சிவகங்கையில் சர்ப்ரைஸ்.. 20 வருடம் கழித்து சிங்கம்புணரி கோயிலில் ஆச்சரியம்.. மகிழ்ச்சியில் பக்தர்கள்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நடந்த திருவிழா இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இதற்கு என்ன காரணம்? பக்தி என்று வந்துவிட்டால், அனைத்துவிதமான தடைகளும், பிணக்குகளும், வேறுபாடுகளும் களையப்பட்டுவிடுகின்றன.. அந்தவகையில், சிஙகம்புணரி அய்யனார் கோயிலிலும் ஒரு ஆச்சரியம் நடந்துள்ளது.. இதையடுத்துதான், இணையத்தில் பலரது கவனத்தையும் இந்த திருவிழா பெற்றுவருகிறது. என்ன நடந்தது கோயில் விழாவில்?
சிவங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்துள்ள எஸ்.புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது கே.புதுப்பட்டி.. இங்கு மலையாள சாத்தையா அய்யனார் என்ற கோவில் மிகவும் புகழ்பெற்ற கோயிலாகும்.. இதனால், சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து இந்த கோயிலுக்கு ஏராளமானோர் வந்து செல்வது வழக்கமாகும்.

அதேபோல, ஸ்ரீவில்லியார், அய்யனார் சுவாமிகள் அருள்பாலித்து வரும் இந்த கோவிலில் பங்குனி பொங்கல் விழா நடத்தப்படுவதும் வாடிக்கையான ஒன்றாகும். ஆனால், இந்த திருவிழாவை நடத்துவது தொடர்பாக ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களிடையே நிறைய போட்டிகளும், பிரச்சனைகளும் வெடித்திருக்கிறது.. இதனால் கடந்த 20 வருடங்களாகவே, இந்த கோயிலில் பங்குனி பொங்கல் விழா நடத்தப்படாமலேயே இருந்தது.
பாரம்பரிய முறைப்படி திருவிழா
நோய்கள் நீங்கும், விவசாயம் செழிக்கும், இன்னல்கள் தீரும் என்பதால்தான், அந்தந்த கிராமங்களிலுள்ள கோயில்களில் விழாக்கள் எடுக்கப்படுகின்றன.. ஆனால், கே.புதுப்பட்டி அய்யனார் கோயிலில் பங்குனி பொங்கல் விழா 20 ஆண்டுகளாக நடத்தாததால், கிராம மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு ஒரேவழி, பகையை மறந்து பாரம்பரிய முறைப்படி இந்த ஆண்டு திருவிழா கோலாகலமாக நடத்துவது என்று அனைவரும் சேர்ந்து முடிவெடுத்தார்கள்.
அதன்படி, 20 ஆண்டு பகையை மறந்து, ஊரே ஒன்றுசேர்ந்து பங்குனி பொங்கல் விழாவை கோலாகலமாக நடத்தியிருக்கிறார்கள்.. முன்னதாக, மலையாள சாத்தையா அய்யனார் கோவில் அருகே உள்ள செவந்தான் ஊரணியில், ஆண்கள் அனைவரும் மேலாடை இல்லாமல் புனித நீராடினார்கள்..

குளத்தில் மூழ்கி குளித்த ஆண்கள்
ஏனென்றால், இவர்களுக்குள் பகை ஏற்பட்ட போது ஒருவரையொருவர் சபித்து கொண்டார்களாம், சாபம் விட்டுக் கொண்டார்களாம். அந்த சாபம் நீங்குவதற்காக கிராமத்தினர், செவந்தான் குளத்தில் புனித நீராடினார்கள். அப்போது ஆண்கள் மேலாடை இல்லாமல் வரிசையாக கைகளை கட்டிக்கொண்டு நின்றவாறு புனித நீராடி 108 முறை 4 திசைகள் நோக்கி பூமியை தொட்டு கும்பிட்டனர்.
இதையடுத்து, 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பாரம்பரிய முறைப்படி வரிசையாக தலையில் பொங்கல் கூடை சுமந்து ஊரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மலையாள சாத்தையா அய்யனார் கோவிலை வந்தடைந்தனர்.
நம்பிக்கையில் காத்திருக்கும் மக்கள்
அங்கு அனைவரும் சேர்ந்து பொங்கல் வைத்தார்கள். பிறகு, ஸ்ரீவில்லியார் சுவாமிக்கு மஞ்சிகள் கட்டிய பசுமாடுகள் காளைகள் ஆங்காங்கே வயல்வெளிகளில் அவிழ்த்து விடப்பட்டன. அதுமட்டுமல்ல, மத நல்லிணத்தித்திற்கு அடையாளமாக கரிசல்பட்டி இஸ்லாமியர்கள் அய்யனார் கோவிலுக்கு இந்து பாரம்பரிய முறைப்படி தேங்காய், பழம், தலைவாழை இலை சீர் எடுத்து வந்து, பூசாரியிடம் வழங்கினார்கள்..

இந்த பங்குனி பொங்கல் விழாவில், கிராம மக்களுடன், பரம்பரை அறங்காவலர்கள், அனைத்து கோவில் பூசாரிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.. பகைமையை மறந்து, 20 ஆண்டுகளுக்கு பிறகு பங்குனி பொங்கல் திருவிழா நடந்துள்ளதால் வரும் காலங்களில் தங்கள் கிராமம் செழிக்கும், இன்னல்கள் தீரும் என்று பெருத்த நம்பிக்கையில் கிராம மக்கள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications