ஐபிஎல் 2025இல் அதிக சம்பளம் வாங்கும் கேப்டன்கள்.. யார் அதிகம்.. யார் குறைவு! சிஎஸ்கே ருதுராஜ் எங்கே?
டெல்லி: இன்னும் சில நாட்களில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் 10 அணிகளை வழிநடத்தும் கேப்டன்கள் யார்.. அவர்கள் எத்தனை கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.. காஸ்ட்லியான கேப்டன் யார் என்பது போன்ற தகவல்களை நாம் பார்க்கலாம்.
ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. பெங்களூரில் மார்ச் 22ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் பெங்களூர் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த ஐபிஎல் தொடரில் 10 அணிகள் மோதும் நிலையில், அந்த அணிகளின் கேப்டன்கள் யார்! அவர்கள் எத்தனை கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டனர் என்பது குறித்த விவரங்களை நாம் பார்க்கலாம்.

ரிஷப் பண்ட்
ஐபிஎல் கேப்டன்களில் அதிகபட்ச சம்பளம் வாங்கும் வீரர் என்றால் அது ரிஷப் பண்ட் தான். கடந்த ஏலத்தில் ஐபிஎல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு அவர் ரூ.27 கோடிக்கு ஏலம் போனார். கடந்த 2016ம் ஆண்டு முதல் டெல்லி அணிக்காக விளையாடி வரும் ரிஷப் பண்ட், இந்த முறை லக்னோ அணியை வழிநடந்த உள்ளார். லக்னோ அணியைப் பொறுத்தவரைக் கடந்த 2022 மற்றும் 2023இல் பிளே ஆப் சுற்று வரை சென்றது. இருப்பினும், கடந்தாண்டு லீக் சுற்றுடன் நடையைக் கட்டினர்.

ஸ்ரேயாஸ் ஐயர்
இந்த லிஸ்டில் அடுத்து இருப்பவர் ஸ்ரேயாஸ் ஐயர். கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி கோப்பையை வென்ற நிலையில், அந்த டீமை ஸ்ரேயாஸ் வழிநடத்தியிருந்தார். இருப்பினும், அணி நிர்வாகம் அவரை விடுவித்த நிலையில், ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் அணி அவரை வாங்கியது. ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச தொகைக்கு ஏலம் போன வீரர் ஸ்ரேயாஸ் ஆவர்.
அவர் கடந்த 2015 முதல் 2021 வரை டெல்லி அணிக்காக விளையாடினார். 2022, 2023ல் கொல்கத்தா அணியை வழிநடத்திய அவர், இப்போது பஞ்சாப் அணியை வழிநடத்துகிறார். பஞ்சாப் அணி கடந்த 10 ஆண்டுகளாகவே லீக் சுற்றுடன் வெளியேறி வரும் நிலையில், இந்த மோசமான சாதனையை ஸ்ரேயாஸ் முடிவுக்குக் கொண்டு வருவாரா என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

பேட் கம்மின்ஸ்
ஐபில் தொடரில் அதிக மதிப்புள்ள கேப்டன்களில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் பேட் கம்மின்ஸ்.. ஹைதராபாத் அணி இவரை 18 கோடிக்குத் தக்கவைத்துக் கொண்டது. ஆஸ்திரேலியாவின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான கடந்தாண்டு ஹைதராபாத் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார். அதற்கு 3 ஆண்டுகளாக லீக் சுற்றுடன் நடையைக் கட்டிய ஹைதராபாத் அணிக்காக இது மிகப் பெரிய பாசிட்டிவ் ரிசல்ட். இப்போது ஹைதராபாத் அணியை 2வது முறையாக கம்மின்ஸ் வழிநடத்தவுள்ளார்.

கேப்டன் ருதுராஜ்
அடுத்து இருப்பவர் தான் நம்ம சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ்.. கடந்த 2019ம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணிக்காக விளைாடி வரும் ருதுராஜ் கடந்தாண்டு தான் முதல்முறையாக கேப்டனாக நியமிக்கப்பட்டார். தல தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில், ருதுராஜ் அணியை வழிநடத்தினார். 7 போட்டிகளில் வென்று சிஎஸ்கே 5வது இடத்தை பிடித்த போதிலும், தோனிக்கு பிறகு அணியை வழிநடத்தும் ஒரு நம்பிக்கைக்குரிய கேப்டனாக ருதுராஜ் கருதப்படுகிறார். ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அவரை 18 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக் கொண்டது.

சஞ்சு சாம்சன்
இதில் அடுத்து இருப்பவர் சஞ்சு சாம்சன். இவர் ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமானதே ராஜஸ்தான் அணிக்காகத் தான். 2013 முதல் 2015 வரை ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய அவர், இடையில் 2 ஆண்டுகள் மட்டும் டெல்லி அணிக்காக விளையாடினார். 2018 முதல் மீண்டும் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். 2021இல் இவர் ராஜஸ்தான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் ராஜஸ்தான் அணி ஒரு முறை பிளே ஆப் சுற்றுக்கும் ஒரு முறை இறுதிப் போட்டிக்கும் சென்றுள்ளது. இவரை ராஜஸ்தான் ரூ.18 கோடிக்கு தக்கவைத்தது.

அக்சர் படேல்
அடுத்து அக்சர் படேல். தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத ஆல் ரவுண்டராக உள்ள அக்சர் படேல், 2013 முதலே ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். தொடக்கத்தில் மும்பை, பஞ்சாப் அணிகளில் இருந்த அவரை 2019ல் டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது. ராகுல் டெல்லியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் கேப்டன் பதவியை ஏற்க விரும்பவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து அக்சர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரை டெல்லி ரூ.16.5 கோடிக்கு தக்கவைத்திருந்தது.

சுப்மன் கில்
அடுத்து சுப்மன் கில். இவர் கடந்தாண்டு தான் குஜராத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் குஜராத் அணி 14 போட்டிகளில் 5ல் மட்டுமே வென்று புள்ளிப் பட்டியலில் 8வது இடம் பிடித்து வெளியேறியது. இந்த முறை இவரது தலைமையில் குஜராத் அணி மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரைக் குஜராத் அணி ரூ.16.5 கோடிக்கு தக்கவைத்திருந்தது.

பாண்டியா
மும்பை அணிக்குப் பல ஆண்டுகளாக கேப்டனாக இருந்தவர் ரோஹித் சர்மா. அவரது தலைமையில் தான் மும்பை அணி பவர் ஹவுஸாக உருவெடுத்தது. ஆனால், கடந்த 2023ல் குஜராத் அணியில் இருந்து டிரேட் மூலம் பெறப்பட்ட ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இருப்பினும், அதை மும்பை ரசிகர்களே ஏற்கவில்லை. மும்பை அணியின் ஆட்டமும் கடந்தாண்டு மோசமாகவே இருந்தது. 14ல் 4 போட்டிகளில் மட்டுமே மும்பை வென்றது. இந்த முறை மும்பையை மீண்டும் பவர் ஹவுஸாக மாற்றும் பொறுப்பு ஹர்திக் வசம் உள்ளது. அவரை ரூ.16.35 லட்சத்திற்கு மும்பை தக்கவைத்தது குறிப்பிடத்தக்கது.

ரஜத் படிதார்
ஐபிஎல் வரலாற்றில் அதிக ரசிகர்களைக் கொண்ட அணிகளில் ஒன்று பெங்களூர். என்ன தான் இத்தனை ஆண்டுகளில் ஒரு முறை கூட கப் அடிக்கவில்லை என்றாலும் பெங்களூர் ரசிகர்களின் எண்ணிக்கை குறையவே இல்லை. கடந்தாண்டு கேப்டனாக இருந்த டூ பிளெசிஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், கோலி மீண்டும் கேப்டன் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அவர் கேப்டனாக விரும்பாததால் ரஜத் படிதார் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அவரை ரூ.11 கோடிக்கு பெங்களூர் தக்கவைத்திருந்தது.

ரஹானே
இந்த லிஸ்டில் கடைசியில் வருபவர் தான் கொல்கத்தா கேப்டன் அஜிங்க்யா ரஹானே. கடந்தாண்டு கோப்பையை வென்று கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயரை விடுவித்த நிலையில், அவர்களுக்கு கேப்டன் தேவை என்ற சூழலே இருந்தது. பலரும் வெங்கடேஷ் ஐயர் தான் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று நினைத்தனர். ஆனால், அனைவருக்கும் வியப்பைத் தரும் வகையில் ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரை கொல்கத்தா அணி ரூ.1.5 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications