"செல்ஃபிஷ்" ஆட்டம்னா இதுதான்.. சொந்த மண்ணிலேயே சொதப்பிய பாபர் அசாம்.. 13வது முறையாக நடந்த சம்பவம்!
கராச்சி: 2017ஆம் ஆண்டுக்கு பின் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் 3வது இடத்தில் இருக்கிறார். அவரின் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் அடித்துள்ள 35 அரைசதங்களில், 13 அரைசதங்கள் 80 ஸ்ட்ரைக் ரேட்டுக்கும் கீழ் விளையாடி அடிக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி வில் யங் மற்றும் டாம் லேதம் ஆகியோரின் அபார சதம் காரணமாக 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 320 ரன்களை குவித்தது.

இதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு சாவுத் சக்கீல் - பாபர் அசாம் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. தொடக்க வீரர் ஃபக்கர் ஜமானின் கால்களில் காயம் ஏற்பட்டதால், அவர் தொடக்கம் கொடுக்கவில்லை. இதில் 19 பந்துகளை எதிர்கொண்ட சக்கீல் 6 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து 14 பந்துகளை எதிர்கொண்ட முகமது ரிஸ்வான் 3 ரன்களில் வெளியேறினார்.
இன்னொரு பக்கம் பாபர் அசாமும் ரன்கள் எடுக்க முடியாமல் திண்டாடினார். இதனால் 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 22 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஏற்கனவே 321 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி பாகிஸ்தான் சேஸிங் செய்த போது, பவர் பிளேவிலும் ரன்கள் வராதது கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியது.
மறுபுறம் ஜமான் அதிரடியாக ஆட முயற்சித்த போதும், அவரின் பேட்டில் இருந்து ரன்கள் வரவில்லை. காலில் ஏற்பட்ட காயம் அவருக்கு பின்னடையை ஏற்படுத்தியது. இதுபோன்ற சூழல்களில் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் சீராக பவுண்டரிகளை விளாசி ரன் ரேட்டையாவது கட்டுக்குள் வைத்து கொள்ள வேண்டும். ஆனால் பாபர் அசாம் எந்த கவலையும் இன்றி நிதானமாக டாட் பால்களை ஆடிக் கொண்டே இருந்தார்.
இதன் பலனாக 81 பந்துகளில் பாபர் அசாம் தனது அரைசதத்தை எட்டினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பாபர் அசாம் அடிக்கும் 35வது அரைசதம் இதுவாகும். இதனிடையே அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த போது, சில பவுண்டரிகளை அடித்த பாபர் அசாம் 90 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
2017ஆம் ஆண்டுக்கு பின் 80 ஸ்ட்ரைக் ரேட்டுக்கு கீழ் விளையாடி பாபர் அசாம் அடிக்கும் 13வது அரைசதம் இது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணிக்காக விளையாடாமல் பாபர் அசாம் சொந்த சாதனைகளுக்காக விளையாடி இருக்கிறார் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. பாகிஸ்தான் அணியின் தோல்விக்கும் பாபர் அசாமின் பொறுப்பில்லாத ஆட்டமே காரணமாக ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications