நடிச்சா ரொமாண்டிக் ஹீரோதான்.. ரஜினிகாந்த், அஜித்தின் வெறித்தன ரசிகன்.. சென்னையை அலறவிட்ட சிவம் துபே!
சென்னை: தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் மற்றும் அஜித் குமார் ஆகியோருக்கு தீவிர ரசிகர் என்று சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் சிவம் துபே தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற விழாவில் அலைபாயுதே மாதவன் டயலாக்கை பேசி அசத்திய சிவம் துபே, நல்ல மனைவி அமைந்தால் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சடகோபன் ரமேஷ், டுவைன் பிராவோ, ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த் என்று ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் நடிகர்களாக அறிமுகமாகி இருக்கின்றனர். சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி கூட ஒரு படத்தை தயாரித்துள்ளார். தற்போது "தல"யை தொடர்ந்து சின்னதல சுரேஷ் ரெய்னா நாயகனாக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.

அதில் சிறப்பு விருந்தினராக சிஎஸ்கே வீரர் சிவம் துபே கலந்து கொண்டார். இந்த விழாவில் சிவம் துபே பேசுகையில், வணக்கம் சென்னை.. சென்னையில் இருக்கும் போது என்னுள் வித்தியாசமான ஒரு உணர்வு இருந்து கொண்டே இருக்கும். அதனால் சென்னையை என் சொந்த ஊர் இல்லை என்று சொல்ல மாட்டேன். ஏனென்றால் சென்னை எனக்கு அவ்வளவு நெருக்கமானது.
சுரேஷ் ரெய்னா நடிக்கும் படம் நிச்சயம் சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன். கிரிக்கெட்டுக்கு பின் சினிமா பக்கம் வருவதற்கு எனக்கு ஆர்வம் இருக்கிறது. ஆனால் இப்போது சென்னை அணிக்காக கிரிக்கெட் விளையாடுவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒருவேளை கிரிக்கெட்டில் இல்லையென்றால், சினிமாவில் ரொமாண்டிக் ஹீரோவாக இருந்திருப்பேன்.
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் சாரின் தீவிரமான ரசிகர்களில் நானும் ஒருவன். ரஜினிகாந்த் மற்றும் அஜித் குமார் ஆகிய இருவரும் மிகச்சிறந்த நடிகர்கள். எந்த நடிகையுடன் நடிக்க வேண்டும் என்பதை என்னால் இப்போது சொல்ல முடியாது என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அலைபாயுதே மாதவன் வசனத்தை பேசிக் காட்டுமாறு தொகுப்பாளர் கேட்டு கொண்டார்.
அப்போது அந்த வசனத்தின் அர்த்தத்தை கேட்ட சிவம் துபே, உடனடியாக இந்த வசனத்தை எனது மனைவிக்காக கூறுகிறேன் என்று கூறிவிட்டு, என் மனைவி மட்டுமே என் வாழ்க்கையின் கனவு தேவதை.. நல்ல மனைவி அமைந்தால், வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று தெரிவித்தார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
சிஎஸ்கே அணிக்காக 4 சீசன்களாக விளையாடி வரும் சிவம் துபே, கடந்த சீசனில் எதிர்பார்த்த அளவிற்கு சோபிக்கவில்லை. ஆனாலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிவம் துபே கவனம் செலுத்தி வருகிறார். மும்பை அணிக்காக களமிறங்கி விளையாடி வரும் அவர், பவுலிங்கிலும் அடுத்தக் கட்டத்திற்கு உயர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications