ஆட்டோ ஓட்டுநரின் மகன் டூ மும்பை வீரர்..சிஎஸ்கேவை சைலண்ட் செய்த விக்னேஷ் புத்தூர்..யார்ரா இந்த பையன்?
சென்னை: 18வது சீசனுக்கான ஐபிஎல் தொடரின் 3வது லீக் போட்டியில் சிஎஸ்கே அணியை எதிர்த்து மும்பை அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்களை சேர்த்தது. இதன்பின் பவுலிங் செய்ய களமிறங்கும் முன்பாக மும்பை அணி தரப்பில் இம்பேக்ட் பிளேயராக ரோஹித் சர்மாவுக்கு பதில் அறிமுக வீரரான விக்னேஷ் புத்தூர் கொண்டு வரப்பட்டார்.
23 வயதாகும் கேரளாவைச் சேர்ந்த விக்னேஷ் புத்தூர் சுழற்பந்துவீச்சாளராவார். சேப்பாக்கம் மைதானம் என்பதால் மும்பை அணி அவரை களமிறக்குகிறது என்று சாதாரணமாக கருதப்பட்டது. ஆனால் முதல் ஓவரிலேயே சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட்டை வீழ்த்தி திரும்பி பார்க்க வைத்தார். தொடர்ந்து 2வது ஓவரில் சிவம் துபே விக்கெட்டையும், 3வது ஓவரில் தீபக் ஹூடா விக்கெட்டையும் வீழ்த்தினார்.

இது சிஎஸ்கே ரசிகர்களையே அதிர வைத்தது. ஏனென்றால் யாரென்றே தெரியாத ஒரு வீரர் திடீரென ஆட்டத்தை மாற்றிவிடுவார் என்று சிந்திக்க வைத்துவிட்டார். இதற்கு முன்பாக கேரளா கிரிக்கெட் லீக் தொடரில் ஆலபி ரிப்பிள்ஸ் அணிக்காக 2 போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ஆனால் மும்பை அணியின் ஸ்கவ்ட்டிங் நிர்வாகிகள் கண்களில் விக்னேஷ் புத்தூர் சிக்கி இருக்கிறார்.
இதையடுத்து மும்பை அணியின் முகாமிற்கு விமான டிக்கெட் போட்டு அழைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சில சீனியர் வீரர்களுக்கு பவுலிங் செய்ய பணிக்கப்பட்டுள்ளார். அவரின் பவுலிங்கில் லைன், லெந்த், ஆக்ஷன், ஃபீல்ட்-க்கு ஏற்றவாறு வேரியேஷன் காட்டியது என்று அவர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதன்பின் எந்த தகவலும் சொல்லப்படாமல் மீண்டும் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்.
அதேபோல் விக்னேஷ் புத்தூரும் பெரிய எதிர்பார்ப்புடன் சென்றிருக்கவில்லை. ஏனென்றால் அவரின் குடும்ப சூழல் அவருக்கு எப்போதும் ஏமாற்றத்திற்கு தயாராக இருக்கவே பழக்கி இருக்கிறது. அவரின் தந்தை சாதாரண ஆட்டோ ஓட்டுநர்தான். தாய் வீட்டிலேயே இருந்து அவருக்கு உதவிகளை செய்து வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் விக்னேஷ் புத்தூர் பெரிதாக கேரளாவின் சீனியர் அணிகளில் கூட விளையாடியதில்லை.
ஆனால் ஐபிஎல் மெகா ஏலத்தன்று விக்னேஷ் புத்தூர் பார்த்து கொண்டிருந்த போது, திடீரென மும்பை அணி அவரை அடிப்படை விலையான ரூ.30 லட்சத்திற்கு வாங்கி இருக்கிறது. இதையடுத்து விக்னேஷ் புத்தூரின் வாழ்க்கையே மொத்தமாக மாறியுள்ளது. 11 வயதில் தொடங்கிய கிரிக்கெட் பயணம், அவருக்கு ஏராளமான குழப்பங்களுடன் அமைந்திருக்கிறது. ஏனென்றால் முதல் சில ஆண்டுகள் வேகப்பந்துவீச்சாளராக முயன்றிருக்கிறார்.
அதன்பின் குல்தீப் யாதவை பார்த்துதான் சைனாமேன் ஸ்டைலில் பவுலிங் செய்ய முயற்சித்து, சிறப்பாக செய்ய தொடங்கியுள்ளார். அதுதான் இன்று அவரை மும்பை அணிக்குள் கொண்டு வந்துள்ளது. பயிற்சி ஆட்டங்களிலும் அசத்த, நேரடியாக சிஎஸ்கே அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே மும்பை அணி களமிறக்கியுள்ளது. அவரும் அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை காப்பாற்றி தனது பெயரை அழுத்தமாக ஒலிக்க வைத்துவிட்டார்.












Click it and Unblock the Notifications