நல்ல ஸ்ட்ராங்கா 2 டீ... ஒரு பிளேட் ஆனியன் பக்கோடா... எதிர் எதிர் துருவங்களை இணைத்த பேக்கரி..!
சிவகங்கை: எதிர் எதிர் துருவங்களாக வலம் வந்த இரண்டு அமைச்சர்கள் ஒன்றாக அமர்ந்து தேநீர் அருந்தி உள்ளூர் அரசியல் குறித்து பேசிய விவகாரம் சிவகங்கை மாவட்ட உடன்பிறப்புகளை புருவம் உயர்த்த வைத்துள்ளது.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பனும், போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனும் கடந்த வாரம் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள பேக்கரி ஒன்றில் சந்தித்து பேசிக்கொண்டனர்.
அமைச்சர்கள் இருவர் சந்தித்து பேசிக் கொள்வதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது எனக் கேட்கத் தோன்றலாம். ஒரு உரையில் இரண்டு வாள் கதை தான் இதற்கு பொருந்தும்.

சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை திமுகவின் முகவரியாக அறியப்பட்டவர் த.கிருட்டினன். இவரது படுகொலைக்கு பிறகு சிவகங்கை மாவட்ட திமுக செயலாளராக பெரியகருப்பன் நியமிக்கப்பட்டார். கிருட்டினன் கொலை நிகழ்ந்த காலகட்டத்தில், இந்தப் பொறுப்புக்கு துணிச்சல்மிக்க ஒருவரை நியமிக்க வேண்டும் என எண்ணிய கருணாநிதி பெரியகருப்பனை தேர்வு செய்தார். சென்னையில் பிஸினஸ் செய்துகொண்டிருந்த பெரியகருப்பன், கட்சிப்பொறுப்பு கிடைத்த பிறகு சிவகங்கை மாவட்டத்தில் தங்கத் தொடங்கினார்.

ஏழாம் பொருத்தம்
இந்நாள் போக்குவரத்துத்துறை அமைச்சரான ராஜகண்ணப்பன் அதிமுகவில் இருந்தபோது, அவரை எதிர்த்து தீவிர அரசியல் செய்து வந்தார் பெரியகருப்பன். இவர்கள் இருவருக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வந்தது. போட்டி போட்டு ஒருவருக்கு ஒருவர் திமுக, அதிமுகவை மாவட்டத்தில் வளர்த்துகொண்டிருந்தனர். இப்படி ஒருவரை ஒருவர் எதிர்த்து அரசியல் செய்துகொண்டிருந்த சூழலில், ராஜகண்ணப்பன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு திமுகவில் ஐக்கியமானார்.

முதுகுளத்தூர்
இருப்பினும் ராஜகண்ணப்பனுக்கும், பெரியகருப்பனுக்கும் டேர்ம் ஒத்துப் போகாததை அறிந்த திமுக தலைமை, சட்டமன்றத் தேர்தலில் ராஜகண்ணப்பனை ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு அனுப்பி வைத்தது. அங்கு வெற்றி பெற்ற அவருக்கு ராமநாதபுரம் மாவட்ட பிரதிநிதியாக அமைச்சரவையில் போக்குவரத்துத்துறையை ஒதுக்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

புதிய பேருந்து
அருகாமை மாவட்டத்தில் அமைச்சர் என்கிற முறையில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாலும் கூட, தனது சொந்த மாவட்டமான சிவகங்கை மாவட்டம் மீது ராஜகண்ணப்பனுக்கு தனிப்பாசம் இருந்து வந்தது. இதனிடையே பேருந்து புதிய வழித்தட திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக பலமுறை சிவகங்கை மாவட்டத்திற்கு அவர் வந்திருந்தாலும், உள்ளூர் அமைச்சரான பெரியகருப்பன் அந்த நிகழ்ச்சி நடக்கும் பக்கமே தலைகாட்டமாட்டார்.

பங்கேற்கவில்லை
இதேபோல் கடந்த வாரம் அமைச்சர் பெரியகருப்பனின் சொந்த தொகுதிக்குட்பட்ட சிங்கப்புணரியில் நடைபெற்ற அரசுப் பேருந்து புதிய வழித்தட துவக்க விழாவில் ராஜகண்ணப்பன் கலந்துகொண்டார். பொதுவாக வெளியூர் அமைச்சர்கள் வருகிறார்கள் என்றால் அந்த மாவட்ட அமைச்சர் உடனிருப்பது வழக்கம். ஆனால் அந்த நிகழ்வில் தொகுதியின் எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான பெரியகருப்பன் பங்கேற்கவில்லை. இது ராஜகண்ணப்பன் தரப்பை வருத்தம் கொள்ளச் செய்தது. விழா முடிந்து ராஜகண்ணப்பன் அங்கிருந்து புறப்பட்ட சிறிது நிமிடத்தில் அவருக்கு எதிராக அமைச்சர் பெரியகருப்பனின் கார் வந்திருக்கிறது.

நேருக்கு நேர்
இதையடுத்து இரண்டு அமைச்சர்களும் காரை நிறுத்தி கீழிறங்கி வணக்கம் தெரிவித்த நிலையில், உள்ளூர் கட்சிக்காரர்கள் டீ சாப்பிடுங்க எனக் கூறி பேக்கரிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கு சூடாக ஒரு பிளேட் ஆனியன் பக்கோடா மற்றும் ஸ்ட்ராங்காக 2 டீ ஆர்டர் செய்துவிட்டு, சிரித்த முகத்துடன் ஒருவருக்கு ஒருவர் சுமார் 15 நிமிடம் வரை பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். இதனை ஆச்சரியம் விலகாமல் அங்கு பார்த்துக் கொண்டிருந்த உ.பி.க்கள், காலச்சக்கரம் எப்படியெல்லாம் சுழல்கிறது பாருங்கள் என தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications