ரிங்கு சிங் அழுதுட்டாரு.. கேகேஆர் வீரர்கள் எமோஷனலாக இருக்கோம்.. முதல் வெற்றியால் நெகிழ்ந்த வருண்!
கொல்கத்தா: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அடைந்த முதல் வெற்றிக்கு பின் கேகேஆர் அணியின் ஓய்வறையில் ஏராளமான வீரர்கள் ஆனந்த கண்ணீருடன் இருந்ததாக நட்சத்திர வீரர் வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் இன்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கேகேஆர் அணி அபார வெற்றியை பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்களை எடுத்தது. கேகேஆர் அணி சார்பாக வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களை வீசி 14 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பின் களமிறங்கிய கேகேஆர் அணி 85 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் களமிறங்கிய ரிங்கு சிங் - அனுகுல் ராய் இருவரும் நிதானமாக விளையாடி, கடைசி நேரத்தில் அதிரடியை கையில் எடுத்தனர். அதிலும் கேகேஆர் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ரிங்கு சிங் 2 பவுண்டரியை விளாசிவிட்டு, ஒரு சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்தார்.
இந்த சீசனில் கேகேஆர் அணிக்கு இது முதல் வெற்றியாகும். 7 போட்டிகளில் விளையாடியுள்ள கேகேஆர் அணி ஒரு வெற்றி, 5 தோல்வியுடன் 3 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் 9வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இந்த வெற்றி ரிங்கு சிங்கிற்கு மிகப்பெரிய விஷயமாக மாறி இருக்கிறது. ஏனென்றால் கேகேஆர் அணியின் ஃபினிஷரான ரிங்கு சிங் ஃபார்மின்றி தவித்து வந்தார்.
இந்த வெற்றி குறித்து வருண் சக்கரவர்த்தி பேசுகையில், இந்த வெற்றி எங்கள் அணியின் ஓய்வறையில் பலருக்கும் கண்ணீரை வரவழைத்துவிட்டது என்று சொல்லலாம். 2024 ஐபிஎல் தொடரை வென்ற போது கூட இந்த அளவிற்கு யாரையும் எமோஷனலாக பார்க்கவில்லை. இந்த வெற்றிக்கு முழுமையான காரணமும் பயிற்சியாளர்கள் தான்.
ஏனென்றால் வெளியில் இருந்து சொல்லப்படும் கருத்துகள் எங்கள் காதுகளுக்கு வரவிடாமல் தடுத்தனர். சிலரின் கருத்துகள் அடிப்படை ஆதாரம் அற்றவை.. அப்படியான விஷயங்கள் வெடிக்கும் போது, ஒரு அணியாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்படியான அணியாக கேகேஆர் இருக்கிறது. இந்த சீசனில் 3 முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விலகிவிட்டனர்.
முஸ்தாஃபிகுர் ரஹ்மான் ஆட முடியாமல் போய்விட்டது. ஆனாலும் எங்கள் அணியை தளர்ந்துவிடாமல் அபிஷேக் நாயர் பார்த்து கொள்கிறார். ஒவ்வொரு அடியாக பார்த்து எடுத்து வைத்து வருகிறார். இங்கும், அங்குமாக ஒரு வெற்றியை நாங்கள் பெற்றுவிட்டால், நிச்சயமாக எங்களின் வழியை கண்டறிந்துவிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications