சுப்மன் கில்லை பிராண்டாக மாற்றும் பிசிசிஐ! ஐபிஎல் பைனல் மைதானம் மாறியது ஏன்? அந்த முடிவின் பின்னணி!
மும்பை: இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ள சுப்மன் கில்லை பிராண்டாக மாற்ற பிசிசிஐ முயற்சிப்பதாக ரசிகர்களிடையே விமர்சனங்கள் எழுந்துள்ளது. அதற்கான முயற்சியாகவே ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர் 2 மற்றும் இறுதிப்போட்டி ஆகியவை அகமதாபாத் மைதானத்தில் நடத்தப்பட இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக நட்சத்திர இளம் வீரர் சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பின் போது, தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், சுப்மன் கில் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நீண்ட கால நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

இந்திய கேப்டன்கள்
25 வயதாகும் சுப்மன் கில், இதுவரை ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் 3 போட்டிகளில் மட்டுமே கேப்டனாக செயல்பட்டுள்ளார். இதற்கு முன்பாக இந்திய அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்ட தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்டோர் பல்வேறு தருணங்களிலும் இந்திய அணியை கடினமான சூழல்களில் இருந்து இந்திய அணியை வெற்றிபெற வைத்தவர்கள்.
சுப்மன் கில் அனுபவம்
அதேபோல் போதுமான டெஸ்ட் கிரிக்கெட் அனுபவத்துடன் இருந்தவர்கள். ஆனால் சுப்மன் கில் இதுவரை ஆசியாவுக்கு வெளியில் வெளிநாட்டு மைதானங்களில் ஒரு சதம் கூட டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்ததில்லை. அதேபோல் நம்பர் 3 பேட்ஸ்மேனாக சுப்மன் கில் இதுவரை பெரிய இன்னிங்ஸையும் விளையாடியதில்லை.
விளம்பர வருவாய்
இதனால் பிசிசிஐ விளம்பர வருவாய் பாதிக்கப்படுமோ என்ற சந்தேகம் நிர்வாகிகள் இடையே உள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஒரே நேரத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருப்பதால், அதனை ஈடுகட்ட புதிய வீரரை பிராண்டாக உருவாக்க வேண்டும். அதற்கு அந்த வீரர் கேப்டனாகவும் சாதித்திருக்க வேண்டும்.
பிசிசிஐ எடுத்த முடிவு
ஆனால் சுப்மன் கில் இதுவரை கேப்டனாக எந்த சாதனைகளையும் செய்ததில்லை. நாக் அவுட் போட்டிகளில் கூட மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் சுப்மன் கில் தலைமையில் விளையாடி வரும் குஜராத் அணிக்கு சாதகமாக சில முடிவுகளை பிசிசிஐ எடுத்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மாறிய மைதானம்
அதாவது பிசிசிஐ தரப்பில் வெளியிடப்பட்ட புதிய ஐபிஎல் அட்டவணையில் குவாலிஃபையர் 2 மற்றும் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலமாக குஜராத் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறினால் எளிதாக கோப்பையை வெல்ல முடியும். அகமதாபாத் மைதானத்தில் சுப்மன் கில்லின் சராசரி, சாய் சுதர்சனின் பேட்டிங் ஆகியவற்றை முறியடிப்பது எளிதான விஷயமல்ல.
சூப்பர் ஸ்டார் சுப்மன் கில்?
இதனால் சுப்மன் கில்லை சூப்பர் ஸ்டாராக மாற்றும் நோக்கத்திற்கு சாதகமாகவே ஐபிஎல் தொடரின் அட்டவணை மாற்றப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏனென்றால் கேப்டனாக எந்த சாதனையையும் செய்யாமல் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன்சியை சுப்மன் கில் ஏற்பது பிசிசிஐ நிர்வாகத்திற்கும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications