IND vs SA Match: சொல்லி வச்சி அடிச்ச மாதிரி இருக்கு? அஸ்வினிடம் பிரசன்னா சொன்ன மேட்டர்.. இந்திய அணி சீக்ரெட் கசிந்ததா?
சென்னை: 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் (IND vs SA Match) இந்திய அணி தோல்வியை சந்தித்த நிலையில், இந்திய அணியின் மோசமான ஆட்டம் குறித்து முன்னாள் வீரர்கள் விமர்சனங்கள் முன்வைத்து வருகிறார்கள். சமூக வலைத்தளங்களிலும் நெட்டிசன்கள் அதிகம் இது பற்றி விவாதித்து வரும் நிலையில், கிரிக்கெட் அனலிஸ்ட் பிரசன்னா அகோரம் கூறிய கருத்து இணையத்தில் அதிகம் பரவி வருகிறது
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான சூப்பர் 8 சுற்று போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இதனால், இந்திய அணி விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

அஸ்வினிடம் பகிர்ந்த தகவல்
இதனிடையே இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வினின் யூடியூப் சேனலில் பங்கேற்று உரையாடிய கிரிக்கெட் ஆலோசராக பிடாக் என்று அழைக்கப்படும் பிரசன்னா அகோரம் கூறிய கருத்து வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அஸ்வினுடனான உரையாடலில் பி.டாக் கூறியதாவது:-
"மார்க்கரம் முதல் ஓவர் போடுகிறார். டாஸ் வென்று முதலில் பேட்டிங்கே செய்யாத தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்கிறது. அப்படி என்றால் தெறி படத்தில் விஜய் சொல்வது போல, சொல்லி கொடுத்தவன் உள்ளேயே ஒருத்தனாக இருக்கலாம். ஏன், இந்தியாவில் இருந்து ஒருத்தனே ஆப்பு வைத்தவனாக இருக்கலாம்" என்றார்.
ஏதோ விவகாரமா இருக்கு
அப்போது உடனே குறுக்கிட்ட அஸ்வின், "ஏய் என்ன சொல்ற.. என்று அதிர்ச்சி கலந்த வியப்புடன்" கேட்டார். "சொல்லி முடிச்சிட்டேன்.. புரிஞ்சவன் பிஸ்தா.. அகமதாபாத்தில் இதுவரைக்கும் கூவி கூவி அழைத்தாலும் டாஸ் வின் பண்ணிவிட்டு பவுலிங்தான் போடுவாங்க. பயிற்சி ஆட்டத்தில் 240 ரன்கள் இந்தியா அடிச்சிருக்கிறது.
அப்படியிருந்தும் தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் ஆடுகிறது என்றால் ஏதோ விவகாரமா இருக்கும் போலே இருக்கு.. இரண்டாவது பார்த்தீங்க என்றால், அபிஷேக் சர்மாவுக்கு இரண்டு பேரையும் ஆப்சைடில் பவர்பிளேவில் வைத்துவிட்டு மெதுவான பந்துகளையே வீசுகிறார்கள்.. இது ஏதோ விவகாரமே இருக்கும் போலயே.. சொல்லி வச்சி அடிச்ச மாதிரி இருக்கு அல்லவா?" என்றார்.
நெட்டிசன்கள் சரமாரி கருத்து
அவரது இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்திய அணியின் பந்து வீச்சாளராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் மோர்னே மார்க்கல் உள்ளார். எனவே, பி டாக்கின் இந்த பேச்சு, அவரை பற்றியதாக இருக்குமோ என்று நெட்டிசன்கள் பலரும் விவாதித்து வருகிறார்கள். பிடாக் இதற்கு முன்பாக தென் ஆப்பிரிக்க அணியின் அனலிஸ்டாகவும் இருந்துள்ளார்.
இவரது பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். துரந்தர் ரன்வீர் சிங் போன்ற வேலையை யாரும் பார்த்துவிட்டு சென்று விட்டார்களா? நான் மோர்னே மோர்கலை சொல்லவில்லை என நெட்டிசன் ஒருவர் கூறினார்.
இதெல்லாம் தேவையற்ற விவாதம்
ஆனால், சில நெட்டிசன்கள் தொழில் முறை வீரர்களாகாவும் பயிற்சியாளர்களாக இருப்பவர்களையும் இப்படி சந்தேகிப்பது அர்த்தமற்றது என்றும் அப்படி பார்த்தால் இந்திய அணி 2011-ல் உலக கோப்பையை வென்ற போது பயிற்சியாளாரக இருந்ததே தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர்தான் என்றும் கூறியுள்ளார்.
இன்னும் சில நெட்டிசன்களோ இதெல்லாம் தேவையற்ற விவாதம்.. தென் ஆப்பிரிக்க அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது.. வலுவான அணியாகவே உள்ளது. இந்திய அணிக்கு அன்று ஒருநாள் மோசமான நாள் ஆகிவிட்டது. அடுத்தடுத்த போட்டியில் இந்தியா மீண்டு வந்து கோப்பையை வெல்லும் என்று பதிவிட்டார்.












Click it and Unblock the Notifications