தோற்க மாட்டேனு போராடணும்.. இந்திய வீரர்களிடம் பிடிவாதமே இல்லை.. கம்பீரை நேரடியாக குறை சொன்ன அஸ்வின்!
மும்பை: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி அடைந்த தோல்வியை அடுத்து, கிரிக்கெட் ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்திய வீரர்கள் யாரும் தோல்வியை தவிர்க்க கூட போராடவில்லை என்று கூறிய அஸ்வின், ஸ்பின்னர்களை எதிர்த்து விளையாட பேட்ஸ்மேன்கள் தடுமாறுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது. 25 ஆண்டுகளுக்கு பின் தென்னாப்பிரிக்கா அணி இந்திய மண்ணில் இந்த வெற்றியை பெற்றுள்ளது. அதேபோல் இந்திய கிரிக்கெட் வரலாற்றில், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளிடம் 12 மாதங்களுக்கு ஒயிட் வாஷ் ஆகி இருப்பது இதுவே முதல்முறையாகும்.

இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுகையில், 2012ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்தது. அப்போது நான் ஒரு சபதம் எடுத்துக் கொண்டேன். இன்னொரு முறை இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தால், உடனடியாக ஓய்வை அறிவித்துவிட வேண்டும் என்பதுதான்.
அதுபோல் நியூசிலாந்து அணிக்கு எதிராக 3-0 என்ற தோல்வி அடைந்த போது என்னால் மீண்டும் விளையாட முடியவில்லை. உடனடியாக ஓய்வை அறிவித்துவிட்டேன். இந்த டெஸ்ட் தொடரில் ஆடிய இந்திய அணி மிகவும் சுமாரான அணி தான். போதிய தன்னம்பிக்கையோ, போதுமான அனுபவமோ யாரிடமும் இல்லை. அதேபோல் இந்த டெஸ்ட் தொடர் தோல்விக்கு யாரையும் குற்றம் சொல்ல முடியாது.
ஏனென்றால் இந்திய அணியின் எந்த வீரரும் வெற்றிக்காக என்ன.. தோல்வியை தவிர்க்க கூட போராடவில்லை. கொல்கத்தா டெஸ்டில் ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாட முடியவில்லை. இந்தப் போட்டியை போராடி டிரா கூட செய்ய முடியவில்லை. இந்திய அணி வீரர்களுக்கு தோற்க மாட்டேன் என்ற பிடிவாதம் இல்லாமல் உள்ளது.
அதேபோல் சாய் சுதர்சன், நிதிஷ் குமார் ரெட்டி, துருவ் ஜுரெல், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் உட்பட எந்த வீரருக்கும் அடுத்தப் போட்டியில் இருப்போமோ என்பதே தெரியாது. இந்திய அணி நிர்வாகம் அந்த தவறை செய்துவிட்டது என்பதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். இந்திய வீரர்களுக்கு போதுமான தன்னம்பிக்கையை கொடுத்திருக்க வேண்டும்.
நீ எப்படி ஆடினாலும் அடுத்தப் போட்டியில் விளையாடுவாய் என்ற நம்பிக்கையை கம்பீர் கொடுத்திருந்தால், அனைத்து வீரர்களும் சுயநலமான விளையாடாமல் நிச்சயம் போராடி இருப்பார்கள். ரஞ்சி டிராபியில் சிறப்பாக ஆடுவோரை கவனிக்க வேண்டும். ஐபிஎல் போட்டிகளின் தாக்கல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தெரிகிறது. தோற்க மாட்டேன் என்ற பிடிவாத குணம் கொண்ட வீரர்களை இந்திய அணி தேட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications