கம்பீர் அதிகாரத்தில் கைவைக்கும் பிசிசிஐ.. டெஸ்ட் அணிக்குள் வரும் ஜாம்பவான்.. ஜெய்ஷா முடிவு என்ன?
மும்பை: இந்திய டெஸ்ட் அணிக்கு பிரத்யேகமாக புதிய பயிற்சியாளரை நியமிக்கலாமா என்று பிசிசிஐ நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடர்களில் அடுத்தடுத்து இந்திய அணி அடைந்த தோல்வியே இந்த ஆலோசனைக்கு பின் உள்ள காரணமாக அமைந்துள்ளது.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் கொண்டு வரப்பட்ட பின், ஆஸ்திரேலியா மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. அதற்கு முன்பாக சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் இழந்தது. பின்னர் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரையும் 2-0 என்ற கணக்கில் இழந்தது.

இதனால் கவுதம் கம்பீரை டெஸ்ட் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. ஆனால் 2027 உலகக்கோப்பை தொடர் வரை இந்திய அணியின் பயிற்சியாளராக கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை இந்திய அணி எந்தவொரு டெஸ்ட் தொடரிலும் விளையாட போவதில்லை.
இதனால் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் செயல்பாடுகளை பொறுத்தே கம்பீர் பதவிக் காலம் முடிவு செய்யப்படும் என்று தெரிய வந்துள்ளது. இதனிடையே இந்திய டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு விவிஎஸ் லக்ஷ்மணை கொண்டு வரலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிசிசிஐ நிர்வாகிகள் சிலர் விவிஎஸ் லக்ஷ்மணை அணுகி இருக்கின்றனர்.
ஆனால் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வருவதற்கு விவிஎஸ் லக்ஷ்மண் தயக்கம் காட்டியதாக தெரிய வந்துள்ளது. ஒருவேளை டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறவில்லை என்றால், கம்பீரின் முடிவு பிசிசிஐ நிர்வாகிகள் கைகளில் தான் இருக்கிறது. இந்த விவகாரத்தில் கம்பீரின் ஆதரவாளர்களும் கூட தெளிவாக இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
அதேபோல் 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி இன்னும் 9 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளது. இந்திய அணியால் இனியும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியுமா என்பதும் சந்தேகம் தான். அதுமட்டுமல்லாமல் இந்திய அணியில் ஆடி வரும் பலருக்கும் தாங்கள் இடம் உறுதியானதா என்ற சந்தேகம் இருக்கிறது.
அதுவும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து சுப்மன் கில் நீக்கப்பட்ட பின், இந்திய வீரர்கள் பலரும் கம்பீரின் தாக்கத்தை உணர தொடங்கி இருக்கின்றனர். இதனால் மீண்டும் ராகுல் டிராவிட் காலத்தை போல் பிரத்யேக ரோல் மற்றும் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவை வீரர்களிடம் விதைக்க பிசிசிஐ தயாராகி வருகிறது.












Click it and Unblock the Notifications