ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா..கறி விருந்து சாப்பிட்ட இலையை எடுக்கும் பெண்கள்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே 100 ஆடுகளை பலியிட்டு ஆண்கள் மட்டும் உண்ணும் அசைவத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
சிவகங்கை:மானாமதுரை அருகே 100 ஆடுகளை பலியிட்டு ஆண்கள் மட்டும் உண்ணும் அசைவத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ஆண்கள் பங்கேற்று கறிவிருந்து சாப்பிட்டனர். ஆண்கள் சாப்பிட்ட பின் காய்ந்த இலையை பெண்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்பது சடங்காக உள்ளது.
Recommended Video
இளையான்குடி காவனூரில் வைகாசி மாதத் திருவிழாவின்போது, கிடா வெட்டி படையலிட்டால் விவசாயம் செழிக்கும் எனக் கருதி அப்பகுதி மக்கள் வினோத திருவிழாவை நடத்துகின்றனர்.

அதன்படி வெள்ளிக்கிழமையன்று இரவு நூற்றுக்கணக்கான ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றிய பின் அந்த கறியை சமைத்து காவனூர் கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டும் அசைவ உணவை சாப்பிட்டனர்.
இதையடுத்து ஆண்கள் சாப்பிட்ட பின் காய்ந்த இலையை பெண்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்பது சடங்காக உள்ளது.
இதே போல சிவகங்கை அருகே உள்ள திருமலை கிராமத்தில் உள்ள கண்மாய் கரையில் உள்ள காவல் தெய்வம், மடை கருப்பசாமிக்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெற்ற திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கிடா வெட்டு திருவிழா நடைபெற்றது. இந்தாண்டு நடைபெற்ற திருவிழாவில் கருப்பசாமிக்கு 500 ஆடுகள் பலிகொடுத்து, ஆட்டுத்தலைகளை கருப்பசாமிக்கு பக்தர்கள் படையலிட்டனர். பின்னர் பிரம்மாண்ட பாத்திரங்களில் அதிகாலையிலேயே கறி விருந்து தயாரித்து, சாமிக்கு சிறப்பு பூஜை செய்தபின், அசைவ உணவு பரிமாறப்பட்டது. திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள் அசைவ உணவை ஆர்வத்துடன் சாப்பிட்டனர்.
இதே போல திருப்பரங்குன்றம் அருகே உள்ள உச்சிக் கருப்பணசாமி கோவிலில் ஆண் பக்தர்கள் மட்டும் திரண்டு இருந்து சுவாமிக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளை படைத்து வழிபட்ட வினோத திருவிழா நடைபெற்றது. உருவமில்லா கோவில் திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் செல்லும் வழியில் உச்சிக் கருப்பணசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சுாமிக்கு உருவம் கிடையாது. ஆனால் பெரிய அளவில் 2 கல்தூண்கள் கருவறையாக அமைந்து உள்ளது. அதன் மையத்தில் சுமார் 5 அடி உயரம் உள்ள 2 அரிவாள் உள்ளது. மேலும் காற்று ஓசைக்கு ஒலித்து கொண்டே இருக்ககூடிய ஏராளமான மணிகள் உள்ளன.
இந்த கோவிலில் பாரம்பரியமாக தொன்று தொட்டு ஆண் பக்தர்கள் மட்டுமே வழிபட்டு வருகிறார்கள். கோவிலுக்கு வந்து செல்லக்கூடிய ஒவ்வொரு பக்தரும் அவரவர் நெற்றியில் விபூதியை பூசிக் கொள்கிறார்கள். அதே சமயம் கோவிலை விட்டு வெளியேறும்போது நெற்றியில் பூசிய விபூதியை அழித்துவிட்டு செல்கிறார்கள். மேலும் பெண்கள் கண்களுக்கு தெரியக்கூடாது என்பதால் சாமிக்கு படைக்க கூடிய பழங்களை கோவிலை விட்டு வெளியே கொண்டு செல்லக்கூடாது.
இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமை அன்று கனிகள் மாற்றும் திருவிழா தொன்றுதொட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றம் பெரியரத வீதியில் உள்ள சாமிபெட்டி இருக்கும் இடத்தில் இருந்து ஆயிரக்கணக்கான வாழைப் பழங்கள், மாம்பழங்கள் மற்றும் பலாப்பழங்கள் ஆகிய முக்கனிகளை ஒரு டிராக்டரில் வைத்து ஊர்வலமாக புறப்பட்டு உச்சிக்கருப்பணசாமி கோவிலுக்கு கொண்டு வந்தனர். சிறப்பு பூஜை பின்னர் உச்சிக்கால வேளையில் சாமிக்கு குவியலாக முக்கனிகள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. மேலும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண் பக்தர்கள் திரண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் பழங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications