"பில்டிங் ஸ்ட்ராங்.. பேஸ்மெண்ட் வீக்" வேகப்பந்துவீச்சாளர்களே இல்லையே.. சிஎஸ்கே அணியின் பலவீனம் என்ன?
மும்பை: ஐபிஎல் மினி ஏலத்திற்கு பின், 10 அணிகளில் மிகவும் பலவீனமான அணியாக சிஎஸ்கே அணி மாறி இருக்கிறது. சரியாக சொல்ல வேண்டுமென்றால் சிஎஸ்கே அணியின் "பில்டிங் ஸ்ட்ராங்.. பேஸ்மெண்ட் ரொம்ப ரொம்ப வீக்" என்று கூறலாம். ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி செய்த தவறுகளை தொடர்பாக பார்க்கலாம்.
2026ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் அபுதாபியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி இளம் வீரர்கள் மீதே அதிக முதலீடுகளை செய்தது. பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மா, அகீல் ஹொசைன், ராகுல் சஹர், அமன் கான், ஜாக் ஃபுவுல்க்ஸ், மேத்யூ ஷார்ட், சர்ஃபராஸ் கான் என்று வித்தியாசமான வீரர்களை வாங்கி ஆச்சரியம் கொடுத்தது.

அதேபோல் சிஎஸ்கே அணி நிர்வாகம் மீண்டும் மீண்டும் பேட்ஸ்மேன்கள் மீது அதிக முதலீடுகளை செய்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஜடேஜாவை கொடுத்துவிட்டு பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனை வாங்கியது. இதன் மூலமாக சஞ்சு சாம்சன், ஆயுஷ் மாத்ரே, ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே, டிவால்ட் பிரெவிஸ் என்று டாப் 5 பேட்ஸ்மேன்கள் தரமான அமைந்துவிட்டனர்.
இதையடுத்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், ஆல்ரவுண்டர்கள் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே சிஎஸ்கே அணியின் இலக்காக இருந்திருக்க வேண்டும். அதற்கேற்றபடி கார்த்திக் சர்மா மற்றும் ஜடேஜாவுக்கான மாற்று வீரராக அகீல் ஹொசைன் மற்றும் பிரசாந்த் வீர் ஆகிய மூவரையும் சிஎஸ்கே அணி வாங்கியது. இதற்காக மட்டுமே ரூ.30 கோடிக்கும் அதிகமான செலவு செய்தது.
தொடர்ந்து மேத்யூ ஷார்ட் எதற்காக வாங்கப்பட்டார் என்பது சிஎஸ்கே அணிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். ஏனென்றால் டாப் ஆர்டரில் ஆடக் கூடிய உர்வில் படேலுக்கே வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம் தான். அதேபோல் நூர் அஹ்மத், ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோர் இருக்கும் போது, எதற்காக அகீல் ஹொசைன், பிரசாந்த் வீர் மற்றும் ராகுல் சஹர் ஆகிய 3 வீரர்கள் வாங்கப்பட்டார்கள் என்பதும் கேள்விக்குறி தான்.
இந்த ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி ஹோல்டர், லிவிங்ஸ்டன் ஆகியோரில் ஒருவரை வாங்கும் என்று பார்க்கப்பட்டது. ஆனால் லிவிங்ஸ்டனுக்கு கடைசி வரை கைகளை தூக்கவில்லை. அதேபோல் ஹோல்டரை வெறும் ரூ.7 கோடிக்கு குஜராத் அணியிடம் தாரை வார்த்திருக்கிறது. இதனால் நல்ல வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் அமையவில்லை.
அதேபோல் வேகப்பந்துவீச்சாளர்களாக மேட் ஹென்ரி, ஜாக் ஃபவுல்க்ஸ் ஆகியோர் மட்டுமே வாங்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே நேதன் எல்லீஸ், கலீல் அஹ்மத், அன்சுல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங் ஆகியோர் மட்டுமே இருக்கின்றனர். இதனால் டெத் பவுலிங் வீசுவதற்கு நேதன் எல்லீஸ் மட்டுமே இருக்கிறார். இவரும், அன்சுல் கம்போஜும் சமாளிக்க முடியவில்லை என்றால், சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய சிக்கல் தான்.
இதன் காரணமாக தரமான டாப் ஆர்டர், அனுபவம் இல்லாத மிடில் ஆர்டர், சுமாரான பவுலிங் என்று சிஎஸ்கே அணி கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் எப்படி அமையும் என்பதே ரசிகர்களின் மிகப்பெரிய கேள்வியாக அமைந்துள்ளது. இதனால் சிஎஸ்கே அணி மீண்டும் தோல்வி பாதையில் செல்லுமோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது.












Click it and Unblock the Notifications