ஓசி டிக்கெட்.. காவ்யா மாறனை பாடுபடுத்தும் ஐதராபாத் கிரிக்கெட் சங்கம்.. டென்ஷனான ரேவந்த் ரெட்டி!
ஐதராபாத்: ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் ஒதுக்கீடு தொடர்பாக ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐதராபாத் அணியின் சொந்த மைதானத்தில் இடமாற்றம் செய்ய அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் ஆலோசித்து வருவதாக கூறப்படும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
18வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மெகா ஏலத்திற்கு பின் நடக்கும் சீசன் என்பதால், எந்த அணி கோப்பையை வெல்லும் என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை. ஏனென்றால் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை, சிஎஸ்கே உள்ளிட்ட அணிகள் சொதப்பி வரும் நிலையில், டெல்லி, ஆர்சிபி மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட அணிகள் புள்ளிப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.

ஐதராபாத் கம்பேக்
அதேபோல் கடந்த முறை இறுதிப்போட்டி வரை முன்னேறிய ஐதராபாத் அணி, இம்முறை கூடுதல் பலமாக களமிறங்கியது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே மரண அதிரடியை வெளிப்படுத்திய ஐதராபாத், அடுத்தடுத்த 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. இருந்தாலும் ஐதராபாத் அணி மிகச்சிறந்த கம்பேக்கை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.
டிக்கெட் விற்பனை
இந்த சீசனில் அனைத்து மைதானங்களிலும் டிக்கெட் விற்பனை ஜோராக நடக்கிறது. 13 மைதானங்களில் ஐபிஎல் தொடர் நடக்கும் நிலையில், டிக்கெட் பெறுவதற்கு ரசிகர்கள் மத்தியில் கூடுதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் அணியின் உரிமையாளர்களே திண்டாடி வருகின்றனர். ஏனென்றால் ஒவ்வொரு மைதானங்களிலும் அந்த அணி விளையாடும் போது, மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு இலவச டிக்கெட்டுகள் அளிக்க வேண்டும்.
காவ்யா மாறன் vs ஐதராபாத் கிரிக்கெட் சங்கம்
இந்த விவகாரம் தொடர்பாக ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ஐதராபாத் அணியின் சொந்த மைதானத்தை இடமாற்றம் செய்ய காவ்யா மாறன் ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது.
ரேவந்த் ரெட்டி உத்தரவு
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். ஐதராபாத் அணியை சன் டிவி குழுமம் வாங்கியது முதல், அந்த அணி விளையாடும் ஒவ்வொரு போட்டியையும் காவ்யா மாறன் நேரில் பார்த்து உற்சாகப்படுத்துவார். தற்போது ஐதராபாத் அணி காவ்யா மாறன் நிர்வகித்து வருகிறார்.
3,900 டிக்கெட்டுகள்
வெற்றி, தோல்வியின் போது காவ்யா மாறன் மைதானத்தில் ரியாக்ட் செய்தாலும், வீரர்களை சிறப்பாக நிர்வகித்து வருகிறார். இந்த நிலையில் இந்த ஐபிஎல் சீசனின் ஒவ்வொரு போட்டிக்கும் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம் தரப்பில் 12 ஆண்டுகளுக்கு 3,900 இலவச டிக்கெட் பாஸ் அளிக்கப்பட வேண்டும்.
பிரச்சனை செய்யும் கிரிக்கெட் சங்கம்
அதில் மைதானத்தில் உள்ள F12A கார்ப்பரேட் பாக்ஸில் மட்டும் 50 டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால் இம்முறை F12A கார்ப்பரேட் பாக்ஸ் டிக்கெட் எண்ணிக்கை 30ஆக குறைக்கப்பட்டது. இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம், கூடுதலாக 20 டிக்கெட்டுகளை வேறு கார்ப்பரேட் பாக்ஸில் அளிக்க வேண்டும் என்று ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடிதம் எழுதிய ஐதராபாத் அணி
ஐதராபாத் மைதானத்தில் F3 கார்ப்பரேட் பாக்ஸில் டிக்கெட்டுகளை வழங்க வேண்டும். அப்படியில்லை என்றால், கார்ப்பரேட் பாக்ஸ் அரங்கை பூட்டிவைத்துவிடுவோம் என்று மிரட்டி இருக்கின்றனர். இதனால் அதிருப்தியடைந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம் தரப்பில் கடிதம் ஒன்று எழுதி அனுப்பப்பட்டுள்ளது.
கடிதத்தில் என்ன?
எஸ்ஆர்ஹெச் அணியின் ஜெனரல் மேனேஜரான ஸ்ரீநாத் எழுதிய கடிதத்தில், ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் சார்பாக இப்படியான அழுத்தம் கொடுக்கப்படுவது முதல்முறையல்ல. கடந்த 2 சீசன்களாகவே ஐதராபாத் அணி நிர்வாகிகள் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். இம்முறை ஐதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவரே பல்வேறு வகையில் மிரட்டுகிறார்.
விளைவுகள்
அவர்களின் செயல்பாடுகள் ஐதராபாத் அணி இந்த மைதானத்தில் விளையாட தேவையில்லை என்பதையே உணர்த்துகிறது. இது இப்படியே தொடர்ந்தால் நாங்கள் பிசிசிஐ, தெலங்கானா அரசு மற்றும் எங்களின் அணி நிர்வாகம் ஆகியவற்றுடன் ஆலோசித்து வேறு மைதானத்தில் விளையாட முடிவு செய்ய வேண்டிய நிலை உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் விளக்கம்
இந்த விவகாரம் தொடர்பாக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனாலும் ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் தரப்பில் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத் அணி நிர்வாகத்திடம் இருந்து அப்படியொரு கடிதம் வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மவுனம் காக்கும் காவ்யா மாறன்
அதேபோல் இந்த சர்ச்சை தொடர்பாக காவ்யா மாறன் மற்றும் கலாநிதி மாறன் ஆகியோர் தரப்பில் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. இதனால் ஏப்ரல் 6ஆம் தேதி நடக்கவுள்ள ஐதராபாத் - குஜராத் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் காவ்யா மாறன் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை அறிக்கை தொடர்பாகவும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications