பத்தாம் வகுப்பில் சாதனை..493 மார்க் வாங்கிய ஆட்டோ டிரைவர் மகள்..479 மார்க் பெற்ற கார் டிரைவர் மகள்
சிவகங்கை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. வறுமையான சூழ்நிலையிலும் பல மாணவிகள் சாதித்துள்ளனர். ஆட்டோ ஓட்டுநர் மகள் ஒருவர் சிவகங்கை மாவட்டத்தில் அரசு பள்ளியில் படித்து 493 மதிப்பெண் படித்து மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார். சென்னை அசோக்நகரில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி 479 மதிப்பெண் பெற்றுள்ளார். இவர் கார் டிரைவரின் மகளாவார்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் 91.39% பேர் தேர்ச்சி அடைந்துள்ள நிலையில் மாணவர்களை விட மாணவியர் 6.50 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.66%, மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.16% ஆகவும் பதிவாகியுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 8,35,614 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இதில் 4,04,904 பேர் மாணவர்கள், 4,30,710 பேர் மாணவிகள் ஆவர். வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்திலும் ராணிப்பேட்டை மாவட்ட மாணவர்கள் கடைசி இடத்தையும் பிடித்துள்ளனர்.
பல மாணவ மாணவிகள் கஷ்டமான சூழ்நிலையிலும் படித்து சாதனை படைத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அரசுப் பள்ளியில் படித்த ஆட்டோ ஓட்டுனரின் மகள் 10ம் வகுப்பு அரசு பொது தேர்வில் மாவட்டத்தில் 493 மதிப்பெண் பெற்று முதல் இடம்பிடித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நீயூ வசந்த நகரில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநர் விஜயக்குமார் மற்றும் ஜெகதா தம்பதியினர் மகள் இலக்கியா மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வியில் படித்து வந்தார். இன்று 10வகுப்பு தேர்வு முடிவு வெளியாகி உள்ளது. இதில் 500க்கு 493 மதிப்பெண்கள் பெற்று சிவகங்கை மாவட்டத்திலேயே முதலிடம் பெற்றுள்ளார். இதில் தமிழ்-98 ஆங்கிலம்-98, கணிதம்- 100 அறிவியலில் 100 மற்றும் ஆகிய சமூக அறிவியல்- 97 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் மகிழ்ச்சியுடன் பேசிய இலக்கியா, கணிதம், அறிவியல் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. உயர்கல்வியில் வேளாண்மை படிக்க விரும்புவதாகவும், ஐஏஎஸ் அதிகாரியாவது தனது விருப்பம் என்றும் கூறியுள்ளார்.
இதே போல சென்னையில் கார் டிரைவர் மகள் ஒருவர் 500க்கு 479 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். சென்னை அசோக்நகரில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்துவருகிறார் மாணவி காவ்யா. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 479 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதலிடம் பிடித்துள்ளார். கார் டிரைவரின் மகளான எனக்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடிக்க வேண்டும் என நினைத்தேன். நான் பள்ளியில் முதல் மதிப்பெண்கள் பெற வேண்டும் என அப்பா தொடர்ந்து உற்சாகப்படுத்தி வந்தார். இன்று எனது தந்தையின் ஆசையை நிறைவேற்றியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு கல்லூரி பேராசிரியர் ஆக வேண்டும் என்கிறார் காவ்யா.












Click it and Unblock the Notifications