சிவன் உறையும் ஆலயம் காக்க எமனையும் சந்திக்க தயாரான மருது சகோதரர்கள்..221 வது நினைவு தினம்
சிவகங்கை: துப்பாக்கி, பீரங்கி, துரோகிகள் என புடைசூழ படை நடத்தி வந்த வெள்ளையர்களின் விலா எலும்பை நொறுக்கியவர்கள் மருது சகோதரர்கள். சிவன் உறையும் ஆலயம் காக்க எமனையும் சந்திக்க தயாராக இருக்கிறேன் என்று கூறி இந்து ஆலயங்கள் நிமிர்ந்து நிற்க என் உயிர் உரமாக அமையட்டும் என்று திருப்பத்தூரில் தனது உயிரையே நாட்டிற்காக கொடுத்தவர்கள் மருது சகோதரர்கள்.
சிவகங்கைச் சீமை மாவீரர்களான சின்னமருது பெரிய மருதுவின் 221 ஆம் ஆண்டு நினைவு தினம் அக்டோபர் 24ஆம் தேதி கனத்த இதயத்தோடு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த வீர நிகழ்வில் அனைத்து இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு நல அமைப்பின் சார்பில் மருது சகோதரர்களின் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
வணங்குதலுக்குரிய ஆன்மீகச் செம்மல் துளாவூர் ஆதீனம் ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் பெரிய மருதுவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தார். அனைத்து இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு நல அமைப்பின் மாநில தலைவர் திரு. கோவிந்தராஜ் அவர்களும் காரைக்குடி உங்கள் ஜோதிடர், கவிஞர் பெர்னாட்ஷா அவர்களும் சின்ன மருதுவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் அங்கிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றிய கவிஞர் பெர்னாட்ஷா மாவீரர்களான பெரிய மருது சின்னமருது ஆகியோரின் தியாக வரலாற்றை விரிவாக எடுத்துரைத்தார்.
மருது சகோதரர்கள் நினைவு தினம்.. சிவகங்கை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!

மருது சகோதரர்கள்
"ஆடுவோமே... பள்ளு பாடுவோமே... ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்" என்று மகாகவி பாரதியார் ஆனந்த கூத்தாடினார். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே இறுமாப்போடு இயற்றப்பட்ட இரும்பு வரிகள் இவை.
இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திர காற்றை பரிசளிக்க பல்லாயிரக்கணக்கான உயிர்கள் இந்திய மண்ணிலே விதையாக விழுந்து இருக்கின்றன என்று அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் குறிப்பிட்டார்.

சின்ன மருது பெரிய மருது
மேலும், அவற்றை எண்ணும்போதெல்லாம் இதயம் விம்முகின்ற வீரத்தின் விளைநிலமாக இருவர் இந்த தமிழக மண்ணிலே உருவெடுத்தனர். வியாபாரிகளாக வந்து இந்திய மண்ணை விழுங்கிய பரங்கியரின் உறக்கத்தை தொலைக்க வைத்த இருவர் பெரிய மருது சின்ன மருது என்ற மாவீரர்கள்.

வீரம் மிக்க சகோதரர்கள்
துப்பாக்கி, பீரங்கி, துரோகிகள் என புடைசூழ படை நடத்தி வந்த வெள்ளையர்களின் விலா எலும்பை நொறுக்கியவர்கள் இந்த மருது சகோதரர்கள். தமிழ்நாட்டில் விருதுநகர் அருகே முக்குலம் என்ற சிற்றூரில் பிறந்த பெரிய மருது வெள்ளை நிறத்தில் அவதரித்தார். அதனால் அவர் வெள்ளைமருது என்று அனைவராலும் அழைக்கப்பட்டார் என்று பெர்னாட்ஷா எடுத்துரைத்தார். பின்னர் இந்த பூமியில் அவதரித்த சின்னமருது பெரிய மருதுவை விட உயரத்தில் சற்று குறைந்தவர். அதனால் அவர் இளையமருது என எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்டார். வளரும்போதே வாள் வீச்சு, ஈட்டி எறிதல், களரி, குதிரை ஏற்றம் என போர்க்கலைகள் அனைத்திலும் சிறந்து விளங்கினர் என அவர் விவரித்தார்.

சிவகங்கை படைத்தளபதிகள்
வெள்ளையர்களின் வெண்கல நாணயத்தை விரல் இடுக்கில் வைத்து நசுக்கக்கூடிய ஆற்றல் இரு மருது சகோதரர்களுக்கு உண்டு. இது அந்தப் பகுதி மக்கள் அனைவரையும் வியக்க வைத்த வீரச்சான்று. மருது சகோதரர்களின் வீரம், சாணக்கியத்தனம், படை நடத்தும் லாவகம் அனைத்தையும் அறிந்த சிவகங்கை மன்னர் முத்து வடுகநாத தேவர் இவர்களை படைத்தளபதிகளாக நியமித்தார்.

வீர சிங்கங்கள்
சிவகங்கை சீமையை கைப்பற்ற முனைந்த வெள்ளையர்களை இந்த வீர சிங்கங்கள் விரட்டி அடித்தன.
ஒரு போரிலே வஞ்சகமாக முத்து வடுகநாத தேவர் கொல்லப்பட்டார். அதன் பிறகு வேலு நாச்சியார் பொறுப்பை ஏற்றார். விருப்பாச்சி காட்டிலே மறைந்து வாழ்ந்து ஏனைய மன்னர்களின் ஆதரவோடு வெள்ளையர்களை விரட்டி அடித்தனர் மருது சகோதரர்கள்.

சிவ பக்தி
வீரத்தால் வெல்ல முடியாது மருது சகோதரர்களை என அறிந்த வெள்ளையர்கள் இறுதியாக காளையார் கோவில் கோபுரத்தில் கண் பதித்தனர். காளையார் கோவில் சொர்ண காளீஸ்வரர் மீது அளவற்ற பக்தி கொண்டவர்கள் மருது சகோதரர்கள். ஒவ்வொரு தினமும் காளீஸ்வரரை வழிபட்ட பின்பு தான் அரசு காரியங்களை தொடங்குவார்கள். இந்த பக்தியை கடைசி ஆயுதமாக கையில் எடுத்தனர் வெள்ளையர்கள்.

மருது சகோதரர்களுக்கு தூக்கு
மறைந்திருக்கும் மருது சகோதரர்கள் சரணடையவில்லை என்றால் காளையார் கோவிலை இடித்து தரைமட்டமாக்கி விடுவோம் என்று பறை அறிவித்தனர். சிவன் உறையும் ஆலயம் காக்க எமனையும் சந்திக்க தயாராக இருக்கிறேன்.
இந்து ஆலயங்கள் நிமிர்ந்து நிற்க என் உயிர் உரமாக அமையட்டும் என்று திருப்பத்தூரில் தன்னுயிர் ஈந்தனர் பெரிய மருதும் சின்ன மருதும். 1801 ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி பெரியமருது, சின்னமருதுவின் தேக்கு மர உடல்கள் தூக்கு மரத்தை அலங்கரித்தன என கண்ணீர் மல்க சொன்னார்.

வீர வரலாறு
அடுத்து பேசிய அனைத்து இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு நல அமைப்பின் தலைவர் திரு. கோவிந்தராஜ், வீரத்திற்கும் தியாகத்திற்கும் ஆலயம் காக்கின்ற அரும் பணிக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர்கள் மருது சகோதரர்கள். அத்தகைய மாவீரர்களின் வீர வரலாற்றை எதிர்காலத்தில் தமிழ் பிள்ளைகள் பள்ளி பாடமாக பயில வேண்டும் என்பதே எங்களின் தணியாத ஆசை. அதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை தாழ்மையோடு வேண்டிக் கொள்கிறேன் என்று திரு. கோவிந்தராஜ் குறிப்பிட்டார்.

221 ஆம் ஆண்டு நினைவு தின அஞ்சலி
திருப்பத்தூர் வட்டாட்சியர் உட்பட அங்கு இருந்த முக்கிய பிரமுகர்களும் அஞ்சலி செலுத்த வந்தவர்களும் துளாவூர் ஆதீனம் ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரியார் சுவாமிகளிடம் விபூதி பிரசாதம் பெற்றனர். சுமார் 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்து எந்த விதமான அசம்பாவிதமும் நடைபெறாமல் அஞ்சலி நிகழ்ச்சியை நேர்த்தியாக நிறைவு செய்தனர். அவர்களுக்கு அனைத்து இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு நல அமைப்பு தலைவர் திரு. கோவிந்தராஜ் அவர்கள் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தார்.