சுப்மன் கில் சரிபட்டு வர மாட்டாரு.. டெஸ்ட் கிரிக்கெட் அடிப்படையே தெரியாது.. பும்ராவுக்கு துரோகம்!
மும்பை: இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில்லையும், துணைக் கேப்டனாக ரிஷப் பண்ட்-ஐயும் நியமனம் செய்ய முடிவு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவுக்கு பிசிசிஐ துரோகம் செய்துள்ளதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக செயல்பட்ட ரோஹித் சர்மா, சில நாட்களுக்கு முன்பாக ஓய்வை அறிவித்தார். இதன் காரணமாக அடுத்த கேப்டனாக யார் நியமனம் செய்யப்படுவார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த சூழலில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் மற்றும் துணைக் கேப்டனாக ரிஷப் பண்ட் இருவரும் நியமனம் செய்ய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாகவே இந்திய அணியின் துணைக் கேப்டனாக பும்ரா செயல்பட்டு வருகிறார். ரோஹித் சர்மா சொந்த காரணங்களால் விலகிய போது, பும்ராவே இந்திய அணியை ஆஸ்திரேலியா தொடரில் வழிநடத்தினார். அதேபோல் சிறந்த கேப்டனாக பும்ராவின் வியூகங்கள் இந்திய அணிக்கு மிகப்பெரிய பலன்களை கொடுத்துள்ள போதும், மீண்டும் பேட்ஸ்மேனை நோக்கி பிசிசிஐ திரும்பி இருக்கிறது.
சுப்மன் கில்லை பொறுத்தவரை இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,893 ரன்களை விளாசி இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சுப்மன் கில் வெளிநாட்டு மைதானங்களில் ஒரு சதம் கூட விளாசியதே கிடையாது. கடைசியாக விளையாடிய 20 இன்னிங்ஸ்களில் அரைசதம் அடித்தது கூட இல்லை. சொந்த மண்ணில் மட்டுமே சில போட்டிகளில் சிறப்பாக விளையாடி இருக்கிறார்.
அதேபோல் 30 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடியும் சுப்மன் கில்லுக்கு இதுவரை ஒரு இன்னிங்ஸை எப்படி கட்டமைக்க வேண்டும் என்பதே தெரியாமல் இருக்கிறார். அதன் காரணமாகவே சிறந்த தொடக்கம் கிடைத்த போதும், ஏராளமான இன்னிங்ஸ்களில் பெரிய ஸ்கோரை அடிக்க முடியாமல் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் தோனி, விராட் கோலி ஆகியோர் வெளிநாட்டு மைதானங்கள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் போதுமான அனுபவம் பெற்ற பின்னரே கேப்டன்சி பதவிக்கு கொண்டு வரப்பட்டனர். ஆனால் சுப்மன் கில் கதையில் வேறு வழியில்லாமல் அவரை நோக்கி பிசிசிஐ திரும்பி இருக்கிறது. விராட் கோலியை தவிர்த்து இந்திய டெஸ்ட் அணியில் வேறு எந்த சீனியர் பேட்ஸ்மேனும் இல்லாததே இந்த பிரச்சனைக்கு காரணம்.
அதேபோல் ரோஹித் சர்மாவுக்கு ஒயிட் பால் அனுபவம் இருந்ததோடு, ஐபிஎல் தொடரில் 5 முறை கோப்பையை வென்றவர் என்ற பெயர் இருந்தது. ஆனால் சுப்மன் கில் இதுவரை ஒரேயொரு டி20 தொடரில் மட்டுமே இந்திய அணியை வழிநடத்தி இருக்கிறார். ஐபிஎல் தொடரிலும் இந்த சீசனில் ஓரளவிற்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதனால் சுப்மன் கில்லை கேப்டனாக நியமிப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications