நீதான்யா பயிற்சியாளர்.. ஐபிஎல் நேரத்தில் ஓய்வா.. இங்கிலாந்துக்கு பறக்கும் கம்பீர்.. காரணமே வேற!
சென்னை: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றதன் மூலமாக இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறார். குறிப்பாக ரோஹித் சர்மாவை 4 ஸ்பின்னர்களுடன் விளையாடலாம் என்று ஒப்புக் கொள்ள வைத்தது மற்றும் பும்ராவின் இடத்தில் வருண் சக்கரவர்த்தியை கொண்டு வந்தது ஆகிய முடிவுகளை கம்பீர் எடுத்திருக்கிறார்.
தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோரை சமாதானம் செய்து கம்பீர் அடைந்துள்ள வெற்றி, பிசிசிஐ நிர்வாகிகளையும் வியக்க வைத்துள்ளது. இந்த நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளதால், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் குடும்பத்தினருடன் நேரம் செலவிடவும் ஓய்வெடுக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆனால் கவுதம் கம்பீர் வேறு முடிவு ஒன்றை எடுத்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் மீது தனது கவனத்தை திருப்பியுள்ளார். ஏற்கனவே கவுதம் கம்பீர் பயிற்சியாளராக வந்த பின், இந்திய அணி ஆடிய 10 போட்டிகளில் 3ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராகவும், ஆஸ்திரேலியா மண்ணில் ஆஸ்திரேலியா அணியும் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.
இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தனது தடத்தை பதிக்க கம்பீர் தீவிரமாக இருக்கிறார். இதனால் ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் போட்டிகளின் போதே இங்கிலாந்துக்கு செல்ல கம்பீர் முடிவு எடுத்துள்ளார். இந்திய அணி ஜூன் மாதம் 3வது வாரத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்தியா ஏ அணி இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதனால் இந்தியா ஏ அணிக்கு பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பயணிக்க முடிவு எடுத்துள்ளார். இது பிசிசிஐ நிர்வாகிகளையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஏனென்றால் இந்திய அணியின் பயிற்சியாளர்கள் இந்திய ஏ அணியுடன் பயணிக்க மாட்டார்கள்.
இந்திய அணிக்கு எப்படியான வீரர்கள் தேவை என்பதை மட்டுமே என்சிஏ மற்றும் இந்திய ஏ அணியின் பயிற்சியாளர்களிடம் அறிவுறுத்துவார்கள். ஆனால் கவுதம் கம்பீர் தாமாகவே முன் வந்து இந்திய ஏ அணியுடன் பயணிக்க முடிவு செய்துள்ளார். இதற்கு பின் மற்றொரு காரணமும் இருப்பதாக கூறப்படுகிறது. அது என்னவென்றால், இந்திய ஏ அணியில் இருப்பவர்கள் கிட்டத்தட்ட ரிசர்வ் வீரர்கள் என்றே சொல்லலாம்.
அந்த ரிசர்வ் வீரர்களில் யாரெல்லாம் முழுமையாக தயாராகிவிட்டார்கள் என்பதை அறிய கம்பீர் முடிவு எடுத்திருக்கிறார். அதேபோல் இந்திய ஏ அணியுடன் சில சீனியர் வீரர்களையும் முன்னதாகவே அனுப்ப பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் நன்றாக ஆடிய வீரர்களை டெஸ்ட் அணி பக்கம் கொண்டு வரவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
அதேபோல் இங்கிலாந்துக்கு முன்னதாகவே செல்வதன் மூலமாக அங்குள்ள பிட்ச்களின் தன்மை, அதன் செயல்பாடுகள், திட்டங்களை விரைவாக உருவாக்க முடியும். அதுமட்டுமல்லாமல் எந்த பிட்சிற்கு எந்த மாதிரியான வீரர்கள் தேவை, இந்திய அணித் தேர்வு உள்ளிட்டவை குறித்தும் முடிவு எடுக்க வசதியாக இருக்கும். இதனால் கம்பீரின் செயல்பாடுகளை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications