300வது போட்டி.. விராட் கோலியிடம் இருந்து 2 பேருக்கு சென்ற அழைப்பு.. துபாய் வந்த அந்த பிரபலம்!
துபாய்: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கியுள்ளதன் மூலமாக விராட் கோலி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 300வது போட்டியில் ஆடியுள்ளார். இந்த போட்டியை நேரில் பார்ப்பதற்காக விராட் கோலி தரப்பில் இருந்து இரண்டு பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. ஏற்கனவே இரு அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்தாலும், அரையிறுதி சுற்றில் எந்த அணியுடன் விளையாடப் போகிறது என்ற முடிவு இந்த ஆட்டத்தின் முடிவை பொறுத்தே அமையும். இதனால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த போட்டியில் களமிறங்குவதன் மூலமாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது 300வது போட்டியில் களமிறங்கி இருக்கிறார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 300வது போட்டியில் களமிறங்கும் 7வது இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். அதேபோல் சர்வதேச அளவில் 300வது ஒருநாள் ஆட்டத்தில் விளையாடும் 22வது வீரராக இருக்கிறார்.
இந்த ஆட்டத்தை நேரில் பார்க்க விராட் கோலி தரப்பில் இரண்டு பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி வீரர்களின் குடும்பத்தினர் பங்கேற்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மனைவி மற்றும் குழந்தைகள் ஒரேயொரு போட்டியில் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனையும் முன் கூட்டியே பிசிசிஐ நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
இதன் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தை பார்க்க கூட விராட் கோலி தரப்பில் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்த நிலையில் 300வது போட்டியின் போது விராட் கோலி தரப்பில் அனுஷ்கா சர்மா மற்றும் அவரது சகோதரர் விகாஸ் கோலி ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனால் துபாய்-க்கு அனுஷ்க சர்மா மற்றும் விகாஸ் கோலி ஆகியோர் வந்துள்ளனர்.
கடந்த முறை டி20 உலகக்கோப்பை தொடரின் போது பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தை பார்க்க அனுஷ்கா சர்மா வந்திருந்தார். அதன்பின் பெரிதாக இந்தியாவில் இல்லாமல் லண்டனிலேயே அனுஷ்கா சர்மா நேரம் செலவிட்டு வந்தார். இந்த நிலையில் விராட் கோலியின் முக்கியமான போட்டிக்காக துபாய் வந்திருக்கிறார். இதனால் விராட் கோலி சதம் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications