போச்சு மறுபடியுமா? மீண்டும் கோட்டை விட்ட சிஎஸ்கே! சொதப்புவது எங்கே? வெறியாகும் ரசிகர்கள்
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியிடம் தோல்வியை சந்தித்தது. அடுத்தடுத்து 2 போட்டிகளில் வெற்றி பெற்று ரசிகர்களை குஷிப்படுத்திய சென்னை அணி தற்போது மீண்டும் பழைய பார்முக்கே திரும்பியிருப்பது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. நேற்றைய போட்டியில் சென்னை அணி சொதப்பியது எங்கே?, கோட்டைவிட்டது எங்கே? என்பது பற்றி இங்கு காணலாம்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற 27-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீசியது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 194 ரன்கள் அடித்தது.

இதையடுத்து 195 ரன்கள் என்ற இலக்குடன் பேட்டிங் செய்த சென்னை அணி 184 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி பெறும் மூன்றாவது தோல்வி இதுவாகும். 6 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி 2 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது. தொடக்கத்தில் 3 போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்த சிஎஸ்கே. அதன்பிறகு கம்பேக் கொடுத்தது.
அடுத்தடுத்து 2 போட்டிகளில் வெற்றி பெற்றது. இதனால், சென்னை அணி ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். சென்னை அணி பழைய பார்முக்கு திரும்பிவிட்டதாக ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில், ஐதாராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. சென்னை அணியின் தோல்விக்கு டாப் 5 காரணங்களை பார்க்கலாம்.
* சென்னை அணியின் பந்து வீச்சு நேற்றைய எதிர்பார்த்த அளவு இல்லை கலீல் அகமது காயத்தால் விலகிய நிலையில், மேத்யூ ஷார்ட் அணியில் சேர்க்கப்பட்டார். இவர் 3 ஓவர்களில் 38 ரன்கள் அள்ளி கொடுத்துவிட்டார். பவர்பிளேயில் விக்கெட்டுகளை எடுக்க தவறியதும் சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. 5.5 ஓவர்களில் ஐதராபாத் அணி 75 ரன்களை குவித்த பிறகே முதல் விக்கெட்டை பறிகொடுத்தது.
* கடைசி கட்டத்தில் கொஞ்சம் கட்டுக்கோப்பாக விளையாடிய போது 200 ரன்களுக்குள் ஐதராபாத் அணியை கட்டுப்படுத்திய போதிலும் இன்னும் இந்த ஸ்கோர் டிஃபெண்ட் செய்யும் அளவுக்கானதாக இல்லாமல் போனது.
* பந்துவீச்சுதான் இப்படி என்றால் பேட்டிங்கிலும் சொதப்பல்தான். 194 ரன்கள் எல்லாம் அவ்வளவு பெரிய ஸ்கோர் இல்லை என்னும் அளவுக்கு தற்போது கிரிக்கெட்டின் வடிவம் மாறிவிட்டது. ஆனால், இந்த ரன்களை அடிக்க முடியாமல் போய்விட்டது.
* கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் மோசமான பார்ம் அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. சஞ்சு சாம்சன் அதிரடி காட்டாமல் ஏமாற்றிவிட்டார். ஆயுஷ் மாத்ரே நம்பிக்கை அளித்தாலும் நிலைத்து நிற்காமல் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 30 ரன்களில் அவுட் ஆனார்.
* சிஎஸ்கே மலை போல நம்பிய பிரேவிஸ் டக் அவுட் ஆனார். அவர் ஆட்டமிழந்தது ரசிகர்களின் மனதை சுக்கு நூறாக உடைத்துவிட்டது. ஏனெனில் அவர் களத்தில் நின்று இருந்தால் 2 ஓவர்களை மிச்சம் வைத்தே முடிக்கலாம் என ரசிகர்கள் நினைத்தனர்.
* ஷிவம் துபே, ஓவர்டன் ஆகியோர் ஓரளவு போராடினர். அன்சுல் கம்போஜ் தன் பங்கிற்கு ஒரு சிக்சர் விளாசினார். ஆனால் அவரது முயற்சியும் பலன் கிடைக்காமல் போனது. கடைசி ஓவரில் 16 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற பரபரப்பான நிலை நிலவியது. ஆனால், கடைசி ஓவரில் ஒரு ஃப்ரீ ஹிட் கிடைத்த போதும் சென்னை அணியால் 6 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
* பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே மெச்சத்தக்க வகையில் சென்னை அணி வலுவாக இல்லை. முக்கிய வீரர்களின் மோசமான பார்ம், அனுபவம் இல்லாத கேப்டன், தோனி அணியில் இன்னும் இணையாதது என சிஎஸ்கே தோல்விக்கு பல காரணங்கள் ரசிகர்களால் அடுக்கப்படுகின்றன.














Click it and Unblock the Notifications