எதிரணி பிளான் பற்றி கவலையில்லை.. சிக்சர் வேட்டைக்கு பின் பேட்டிங் ரகசியத்தை சொன்ன வைபவ் சூர்யவன்ஷி!
மும்பை: எனக்காக எதிரணி என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்பதைப் பற்றி நான் யோசிப்பதோ, கவலைப்படுவதோ இல்லை என்று வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார். என்னுடைய திட்டம் என்ன என்பதில் மட்டுமே நான் கவனம் செலுத்துவதாக கூறிய அவர், மைதானத்தில் இறங்கினால் எப்போதும் போல இயல்பான கிரிக்கெட்டை விளையாடவே முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2026 எலிமினேட்டர் போட்டியில் ஐதராபாத் அணியை துவம்சம் செய்துள்ளார் வைபவ் சூர்யவன்ஷி. 29 பந்துகளில் 12 சிக்ஸ், 5 பவுண்டரிகளுடன் 97 ரன்களை வைபவ் சூர்யவன்ஷி விளாசியது ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஜாம்பவான்களையும் திரும்பி பார்க்க வைத்தது. ஒரே சீசனில் 65 சிக்சர்களுடன் புதிய உலக சாதனை படைத்துள்ளார் 15 வயது தொடக்க ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷி.

இந்த நிலையில் தனது பேட்டிங் ரகசியம் குறித்து வைபவ் சூர்யவன்ஷி பேசுகையில், விளையாட்டின் போது ஏற்படும் அழுத்தங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வைபவ் சூர்யவன்ஷி, எனக்கு ஏதாவது ஒரு இடத்தில் பேட்டிங்கில் சிரமம் இருப்பதாகத் தோன்றினால், நான் அந்தப் பிழையைச் சரிசெய்வதில் மட்டும்தான் கவனம் செலுத்துவேன்.
அதை விடுத்து, எனக்காக எதிரணி என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்பதைப் பற்றி நான் யோசிப்பதோ, கவலைப்படுவதோ இல்லை. அது அவர்களது திட்டம். என்னுடைய திட்டம் என்ன என்பதில் மட்டுமே நான் கவனம் செலுத்துகிறேன். மைதானத்தில் இறங்கினால் எப்போதும் போல இயல்பான கிரிக்கெட்டை விளையாடவே நான் முயற்சிக்கிறேன்.
மைதானத்தின் எல்லைகள் எவ்வளவு பெரியது, பிட்ச் எப்படிச் செயல்படுகிறது என்பதை மட்டுமே ஆட்டத்திற்கு முன் கவனிப்பேன். எப்போதும் பாசிட்டிவ் மைண்ட்செட்டுடன் விளையாடுவதே பந்துவீச்சாளர்களை அழுத்தத்தில் வைக்கும். சாதனைகள் மற்றும் சதங்கள் தானாக வரும்.. நடப்பு சீசனில் ராஜஸ்தான் அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுப்பதே ஒரே இலக்கு என்று கூறியுள்ளார்.
சர்வதேச அளவில் முன்னணி பந்துவீச்சாளர்கள் பலரும் 15 வயதே ஆன வைபவ்வை வீழ்த்தப் பல்வேறு உத்திகளை வகுத்து வரும் நிலையில், "அவர்களின் வியூகம் எனக்குப் பொருட்டல்ல" என அவர் கூலாகப் பேசியிருப்பது அவரது அசாத்திய உத்வேகத்தைக் காட்டுகிறது. இதனால் வைபவ் சூர்யவன்ஷியை ரசிகர்கள் பலரும் பாஸ் பேபி என்று செல்லமாக அழைக்க தொடங்கி இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications