டிராவிஸ் ஹெட்டை சமாளிக்க முடியுமா? ரோஹித் சர்மாவின் ஒரே ஆயுதம் அவர்தான்.. தப்பிக்குமா இந்திய அணி?
துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டிகள் நாளை தொடங்கவுள்ளது. நாளை துபாய் மைதானத்தில் நடக்கவுள்ள முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. ஏற்கனவே 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் அடைந்த தோல்வியே இந்திய ரசிகர்களால் இதுவரை மறக்க முடியவில்லை.
இந்த நிலையில் அடுத்த 2 ஆண்டுகளில் மீண்டும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நாக் அவுட் சுற்றில் மோதவிருப்பது இந்திய ரசிகர்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது. இந்திய அணியில் இம்முறை சில நல்ல மாற்றங்கள் செய்யப்பட்டு பிளேயிங் லெவன் கட்டமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் துபாய் மைதானத்திலேயே இந்திய அணி விளையாடுவது கூடுதல் சாதகமாக மாறியுள்ளது.

இதனால் இந்திய அணி வெல்ல வாய்ப்புகள் இருக்கிறது என்று நம்பிக்கை வைத்தாலும், ஐசிசி தொடரில் ஆஸ்திரேலியா அணியின் சாதனைகளை எளிதாக கடந்து சென்றுவிட முடியாது. பேட் கம்மின்ஸ், ஹேசல்வுட் மற்றும் மிட்சல் ஸ்டார்க் என்று முன்னணி வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாமல் சாதாரணமாக அரையிறுதி வரை ஆஸ்திரேலியா அணி முன்னேறி இருக்கிறது.
ஸ்பென்சர் ஜான்சன், நேதன் எல்லிஸ், தன்விர் சங்கா, பென் டுவார்ஷியஸ் என்று அனுபவம் இல்லாத பவுலர்களாக இருந்தாலும், அவர்கள் அனைவரும் திறமையாக செயல்பட்டு வருகின்றனர். அதேபோல் ஆஸ்திரேலியா அணியின் பெரும்பாலான பவுலர்களை இந்திய அணி பேட்ஸ்மேன்கள் இதுவரை அதிகளவில் எதிர்கொண்டு விளையாடியதில்லை.
அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் மிக முக்கியமான பிரச்சனை என்னவென்றால், ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட்டை சமாளிப்பதுதான். ஏனென்றால் 2023ஆம் ஆண்டு நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, உலகக்கோப்பை இறுதிப்போட்டி, 2024 டி20 உலகக்கோப்பை தொடர், பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் என்று டிராவிஸ் ஹெட் வெளுத்து கட்டி இருக்கிறார்.
விராட் கோலி எப்படி பாகிஸ்தான் அணியை வெளுத்து வாங்குகிறாரோ, அதுபோல் டிராவிஸ் ஹெட் இந்திய அணியை பொளந்து கட்டி வருகிறார். இவரை வீழ்த்துவதற்கான வழியை இதுவரை இந்திய அணி கண்டறியவில்லை. அதுமட்டுமல்லாமல் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ராவும் இல்லாததால், டிராவிஸ் ஹெட்டை வீழ்த்த இந்திய அணி என்ன திட்டத்துடன் களமிறங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேபோல் டிராவிஸ் ஹெட்டிற்கு இருக்கும் முக்கியமான பிரச்சனை இடதுகை வேகப்பந்துவீச்சாளரை எதிர்கொள்வதுதான். ஐபிஎல் தொடரிலும் கூட இடதுகை வேகப்பந்துவீச்சாளரின் ஸ்விங்கை சமாளிக்க முடியாமல் திணறி இருக்கிறார். இதனால் நாளைய ஆட்டத்தில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அர்ஷ்தீப் சிங் இடம்பெற வேண்டும் என்று விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications