‛ரிசர்வ் டே’ உண்டா? இந்தியா-நியூசிலாந்து போட்டியில் மழை பெய்தால் என்ன நடக்கும்? இதோ ஐசிசி ரூல்
தரம்சாலா: 50 ஓவர் உலககோப்பை தொடரில் இன்று இந்தியா-நியூசிலாந்து அணிகள் தரம்சாலா மைதானத்தில் மோத உள்ளன. இங்கு போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை பெய்தால் அடுத்து என்ன நடக்கும்? ‛ரிசர்வ் டே' அடிப்படையில் மாற்று தேதியில் போட்டி நடத்தப்படுமா? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
ஐசிசியின் 50 ஓவர் உலககோப்பை போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நடப்பு உலககோப்பை தொடரில் இந்தியா தான் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றியை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அணிகளை வீழ்த்தியுள்ளது.

அதேபோல் நியூசிலாந்து அணியும் தான் எதிர்கொண்ட 4 அணிகளை தோற்டித்துள்ளது. இங்கிலாந்து, நெதர்லாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தி உள்ளது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில் தலா 8 புள்ளிகள் பெற்றுள்ளன.
இருப்பினும் ரன்ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நியூசிலாந்து அணியும், 2வது இடத்தில் இந்திய அணியும் உள்ளன. இதற்கிடையே தான் இன்று இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி என்பது இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலா மைதானத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. இரு அணி வீரர்களும் வெற்றி பயணத்தை தொடர்வதில் ஆர்வமாக இருப்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
அதோடு கடந்த 2003ம் ஆண்டு வரை தற்போது வரையிலான உலககோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியை இந்தியா வீழ்த்தியது இல்லை. தொடர்ந்து நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோற்று வருகிறது. இதற்கு பழி தீர்க்க இந்தியா காத்திருக்கும் அதேவேளையில் அந்த வரலாற்றை அப்படியே தொடர வைக்க நியூசிலாந்து அணி வீரர்கள் போராடுவார்கள். இதனால் இந்த போட்டியை காண இருநாட்டு ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.
இத்தகைய சூழலில் தான் இன்றைய போட்டியின்போது மழை குறுக்கிட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த சில நாட்களாக அவ்வப்போது தரம்சாலாவில் மழை பெய்து வரும் நிலையில் போட்டி நடக்கும் இன்றைய தினமும் மழைக்கான வாய்ப்பு உள்ளது. அதாவது மதிய வேளையில் 43 சதவீதம் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வெப்பநிலை என்பது 13 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏற்கனவே பெய்த மழையால் மைதானம் மோசமான நிலையில் இருக்கும் நிலையில் இன்று சிறிது நேரம் பெய்தாலே போட்டிக்கு அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. அதாவது போட்டி ரத்தாகவும் வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அப்படி ஒருவேளை இன்றைய போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டால் ‛ரிசர்வ் டே' அடிப்படையில் மாற்றுத்தேதிக்கு போட்டி மாற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் 2023 உலகக் கோப்பைக்கான ஐசிசி விதிமுறைகளின்படி இந்தியா-நியூசிலாந்து உள்பட எந்த அணிகளுக்கு இடையேயான லீக் போட்டிக்கு ‛ரிசர்வ் டே' என்ற விதிமுறை என்பது இல்லை. இதனால் இன்றைய தினம் இந்தியா-நியூசிலாந்து போட்டி மழையால் கைவிடப்பட்டால் மாற்று தேதியில் போட்டி நடக்காது. மாறாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications