அந்த ஒரு மும்பை பேட்ஸ்மேன்.. ஸ்பின்னர்கள் விடக்கூடாது.. சிஎஸ்கே வெற்றிக்கு ஆப்பு வைத்துவிடுவார்!
சென்னை: ஐபிஎல் தொடரில் இன்றிரவு நடக்கும் போட்டியில் வலிமை வாய்ந்த அணிகளான சிஎஸ்கே - மும்பை விளையாடவுள்ளது. ஏற்கனவே கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இரு அணிகளும் எந்த வியூகத்துடன் களமிறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இந்த போட்டியில் மும்பை அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் களமிறங்குகிறார்.
இதனால் மும்பை அணி தனது பலம்வாய்ந்த வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா ஆகிய இருவரும் இல்லாமல் களமிறங்குகிறது. இதனால் சிஎஸ்கே அணி வெற்றிபெற ஓரளவிற்கு மட்டும் வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் மும்பை அணியின் பேட்டிங் வரிசை பலமானதாக அமைந்திருக்கிறது.

ரோஹித் சர்மா, ரிக்கல்டன், வில் ஜாக்ஸ், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ராபின் மின்ஸ், மிட்சல் சான்ட்னர், தீபக் சஹர் வரை பேட்டிங் வரிசையில் நீண்டுள்ளது. கடந்த முறை மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வெற்றிபெற்றாலும், ரோஹித் சர்மா சதம் விளாசி அதிர்ச்சி கொடுத்தார். அதேபோல் மும்பை அணியின் முக்கியமான வீரராக திலக் வர்மா இருக்கிறார்.
சிஎஸ்கே அணிக்கு எதிராக சூர்யகுமார் யாதவ் பெரிதாக ரன்களை சேர்த்ததில்லை. ஆனால் திலக் வர்மாவின் ஆட்டம் சிஎஸ்கே அணிக்கு எப்போதும் சிக்கலாக அமைந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்திய அணியில் இடம்பிடித்த திலக் வர்மா அடுத்தடுத்து சதங்களை விளாசி, உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கிறார். ஸ்பின்னர்களுக்கு எதிராகவும் அவரின் ஆட்டம் அபாரமாக இருக்கிறது.
அஸ்வின், ஜடேஜா, நூர் அஹ்மத் ஆகிய 3 ஸ்பின்னர்கள் இருந்தாலும், திலக் வர்மாவை கட்டுப்படுத்தவில்லை என்றால், சிஎஸ்கே அணியின் வெற்றி எளிதாக இருக்காது. இடதுகை பேட்ஸ்மேன் என்பதால் எளிதாக ஜடேஜாவை அட்டாக் செய்ய முடியும். அதுமட்டுமல்லாமல் மும்பை அணிக்காக நம்பர் 3 பேட்டிங் வரிசையில் திலக் வர்மா களமிறங்க அதிக வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.
பவர் பிளே ஓவர்கள் முடிவடைந்து வரும் ஸ்பின்னர்களை அட்டாக் செய்ய ஏதுவாக நம்பர் 3ல் திலக் வர்மா வரலாம். அப்படி களமிறங்கினால், அவரை 2 ஓவர்களுக்குள் விக்கெட் வீழ்த்த வேண்டும். அஸ்வின் மற்றும் நூர் அஹ்மத் மூலமாக சிஎஸ்கே அணி விக்கெட்டை வீழ்த்தவில்லை என்றால், சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை அணி 200 ரன்களை எளிதாக எட்ட வாய்ப்புள்ளது.
கடந்த சீசனிலேயே 200 ரன்களை சேஸிங் செய்ய முடியாமல் சிஎஸ்கே அணி தடுமாறியது. இம்முறையும் பேட்டிங் வரிசையில் பெரிய மாற்றங்களை சிஎஸ்கே அணி செய்யவில்லை. இதனால் 200 ரன்களுக்கு கீழ் இலக்கு நிர்ணயிக்கப்பட்டால் எளிதாக சிஎஸ்கே அணியால் வெல்ல முடியும் என்று கருதப்படுகிறது. இதனால் திலக் வர்மாவின் விக்கெட்டை வீழ்த்துவது சிஎஸ்கே அணிக்கு முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications