பாகிஸ்தானை வீழ்த்தி.. சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய இந்தியா! அடுத்த மேட்ச் யாருடன்? முழு விவரம்
கொழும்பு: டி20 உலகக் கோப்பை போட்டியில், நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றிருக்கிறது. பாக்., அணி திட்டமிட்டிருந்தால் எளிதாக ஜெயித்திருக்கலாம். ஆனால், மோசமாக விளையாடி தோற்றுவிட்டது. இந்நிலையில், இந்தியா அடுத்து யாருடன் மோதப்போகிறது? என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இஷான் கிஷன் 77 ரன்கள் குவிக்க, இந்தியா 175/7 எடுத்தது. பின்னர், இந்திய பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தானை 18 ஓவர்களில் 114 ரன்களுக்குச் சுருட்டினர்.

அச்சமின்றி ஆடிய இஷான் கிஷன், வெறும் 27 பந்துகளில் தனது அரை சதத்தை எட்டினார். மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் பந்துகளை தெறிக்கவிட்டு, இந்திய அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார்.
வெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், இது இந்தியாவிற்காக என்றார். இஷான் கிஷனின் ஆட்டத்தைப் புகழ்ந்த அவர், முதலில் பேட்டிங் செய்தது சிறந்த தேர்வு. அவர் வித்தியாசமாக யோசித்தார், பொறுப்பை எடுத்துக்கொண்ட விதம் அற்புதம் என்று பாராட்டி தள்ளினார்.
அதேபோல சுழற்பந்துவீச்சாளர் அக்ஷர் படேல், பாகிஸ்தானை வீழ்த்தியது குறித்து பொறுப்பான ரிப்ளை கொடுத்திருக்கிறார். "நாங்கள் அவர்களை ஒரு அணியாகவே பார்க்கிறோம்; போட்டி மனப்பான்மையுடன் பார்ப்பதில்லை" என்றார். இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் பெர்பாமென்ஸ் ரொம்பவும் மோசமானதாக இருந்தது. கேப்டன் சல்மான் ஆகா, தொடக்க வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் உட்பட முதல் இரு ஓவரிலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்தனர்.
பாபர் அசாம் ஐந்து ரன்களுக்கு போல்டு ஆனதும், பாகிஸ்தான் பெரும் சிக்கலில் மாட்டியது. உஸ்மான் கான் 44 ரன்கள் அடித்துப் போராடினார். ஆனால், அவர் ஸ்டம்பிங் ஆனவுடன் மற்ற பேட்ஸ்மேன்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ஆட்டத்திற்கு முன் இரு கேப்டன்களும் கைகுலுக்குவதைத் தவிர்த்தனர், இது ஆசிய கோப்பையிலிருந்தே தொடரும் நடைமுறை.
தற்போது பாகிஸ்தானை வீழ்த்தியதன் மூலம், இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. அடுத்த சுற்றில் பிப். 22 அன்று அகமதாபாத்தில் தென் ஆப்பிரிக்காவுடனும், பிப். 26 அன்று சென்னையில் ஜிம்பாப்வே/ஆஸ்திரேலியாவுடனும், மார்ச் 1 அன்று கொல்கத்தாவில் மேற்கிந்தியத் தீவுகளுடனும் மோதும். சூப்பர் 8 சுற்றுக்கு முன் நெதர்லாந்துடன் தனது கடைசி லீக் ஆட்டத்தை புதன்கிழமை அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா விளையாடும்.












Click it and Unblock the Notifications