அஜித் குமார் கொலை வழக்கில் புதிய ட்விஸ்ட்.. போலீஸ் வாகனத்தில் போலி நம்பர் பிளேட்.. பரபர தகவல்
சிவகங்கை: திருப்புவனம் அஜித் குமார் மரண வழக்கினை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். இன்று காலை முதல் பல்வேறு தீவிரமாக விசாரித்து வரும் நிலையில், தற்போது வழக்கில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அஜித் குமார் இறப்பதற்கு முன்பு அவரை விசாரணைக்காக போலீசார் அரசுக்கு சொந்தமான டெம்போ வாகனத்தில் அழைத்து சென்றனர். அந்த வாகனத்தில் 2 நம்பர் பிளேட்கள் இருப்பதை சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோவிலில் காவலாளியாக வேலை பார்த்து வந்தவர் அஜித் குமார் (வயது 28). கடந்த மாதம் 27 ஆம் தேதி மடப்புரம் கோவிலுக்கு வந்த விருதுநகரை சேர்ந்த பேராசிரியை நிகிதா என்பவர் தனது தாயின் 10 சவரன் நகைகளை காணவில்லை என்பதால் அஜித் குமார் மீது சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் அஜித் குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது காவல்துறையினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. கை திருட்டு வழக்கின் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அஜித் குமாருக்கு தண்ணீர் கூட கொடுக்காமல் பிறப்புறுப்பில் மிளகாய் பொடி போட்டு சித்ரவதை செய்திருக்கின்றனர். அவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் மட்டும் 44 காயங்கள் உடலில் இருந்தது தெரிய வந்தது.
உடல் முழுவதும் பலத்த காயங்கள் இருந்ததும், இது சாதாரண மரணம் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. அஜித் குமாரை காவல்துறை மருத்துவமனைக்குக் கொண்டு வந்தபோதே அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாகத் திருப்புவனம் அரசு மருத்துவர் கார்த்திகேயன் மாவட்ட நீதிபதியிடம் சாட்சியம் அளித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய தனிப்படை காவல்துறையினரான பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகிய 5 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதன்படி தற்போது சிபிஐ இந்த வழக்கை கையில் எடுத்துள்ளது. இன்று காலையில் இருந்து அஜித் குமார் வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வந்தனர். திருப்புவனம் கோவில், காவல் நிலையம் மற்றும் கோவிலின் பின்புறத்தில் அஜித் குமாரை தாக்கிய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் தான் சிபிஐ அதிகாரிகள் விசாரணையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது அஜித் குமாரை போலீசார் போலீஸ் டெம்போ வாகனத்தில் அழைத்து சென்ற வாகனத்தில் ஆய்வு செய்தனர். அப்போது அந்த வாகனத்தில் இரு வேறு நம்பர் பிளேட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த வாகனத்தில் காலியான மதுபாட்டில்களும் கிடந்தன. எதற்காக இரு நம்பர் பிளேட்கள் அந்த வாகனத்தில் இருந்தது என்பது குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications