இரும்பு சேரால் அரசு அதிகாரியை தாக்க முயற்சி.. சிவகங்கை திமுக நிர்வாகி கைது! கேரளாவில் வளைத்த போலீஸ்
சிவகங்கை: சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குள் நுழைந்து உதவி பெண் பொறியாளரை இரும்பு சேரை தூக்கி திமுக பிரமுகரும், ஒப்பந்ததாரருமான முருகன் அடிக்க பாய்ந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக பிரமுகரை கைது செய்ய அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கேரளாவில் தலைமறைவான திமுக பிரமுகரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் சித்தலூரை சேர்ந்தவர் முருகன். திமுக பிரமுகர். இவர் திமுகவில் ஒன்றிய துணை செயலாளர் பதவியில் உள்ளார். மேலும் ஒப்பந்ததாரராக அரசு பணிகளை எடுத்து செய்து வருகிறார். இந்நிலையில் தான் பெருங்குடி ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை போடும் பணியை முருகன் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தான் சிமெண்ட் சாலை பணி முடிந்து விட்டது எனக்கூறி அவர் பணத்தை விடுவிக்கும்படி சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவி பொறியாளர் கிருஷ்ணகுமாரியிடம் கேட்டார். கடந்த 26ம் தேதி கிருஷ்ணகுமாரியை, முருகன் சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேரில் சந்தித்தார்.
இந்த சமயத்தில் தனக்கான ஒப்பந்த தொகையை விடுவிக்கும்படி முருகன் கூறியுள்ளார். ஆனால் அவர் எந்த ஆவணங்களையும் எடுத்து செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆவணங்களை எடுத்து வரும்படி உதவி பொறியாளர் கிருஷ்ணகுமாரி கூறியுள்ளார். அப்போது கோபமான முருகன், அங்கிருந்த இரும்பு சேரை எடுத்து கிருஷ்ணகுமாரியை தாக்க முயன்றார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியானது. திமுக பிரமுகரான முருகனை பலரும் கண்டித்தனர். மேலும் இந்த சம்பவத்தை கண்டித்தும், அரசு அதிகாரியை அலுவலகம் புகுந்து தாக்க முயன்ற திமுக பிரமுகர் முருகனை கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் முருகன் மீது சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் கிருஷ்ணகுமாரி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் முருகன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதுபற்றி அறிந்த முருகன் எஸ்கேப் ஆனார். போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து அவர் தலைமறைவானார். அவரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் தான் கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் இருந்தவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications