2 முழு பவுலர்.. 3 முக்கால் பவுலர்.. பாகிஸ்தான் தோல்விக்கான ரியல் காரணம் இதுதான்.. பாவம் ரிஸ்வான்!
துபாய்: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. பாகிஸ்தான் அணியின் இந்த தோல்விக்கு அந்த அணியின் பவுலர்களே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஷாகின் அப்ரிடி, ஹாரிஸ் ராவ்ஃப் மற்றும் குல்தில் ஷா ஆகியோர் முழுமையான பவுலர்களாக வளர்ச்சி பெறாததே காரணமாக அமைந்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி பரிதாபமான தோல்வியை அடைந்துள்ளது. பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 242 ரன்கள் என்ற இலக்கை வெறும் 42.3 ஓவர்களில் இந்திய அணி சேஸிங் செய்து புதிய சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே நியூசிலாந்து அணியுடன் தோல்வியடைந்த நிலையில், தற்போது இந்திய அணியுடனும் தோல்வி அடைந்திருக்கிறது.

இதன் காரணமாக சொந்த மண்ணில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்தே பாகிஸ்தான் அணி குரூப் சுற்றுடன் வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் அரையிறுதி சுற்றுக்கு பாகிஸ்தான் அணி முன்னேற வேண்டும் என்றால், அது இந்தியா, நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய 3 அணிகளின் கைகளிலேயே இருக்கிறது.
இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்ததற்கு அந்த அணியின் பவுலர்களே முக்கியமான காரணமாக அமைந்துள்ளனர். ஏனென்றால் வங்கதேச அணி நிர்ணயித்த 229 ரன்கள் என்ற இலக்கையே 46.3 ஓவர்களில்தான் இந்திய அணி சேஸிங் செய்தது. ஆனால் பாகிஸ்தான் நிர்ணயித்த 242 ரன்கள் என்ற இலக்கை 42.3 ஓவர்களிலேயே சேஸ் செய்திருக்கிறது.
இதேபோன்ற இலக்கை இந்திய அணி நிர்ணயித்திருந்தால், இந்திய பவுலர்களின் செயல்பாடுகள் வேறு மாதிரி அமைந்திருக்கும். அதற்கேற்ப திட்டம், ஃபீல்ட் செட் அப், பவுலிங் அட்டாக் என்று ரோஹித் சர்மா வேறு மாதிரி முயற்சி செய்திருப்பார். ஆனால் பாகிஸ்தான் பவுலிங் அட்டாக் ஓய்வறையிலேயே திட்டமிட்ட ஒன்றாக இருந்தது. எளிதாக விராட் கோலியை, கில்லையும் சிங்கிள் ஓட அனுமதித்தனர்.
களத்திற்கு வரும் பேட்ஸ்மேன்கள் யாருக்கும் எந்த சூழலிலும் பவுலர்கள் பிரஷரை உணர வைக்கவில்லை. குறிப்பாக புதிய பந்து கொஞ்சம் தேய்மானம் அடைந்தாலும் ஷாகின் அப்ரிடியிடம் எந்த தாக்கமும் இருப்பதில்லை. இன்னொரு பக்கம் ஹாரிஸ் ராவ்ஃப் பந்தை எந்தவித திட்டமிடலும் இல்லாமல் லைன் மற்றும் லெந்தை கணக்கில் கொள்ளாமல் வீசுவதை வழக்கமாகவே கொண்டுள்ளார்.
குல்தில் ஷா ஒரு பார்ட் டைம் ஸ்பின்னருக்கான திறமையுடன் மட்டுமே இருக்கிறார். இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் இப்படி பவுலிங் செய்வோர் யாரையும் முழு பவுலர் என்று ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். முக்கால் பவுலர் என்றே கூறுவார்கள். இதனால் பாகிஸ்தான் அணி 3 முக்கால் பவுலர்களுடனும், 2 முழு பவுலர்களுடன் விளையாடியதே அந்த அணியின் தோல்விக்கு காரணம்.
அதற்கு நசீம் ஷா மற்றும் அப்ரார் அஹ்மத் ஆகியோரின் எகனாமி ரேட் மற்றும் ஷாகின் அப்ரிடி, ஹாரிஸ் ராவ்ஃப், குல்தில் ஷா ஆகியோரின் எகனாமி ரேட் ஆகிய இரண்டையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இவர்கள் இருவரும் 4 ரன்களுக்கு கீழ் எகனாமி ரேட் வைத்திருந்தால், அவர்கள் 3 பேரும் 6க்கு மேல் எகனாமி ரேட்டும் வைத்துள்ளனர். இதனால் பாகிஸ்தான் அணி தரமான பவுலர்களை அடையாளம் கண்டால் மட்டுமே இந்திய அணியை வீழ்த்த முடியும்.












Click it and Unblock the Notifications