கரூர் போனால் உயிருக்கு ஆபத்துனு விஜய்க்கு பயம்! அதான் போகலை! மீண்டும் சொன்ன நயினார் நாகேந்திரன்
சிவகங்கை: கரூர் சென்றால் விஜய் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவர் பயத்தில் அங்கு செல்லாமல் இருந்திருக்கலாம் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே இதே பதிலை அவர் முன்பும் தெரிவித்த போது முன்னால் தலைவர் அண்ணாமலையோ, "தமிழகத்தில் யாரு வேண்டுமானாலும் எங்கும் செல்லலாம். கரூர் பாதுகாப்பான ஊர்" என தெரிவித்திருந்தது நயினாருக்கு பதிலடியாக பார்க்கப்பட்டிருந்தது.
விடுதலை போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் குருபூஜையையொட்டி, இன்று சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் அவர்களது நினைவிடத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் எச்.ராஜா, கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சிவகங்கையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில், பாஜக விடுதலை போராட்ட வீரர்களை மதித்து, அவர்களின் பெருமையை வெளியே கொண்டு வர நடவடிக்கை எடுக்கிறது.
41 உயிர்களுக்கு கரூரில் பாதுகாப்பில்லாமல் போய்விட்டது. அந்த வகையில் விஜய்யின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. எனவே கரூருக்கு சென்றால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற பயத்தில் விஜய் கரூர் செல்லாமல், பாதிக்கப்பட்டவர்களை மாமல்லபுரத்திற்கு வரசொல்லியிருக்கலாம்.
மருது சகோதரர்கள் நினைவிடத்தில் வைத்து உறுதியளிக்கிறேன் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். திமுக அரசு மக்கள் விரோதமாக இருப்பதால், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்.
இந்த ஆட்சியில் கூட்ட நெரிசலில் 41 பேர், கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் என தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. எங்கு பார்த்தாலும் பாலியல் வக்கிரங்கள் நடக்கின்றன. 10 வயது குழந்தை கூட சாலையில் தனியாக நிற்க முடியவில்லை. காவல் நிலையங்களில் பெட்ரோல் குண்டு வீசுகிறார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை.
எனவே திமுக என்ன வேண்டுமானாலும் சொல்லும். ஆனால் வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். ஒவ்வொரு தலைவரும் அவரது கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என விரும்புவார்கள். ஆனால் நாட்டு மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என முடிவு செய்வார்களோ அவர்கள்தான் வெற்றி பெற போகிறார்கள் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், "விஜய் கரூருக்கு சென்றால் மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்படும். அப்போது அவர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது? கரூர் சென்றால் விஜய் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. 41 பேரை அடித்து மிதித்துக் கொன்றிருக்கிறார்கள். அவரையும் எதுவும் செய்துவிடக் கூடாது என்பதற்காக உயிருக்கு பாதுகாப்பு என்ற அடிப்படையிலேயே காவல்துறை பாதுகாப்பு கேட்டிருக்கிறார். காவல்துறையிடம் மனு செய்திருக்கிறார்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாய் அம்சவேணி காலமானதை அடுத்து துக்கம் விசாரிக்க வந்திருந்த அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் செல்ல உரிமை இருக்கிறது. இதை பெரிதுபடுத்தி எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை டிஜிபி அலுவலகத்தில் அனுமதி கேட்டு செல்ல வேண்டிய நிலை தமிழ்நாட்டில் இல்லை என நினைக்கிறேன்.
கரூர் பாதுகாப்பான ஊர். விஜய், கரூருக்கு வரவேண்டும் என்று நினைத்தால் வரலாம். நான் அந்த ஊர்க்காரன் தான்; எங்கள் ஊருக்கு தாராளமாக வரலாம். முதல்வர் தொடங்கி கமல்ஹாசன் வரை எல்லோரும் வந்துள்ளனர். எங்கள் ஊருக்கு வந்து மக்களை சந்திக்கலாம். யாரைப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்களை நீங்கள் பார்க்கலாம். கரூருக்கு போவதே அச்சுறுத்தல் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டாம்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications