யாரு நீ.. இவ்வளவு நல்லா பவுலிங் போடுற.. கில்லை வீழ்த்திய ஸ்பின்னரை கைகொடுத்து பாராட்டிய விராட் கோலி!
துபாய்: பாகிஸ்தான் அணியின் இளம் ஸ்பின்னரான அப்ரார் அஹ்மத்தை களத்திலேயே இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கைகொடுத்து, "நன்றாக பவுலிங் செய்தாய்" என்று பாராட்டிய சம்பவம் இரு நாட்டு ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்று வருகிறது. அதேபோல் ஐபிஎல் தொடரிலும் விராட் கோலி இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
துபாயில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இரு நாட்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்திய அணி வெற்றி பெற்ற போதும், பாகிஸ்தான் அணி ரசிகர்களும் இந்திய வீரர்களை பாராட்டி வருகின்றனர். இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 242 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி வெறும் 42.3 ஓவர்களில் சேஸ் செய்து அசத்தி இருக்கிறது.

சிறப்பாக ஆடிய விராட் கோலி 111 பந்துகளில் 7 பவுண்டரிகள் உட்பட சதம் விளாசி அசத்தினார். 5 ஓவரில் களமிறங்கிய விராட் கோலி கடைசி வரை களத்தில் இருந்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதனிடையே இந்திய அணியின் நட்சத்திர இளம் வீரர் சுப்மன் கில்லின் விக்கெட்டை அற்புதமான பந்து மூலம் அப்ரார் அஹ்மத் வீழ்த்தி அசத்தினார்.
அப்போது சந்திரமுகி படத்தில் பேயை கண்டு அரண்டு நிற்கும் வடிவேலுவை போல் ஒரு கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். இது இந்திய ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது. இருந்தாலும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு அப்ரார் அஹ்மத் அழுத்தத்தை கொடுத்திருக்கிறார். ஏனென்றால் 10 ஓவர்கள் வீசிய அப்ரார் அஹ்மத், வெறும் 28 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
10 ஓவர்களை முடித்துவிட்டு ஃபீல்டிங் செய்ய புறப்பட்ட போது, அவரை எதிர்முனையில் நின்று விராட் கோலி அழைத்து நிற்க சொன்னார். நேராக அவரிடம் சென்ற விராட் கோலி, அவருக்கு கை கொடுத்து சிறப்பாக பந்து வீசினாய் என்று பாராட்டு தெரிவித்தார். பாகிஸ்தான் அணியின் இளம் ஸ்பின்னரை விராட் கோலி களத்திலேயே அதுவும் ஆட்டம் முடிவதற்கு முன்பே பாராட்டிய சம்பவம் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த வீடியோவை இரு நாட்டு ரசிகர்களும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வரவேற்றுள்ளனர். கடைசியாக பாகிஸ்தான் அணியின் முகமது ஆமிரை மட்டுமே விராட் கோலி பாராட்டி இருந்தார். இதனால் 26 வயதாகும் இளம் வீரர் அப்ரார் அஹ்மத்-க்கு இது மிகப்பெரிய தருணமாக அமைந்தது. அதுவும் 8 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடிய ஸ்பின்னரால், லைன் மற்றும் லெந்தில் இவ்வளவு கட்டுப்பாட்டுடன் இருக்க முடியுமா என்ற ஆச்சரியமும் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications