அப்படியே பாகிஸ்தான் மாதிரி.. கிரிக்கெட் எதிரியான வங்கதேசம்.. நாகினிக்கு மகுடி வாசிக்குமா இந்தியா?
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நாளை வங்கதேச அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது. இரு நாடுகளுக்கு இடையில் சுமூகமான உறவு இல்லாத நிலையில், இந்த இரு அணிகளும் நேருக்கு நேராக முதல்முறையாக மோதுகின்றன. இதனால் பாகிஸ்தான் போட்டிக்கு நிகரான பரபரப்புடன் இந்த ஆட்டம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நாளை நடக்கவுள்ள ஆட்டத்தில் வங்கதேச அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது. 8 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன்ஸ் டிராபி நடப்பதால், ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு போட்டியும் நாக் அவுட் போட்டியை போல் மாறி இருப்பதால், இந்திய அணி ஒன்றில் தோல்வியடைந்தாலும் மிகப்பெரிய சிக்கல் உருவாகும்.

அதேபோல் இந்திய அணி இடம்பெற்றுள்ள குரூப்பில் 2 ஆசிய நாட்டு அணிகள் இருப்பது கூடுதல் சிக்கலாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் துபாய் மைதானம் குறித்து பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய இரு அணிகளுக்கு நன்றாகவே தெரியும். இதனால் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவுக்கு பாகிஸ்தான் அணி மட்டுமே கிரிக்கெட் எதிரியாக பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது வங்கதேச அணியும் கிரிக்கெட் எதிரியாக மாறியுள்ளது. அதற்கு காரணம் வங்கதேசத்தின் அண்மைக் கால செயல்பாடுகள்தான். வங்கதேசத்தில் நடந்த போராட்டம் காரணமாக அந்நாட்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
இதன்பின் வங்கதேச அரசியல் ஆலோசகராக உள்ள முகமது யூனுஸ், பாகிஸ்தானுடன் நெருக்கமாக நட்பு பாராட்டி வருவதோடு, எல்லைகளிலும் பிரச்சனைகளை உருவாக்கி வருகிறார். இந்தியாவுக்கு ஆகாத துருக்கி நாட்டின் ட்ரோன்களை பறக்கவிட்டு கண்காணிப்பது போன்ற நடவடிக்கையால் இந்தியா - வங்கதேசம் இடையிலான நட்பு சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கை இதுவரை மத்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இப்படியான அரசியல் பிரச்சனைகளுக்கு நடுவே நாளை இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாய் மைதானத்தில் நடக்கவுள்ளது. அரசியல் பிரச்சனைகள் ஏற்பட்ட பின் நடக்கும் முதல் போட்டி இதுதான்.
அதுமட்டுமல்லாமல் இந்திய அணிக்கு எதிராக ஏற்கனவே வங்கதேச அணியும் ஏராளமான சேட்டைகளை செய்துள்ளது. இந்திய அணியின் தோல்வியை கொண்டாடுவது, நாகினி டான்ஸ் ஆடி இந்திய ரசிகர்களையும், வீரர்களையும் வெறுப்பேற்றுவது என்று வங்கதேசத்தின் வன்ம சம்பவங்கள் ஏராளம். அதேபோல் 2019 உலகக்கோப்பை மற்றும் 2022 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு வங்கதேசம் அதிர்ச்சி கொடுத்தது.
பின்னர் இந்திய அணி ஜஸ்ட் மிஸ்ஸில் வங்கதேச அணியை வீழ்த்தியது. எப்படி இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி வீரர்கள் கூடுதல் ஆக்ரோஷத்துடன் செயல்படுவார்களோ, தற்போது வங்கதேச வீரர்களும் அப்படியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் களத்தில் இரு அணி வீரர்களுக்கும் உரசல் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
நாளை நடக்கவுள்ள முதல் லீக் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் பிப்.23ல் நடக்கவுள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கூடுதல் நம்பிக்கையுடன் இந்திய அணி களமிறங்கும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் நாளைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெறுவது கூடுதல் அவசியமான ஒன்றாகும்.
இதனிடையே வங்கதேசம் அணியின் கேப்டன் ஷாண்டோ, சாம்பியன்களாக திரும்புவோம் என்று சூளுரைத்துள்ளார். தரமான ஸ்பின்னர்களை கொண்ட வங்கதேச அணி நிச்சயம் இந்திய அணி கடுமையான சவாலை அளிக்கும். இந்திய அணியில் பும்ரா இல்லாததால், வங்கதேச பேட்ஸ்மேன்களும் கூடுதல் நம்பிக்கையுடன் வருவார்கள். இதனால் தரமான ஆட்டமாக நாளைய போட்டி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications