89 வயதில் சர்வதேச தடகள வீரர்! தினம் 16கிமீ நடைப்பயிற்சி? யார் இந்த ரியல் இந்தியன் தாத்தா?
சிவகாசி: 89வயது தாத்தா ஒருவர் தடகளப் போட்டியில் சர்வதேச அளவில் பங்கேற்றுப் பல பதக்கங்களைப் பெற்று வருகிறார். இவர் ஒரு நாளைக்கு 16 கிமீட்டர் நடைப்பயிற்சி செய்து வருவதாகக் கூறி பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.
பத்து வயது பிள்ளைகளே இந்தக் காலத்தில் நடந்து போனால் கால் வலிக்கிறது என்கிறார்கள். தெரு முனையில் உள்ள டீக்கடைக்கு கூட ஆட்டோவை அழைக்கிறார்கள். ஆனால், தள்ளாத வயதில் தாத்தா ஒருவர் சர்வதேச தடகளப் போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்று வந்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? சிவகாசியைச் சேர்ந்த இந்தத் தாத்தாவுக்கு 89 வயதாகிறது. இன்னும் 10 ஆண்டுகள் முடிந்தால் 100 ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கிறார். சிவகாசியைச் சேர்ந்த இவர் தடகள வீரராக வலம் வருவதைப் பார்த்து அந்த ஊர் மக்கள் அதிசயத்து போய் நிற்கின்றனர்.

இந்த ரியல் இந்தியன் தாத்தாவின் பெயர் ராஜேந்திரன். இவருக்கு மூன்று மகள் உள்ளனர். அத்தனைப் பேருக்கும் கல்யாணம் செய்து வைத்து தனது கடமைகளைச் சரியாக முடித்துவிட்ட நிம்மதியில் வாழ்ந்துவரும் இவருக்கு நான்கு பேத்திகளும் இரண்டு பேரன்களும் இருக்கிறார்கள். ஒரு காலத்தில் சிவகாசியில் தொழிலதிபர் என்ற அடையாளத்துடன் வலம் வந்த இவர், இப்போது தடகள வீரராக வீதிகளில் வலம் வந்துகொண்டிருக்கிறார். இன்றைய இளம் தலைமுறைக்கு இவர்தான் இந்தியன் தாத்தா.
இந்த வயதிலும் எப்படி இப்படி ஒரு உற்சாகம்? அதற்கு அவரே பதில் வைத்திருக்கிறார். அதாவது கடந்த 2010-ம் ஆண்டு சிவகாசியில் நடைபெற்ற 42கிமீட்டர் மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் தற்செயலாகக் கலந்து கொண்டுள்ளார். அதுவே இவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்துவிட்டது என்கிறார். அதன்பின்னர் இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் 145 இடங்களில் நடைபெற்ற போட்டிகளில் இதுவரை இவர் பங்கேற்றுள்ளார். இவரைப் பற்றி வெளிநாட்டு ஆங்கில ஸ்போர்ட்ஸ் பத்திரிகைகளில் முழுப்பக்க கட்டுரைகள் எல்லாம் வந்திருக்கின்றன. தமிழ்நாட்டில்தான் தாத்தா தாமதமாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறார்.

அடுத்த மாதம் ஸ்வீடன் நாட்டில் நடைபெற உள்ள தடகள போட்டியில் இந்தியாவிலிருந்து 20 பேர் கலந்துகொள்ள இருக்கிறார்கள். அதில் தமிழ்நாட்டிலிருந்து இந்தத் தாத்தாவும் போய் கலந்து கொள்ள இருக்கிறார். தனது வீர தீரச் சாகசங்கள் பற்றி ராஜேந்திரன் பேசும் போது, "ஒருவர் என்னதான் உடற்பயிற்சி செய்தாலும், உணவில் கட்டுப்பாடு வேண்டும். அதேபோல உணவில் சரியான சதவீதத்தில் சத்தானவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். சாப்பிடுவது மட்டும் அல்ல, அதைச் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். இரவு நேரத்தில் சரியான நேரத்திற்குத் தூங்க வேண்டும். இரவுகளில் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களை பார்ப்பதைக் குறைக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் உடல் ஆரோக்கியம் ஏற்படும். எனக்கு இப்போது 89 வயதாகிறது" என்கிறார்.

இந்த இந்தியன் தாத்தா தினமும் அதிகாலை நடைப்பயிற்சி செய்துவருகிறார். இந்தப் பழக்கம் பல ஆண்டுகளாக தனக்கு உள்ளதாகக் குறிப்பிட்டு இருக்கும் அவர், அந்த அனுபவம்தான் மாரத்தான் போன்ற போட்டிகளில் கலந்து கொள்ளக் கூடிய உத்வேகத்தைக் கொடுத்தது என்கிறார். இவரது வீடு முழுக்க தங்கம், வெள்ளி எனக் கொட்டிக் கிடக்கின்றன பதக்கங்கள். அவ்வளவும் இவரது வீரதீர சாகசத்திற்கான அடையாளங்கள் என்கிறார்கள் இவரது உறவினர்கள்.

இந்தத் தாத்தா தான் மட்டும் இந்தப் பயிற்சியை மேற்கொள்ளாமல் தினமும் தனது பேரக் குழந்தைகள் பட்டாளத்தை உடன் அழைத்துக் கொண்டு நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இவருடன் எப்போதும் ஒரு குட்டீஸ் பட்டாளம் வலம் வந்தபடி உள்ளது. இந்த வயதிலும் ஸ்போர்ட்ஸ் டிஷர்ட், ஷாட்ஸ் என மாடர்னாக வலம் வரும் இந்தத் தாத்தா தனக்கு இதுவரை உடல்ரீதியாகப் பெரிய பிரச்சினைகளே வந்ததில்லை என்கிறார்.












Click it and Unblock the Notifications