சிவகங்கையில் மீண்டும் களம் காண விரும்பும் கார்த்தி சிதம்பரம்! தொகுதியில் தொடர்ந்து முகாம்!
சிவகங்கை: சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் திட்டத்தில் உள்ள கார்த்தி சிதம்பரம் எம்.பி., தொகுதியில் தொடர்ந்து முகாமிட்டு களப்பணிகளை கவனித்து வருகிறார்.
போதாகுறைக்கு தனது தந்தை ப.சிதம்பரத்தையும் சிவகங்கைக்கு அழைத்து வந்து கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி கதர்ச்சட்டையினரை உற்சாகம் கொள்ள வைக்கிறார். கடந்த நான்கரை ஆண்டுகளில் இல்லாத வேகமும், விறுவிறுப்பும் கார்த்தி சிதம்பரத்திடம் இப்போது தெரிகிறது.

சிவகங்கை மக்களவைத் தொகுதியை பொறுத்தவரை கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக காங்கிரஸ் வசம் உள்ள ஒரு தொகுதியாகும். தந்தை ப.சிதம்பரத்தை தொடர்ந்து மகன் கார்த்தி சிதம்பரம் அந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இதனால் இந்த மரபை சிறிதும் விட்டுக்கொடுக்க விரும்பாத கார்த்தி, வரும் தேர்தலிலும் மீண்டும் போட்டியிட ரெடி ஆகிவிட்டார். இடையே 2014ஆம் ஆண்டு மட்டும் தொகுதி அதிமுக வசம் சென்றது குறிப்பிடத்தக்கது.
சில வாரங்களுக்கு முன்னர் தான் காங்கிரஸ் நிர்வாகிகளை டெல்லிக்கு டூர் அழைத்துச் சென்று சுற்றிக்காட்டி அவர்களுடன் விருந்து சாப்பிட்டு நினைவுப் பரிசுகள் எல்லாம் கொடுத்து ஊருக்கு அனுப்பி வைத்தார். அப்போதே நாம் சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் மீண்டும் போட்டியிடும் எண்ணத்தில் இருப்பதை சுட்டிக்காட்டியிருந்தோம்.
இதனிடையே திமுக கூட்டணியில் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுமா என்பதே தெரியவில்லை. அதேபோல் இவருக்கு காங்கிரஸ் தலைமை சீட் கொடுக்குமா என்பது தான் இங்கே எழுந்துள்ள கேள்வியாகும். இருப்பினும் ப.சிதம்பரம் தனக்கிருக்கும் முழு செல்வாக்கையும் பயன்படுத்தி கார்த்திக்கு சிவகங்கையில் மீண்டும் சீட் வாங்கிக் கொடுத்துவிடுவார் எனக் கூறுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications