில் பெரியகருப்பணும் ஒருவர். அ.தி.மு.க. வேட்பாளர் ராஜகண்ணப்பனை 1584 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2016-ம் ஆண்டு தேர்தலில் தன்னை எதிர்த்து நின்ற அ.தி.மு.க. வேட்பாளர் அசோகனை 42,004 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார். 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மருது அழகுராஜை 37,374 ஓட்டுகள் வித்திசாயத்தில் திருப்பத்தூர் தொகுதியில் 4-வது முறையாக பெரியகருப்பன் வெற்றி பெற்றிருந்தார்.
தனிப்பட்ட செல்வாக்கு
2021-2026 தி.மு.க. ஆட்சியில் முதலில் ஊரக உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த பெரிய கருப்பன், அதன் பின்னர் கூட்டுறவு துறை அமைச்சராகவும் இருந்தார். இந்த தேர்தலில் 5-வது தொடர் வெற்றி பெறலாம் என திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என திமுகவினர் நம்பினார்கள், இங்கு அதிமுக நேரடியாக போட்டியிடவில்லை.. அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறன் போட்டியிட்டார். த.வெ.க. சார்பில் சீனிவாச சேதுபதி என்பவர் களம் கண்டார். இந்த தொகுதியில் மொத்தம் உள்ள 2,65,474 ஓட்டுகளில் 2,13,739 ஓட்டுகள் பதிவாகி இருந்தன.
பெரிய கருப்பன் முன்னிலை
நேற்று முன்தினம் காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் ஓட்டுகள் எண்ணப்பட்டன. காலையில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தி.மு.க. வேட்பாளரான பெரியகருப்பன் முன்னிலையில் இருந்து வந்தார். இதனால் திமுக ஆதரவாளர்கள் உற்சாகமாக இருந்தனர். எளிதாக வெற்றி பெறுவார் என நினைத்த அக்கட்சியினருக்கு நேரம் செல்ல செல்ல நிலைமை மாறியது. மொத்தம் 27 சுற்றுகளாக எண்ணப்பட்டன. 20-வது சுற்று வரை த.வெ.க. வேட்பாளர் சீனிவாச சேதுபதியை விட அமைச்சர் பெரியகருப்பன் சுமார் 5 ஆயிரம் ஓட்டுகள் முன்னிலையில் இருந்துள்ளார்.
வாக்குகள் மாறியது எப்போது
ஆனால், கடைசி கட்ட சுற்றுகளில் த.வெ.க. அதிக வாக்குகளை பெற்றது. எனவே தி.மு.க., த.வெ.க. இடையேயான ஓட்டு வித்தியாசம் குறைந்து கொண்டே வந்ததால் திமுகவினருக்கு திக் திக் நிமிடங்களாக மாறியது. 25-வது சுற்று நிலவரப்படி பெரியகருப்பன் 77,773 வாக்குகளும், சீனிவாச சேதுபதி 76,646 வாக்குகளும் பெற்றனர். அதாவது இருவருக்கும் இடையே 1,127 ஓட்டுகள்தான் வித்தியாசம். 26-வது சுற்றில் சீனிவாச சேதுபதி முந்தினார். அவர் 80,929 வாக்குகளும், பெரியகருப்பன் 80,730 வாக்குகளும் பெற்றிருந்தனர். இருவருக்கும் 199 வாக்குகள் வித்தியாசம் இருந்தது. இறுதி சுற்றான 27-வது சுற்றில் பெரியகருப்பன் 81,641 வாக்குகளும், சீனிவாச சேதுபதி 82,247 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
3 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்
அப்போது கீரச்சிவல்பட்டி, எஸ்.எஸ்.கோட்டை, ஆலம்பட்டி ஆகிய பகுதிகளுக்கான 3 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதாகி கிடந்தது. இதனால் ஏற்கனவே நிறுத்தி வைத்திருந்த தபால் வாக்குகளை எண்ணும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டார்கள். இதில் கிடைத்த ஓட்டுகளையும் சேர்த்தபோது சீனிவாச சேதுபதியை காட்டிலும் பெரியகருப்பன் 212 ஓட்டுகள் அதிகம் பெற்றிருந்தார். தபால் வாக்குகளில் பெரியகருப்பனுக்கு 1183-ம், த.வெ.க.வுக்கு 365-ம், செல்லாதவையாக 304-ம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
நள்ளிரவில் திக் திக்
இதற்கிடையே பழுதடைந்த எந்திரங்கள் சரிசெய்யப்பட்டு அதில் இருந்த ஓட்டுகளையும் எண்ணியபோது நள்ளிரவானது. நள்ளிரவில் திமுக மற்றும் தவெகவினரின் தூக்கம் தொலைந்தது. ஒவ்வொரு நொடியும் திக் திக் ஆக மாறியது. தி.மு.க. வேட்பாளர் பெரியகருப்பன், த.வெ.க. வேட்பாளர் சீனிவாச சேதுபதி ஆகியோர் ஆதரவாளர்களுடன் நின்று வாக்கு எண்ணிக்கை பரபரப்புடன் கவனித்து கொண்டிருந்தனர்.
ஒரு ஓட்டில் தோல்வி
இறுதியாக த.வெ.க. வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83,375 ஓட்டுகளும், தி.மு.க. வேட்பாளர் பெரியகருப்பன் 83,374 ஓட்டுகளும் பெற்றதாகவும், ஒரு ஓட்டு வித்தியாசத்தில் பெரியகருப்பன் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதனை ஏற்க அமைச்சர் பெரியகருப்பன் மறுத்தார். தி.மு.க.வினரும் கடைசியாக எண்ணிய 3 வாக்குப்பெட்டிகளில் உள்ள ஓட்டுகளை மீண்டும் எண்ண வேண்டும் என குரல் எழுப்பினர். அதன்பேரில் தேர்தல் அதிகாரிகள் அந்த 3 பெட்டிகளை மீண்டும் எண்ணினார்கள். அப்போதும் இருவர் பெற்ற வாக்குகளில் 1 ஓட்டு வித்தியாசத்தில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் முன்னிலை பெற்றது தெரியவந்தது.
கலெக்டர் அதிரடி
இதையடுத்து அங்கிருந்த பெரியகருப்பன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து இழுபறி நீடித்தது. அப்போது காரைக்குடி தொகுதி த.வெ.க. வேட்பாளர் டாக்டர் பிரபு வந்தார். அப்போது கைகலப்பாகும் சூழல் ஏற்பட்டது. அங்கு தவெகவிற்கு ஆதரவாக அதிமுக கூட்டணியில் வேட்பாளராக நின்ற திருமாறன் ஜியும் வந்தார். சூழல் பதற்றமாகவே இருந்தது. இறுதியாக சிவகங்கை கலெக்டர், த.வெ.க. வேட்பாளர் சீனிவாச சேதுபதி 1 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவித்து பிரச்சனையை முடித்து வைத்தார். அதன்பின்னர் தேர்தல் அதிகாரிகள் சான்றிதழ் வழங்கினர். இதையடுத்து பெரியகருப்பனும், தி.மு.க.வினரும் அந்த மையத்தில் இருந்து சோகத்துடன் வெளியேறினர். சீனிவாச சேதுபதியின் வெற்றிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர பெரிய கருப்பன் முடிவு செய்துள்ளார்.














Click it and Unblock the Notifications