நீதான்யா இனி.. குஜராத் அணியின் லோன் வாரியர் சாய் சுதர்சன்.. பும்ராவையே திரும்பி பார்க்க வைத்த தமிழன்
சண்டிகர்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்திருந்தாலும், இளம் வீரர் சாய் சுதர்சனின் ஆட்டம் ஒட்டுமொத்த மும்பை அணி வீரர்கள், நிர்வாகிகளையும் அதிர வைத்துள்ளது. அவர் களத்தில் இருக்கும் வரை மும்பை அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜெயவர்தனே முகத்தில் கொஞ்சம் கூட நம்பிக்கையே இல்லை. இதனை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் எலிமினேட்டர் போட்டியில் குஜராத் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 228 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

ஆடிப்போன மும்பை
குஜராத் அணிக்காக சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 49 பந்துகளில் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உட்பட 80 ரன்களை விளாசி தள்ளினார். ஆட்டத்தை நிச்சயம் முடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, க்ளிசன் பந்தில் போல்டாகி வெளியேறினார். ஆனால் சாய் சுதர்சன் களத்தில் இருந்த வரை மும்பை அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜெயவர்தனே முகத்தில் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை.
நெஹ்ராவாக மாறிய ஜெயவர்தனே
ஒவ்வொரு பந்துக்கும் கேப்டனை போல் ஃபீல்டிங்கை மாற்றி கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் ஆஷிஷ் நெஹ்ராவை போல் மைதானத்தில் ஹர்திக் பாண்டியாவிடம் பேசி கொண்டே இருந்தார். சாய் சுதர்சன் விக்கெட்டை வீழ்த்திய பின்னரே, மும்பை அணியின் ஓய்வறையில் நம்பிக்கை வந்தது. எப்போதெல்லாம் மும்பை அணியின் கைகள் ஓங்குகிறதோ, அப்போதெல்லாம் சிக்ஸ், பவுண்டரியை விளாசினார்.
759 ரன்கள் குவித்த சாய் சுதர்சன்
இந்த ஐபிஎல் தொடர் சாய் சுதர்சனுக்கு அற்புதமான சீசனாக அமைந்துள்ளது. ஏனென்றால் 15 போட்டிகளில் விளையாடியுள்ள சாய் சுதர்சன் ஒரு சதம், 6 அரைசதம் உட்பட 759 ரன்களை குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் இவ்வளவு ரன்களை குவித்திருப்பது இதுவே முதல்முறையாகும். அத்தனை வீரர்களும் பும்ராவை அட்டாக் செய்வதை தவிர்த்த போது, நேற்றைய ஆட்டத்தில் பும்ரா பந்திலும் முயற்சித்தார்.
கன்சிஸ்டன்சி
அதுமட்டுமல்லாமல் டி வில்லியர்ஸ், பில் சால்ட், டிராவிஸ் ஹெட், கிளான், பூரனை போல் அதிரடியான ஷாட்களால் இந்த ரன்களை சேர்க்காமல், கிரிக்கெட்டின் இலக்கணத்தில் உள்ள ஷாட்கள் மூலமாக இவ்வளவு ரன்களை குவித்துள்ளார். கிட்டத்தட்ட க்ரீஸை பயன்படுத்தி, ஃபீல்டர்களை குழப்பி சாய் சுதர்சன் எடுக்கும் ரன்கள் அப்படியே விராட் கோலி செய்வது. இதனால் இந்திய அணியின் விராட் கோலியின் இடத்தை வரும் காலத்தில் சாய் சுதர்சன் நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications