IPL 2025: ஐபிஎல் தொடர் பாதியோடு நிறுத்தம்.. எஞ்சிய போட்டிகள் நடக்குமா? பிசிசிஐ எடுத்த முடிவு!
மும்பை: 2025 ஐபிஎல் கிரிக்கெட் தற்காலிகமாக நிறுத்த பிசிசிஐ முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், நேற்று தரம்சாலா மைதானத்தில் நடைபெற்ற பஞ்சாப் - டெல்லி இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் எஞ்சிய போட்டிகள் நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார் 22ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இன்னும் 2 வாரங்களில் முடிவடைய இருந்தது. இந்த சீசனில் ஆர்சிபி, குஜராத், மும்பை, பஞ்சாப், டெல்லி ஆகிய 5 அணிகளும் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

குறிப்பாக ஆர்சிபி அணி 11 போட்டிகளில் 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் இருந்தது. இதனால் ஆர்சிபி ரசிகர்களின் 18 ஆண்டு கால கனவு நிறைவேறும் என்று அந்த அணியின் ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் அறிவிக்கப்படாத போர் நடந்து வருகிறது.
பயங்கரவாதிகளின் பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுத்த நிலையில், நேற்றிரவு பாகிஸ்தான் ராணுவம் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதலை நடத்தியது. இதனை இந்திய பாதுகாப்பு படை வெற்றிகரமான முறியடித்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தரம்சாலாவில் நடைபெற்ற பஞ்சாப் - டெல்லி இடையிலான ஐபிஎல் போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டது.
இதனால் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நடக்குமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்தது. இதனைத் தொடர்ந்து இன்று ஐபிஎல் நிர்வாகக் குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில், வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பு கருதி ஐபிஎல் தொடரை நிறுத்தி வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை ஐபிஎல் மற்றும் பிசிசிஐ நிர்வாகம் முறையாக விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எஞ்சிய போட்டிகள் எப்போது நடக்கும் என்பது தெரியவில்லை. எஞ்சிய போட்டிகளுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று பார்க்கப்பட்டாலும், அதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதா என்பதும் சந்தேகம் தான்.
ஏனென்றால் ஜூன் மாதத்தில் இருந்து வெளிநாட்டு வீரர்களுக்கு தேசிய அணிகளுக்கான போட்டிகள் தொடங்கிவிடும். இதனால் 18வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் கைவிடப்பட்டதா என்ற சந்தேகமும் ரசிகர்களிடையே நிலவி வருகிறது. கொரோனா பரவிலின் போதே ஐபிஎல் தொடரை பிசிசிஐ நடத்தி இருந்த நிலையில், நிச்சயமாக இந்த சீசனை நடத்தி முடிக்கும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications