நியூசிலாந்து அணிக்காக களமிறங்கிய வேலூர் தமிழன்.. ரஜினி வசனத்தை பச்சை குத்தியுள்ள ஆதித்யா அசோக்!
வதோதரா: இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணிக்காக ஆதித்யா அசோக் என்ற வீரருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதித்யா அசோக், தீவிர ரஜினிகாந்த் ரசிகராவார். அவர் கையில், என் வழி தனி வழி என்று படையப்பா வசனத்தை பச்சைக் குத்திக் கொள்ளும் அளவிற்கு வெறித்தனமான ரசிகர் என்பது தெரிய வந்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வதோதரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியின் ஸ்பின்னரான ஆதித்யா அசோக் என்ற வீரருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவரின் பூர்வீகம் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டம் என்பது தெரிய வந்துள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

வழக்கமாகவே இந்திய வம்சாவளி வீரர்களுக்கு நியூசிலாந்து அணியில் வாய்ப்பு அளிக்கப்படும். இஷ் சோதி, மும்பையைச் சேர்ந்த அஜாஸ் படேல், பெங்களூரைச் சேர்ந்த ரச்சின் ரவீந்திரா உள்ளிட்ட ஏராளமான வீரர்கள் விளையாடி வருகின்றனர். இந்தப் பட்டியலில் ஆதித்யா அசோக்கும் இணைந்திருக்கிறார். ஆதித்யா அசோக்கிற்கு 4 வயதி இருக்கும் போதே இவரின் குடும்பத்தினர் நியூசிலாந்துக்கு புலம்பெயர்ந்துள்ளனர்.
லெக் ஸ்பின்னர் என்பதோடு, கூக்ளி பந்துகளை சிறப்பாக வீசக் கூடியவர். இஷ் சோதியின் இடத்தை நிரப்ப ஆதித்யா அசோக் தயார் செய்யப்பட்டு வருகிறார். ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக டி20 கிரிக்கெட்டிலும், வங்கதேச அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டிலும் அறிமுகமாகிவிட்டார். இதுவரை 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருக்கிறார்.
2020 யு19 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் ஜெய்ஸ்வால், துருவ் ஜுரெல் ஆகியோருக்கு எதிராக நியூசிலாந்து அணிக்காக களம் கண்டவர். லிஸ்ட் ஏ மற்றும் முதல்தர கிரிக்கெட்டில் அசத்தியதன் காரணமாக, கடந்த ஆண்டு நியூசிலாந்து அணிக்கான வளர்ந்து வரும் வீரர்களுக்கான விருதை வென்றார். அதன்பின் ஆதித்யா அசோக் இந்தியா வந்து, சிஎஸ்கே அகாடமியில் பயிற்சி மேற்கொண்டார்.
ரச்சின் ரவீந்திரா சிஎஸ்கே அகாடமியில் பேட்டிங் பயிற்சி செய்த போது, ஆதித்யா அசோக்கும் ஸ்பின் நுணுக்கங்களை கற்றுக் கொண்டார். அதேபோல் ஆதித்யா அசோக் தீவிர ரஜினிகாந்த் ரசிகர். எந்த அளவிற்கு தீவிர ரஜினி ரசிகர் என்றால், படையப்பா படத்தின் வசனமான என் வழி தனி வழி என்பதை கையில் பச்சையாக குத்திக் கொள்ளும் அளவிற்கு தீவிர ரசிகர். இதனால் தமிழக கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆதித்யா அசோக் பிரபலமாகி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications