ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அல்ல.. ஆர்சிபி அணியே கெத்து.. ஸ்பான்சர்ஷிப்பில் தூக்கி நிறுத்திய விராட் கோலி!
சென்னை: ஐபிஎல் தொடரின் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களின் அடிப்படையில் சிஎஸ்கே அணியை விடவும் ஆர்சிபி அணி அதிகளவிலான ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களை பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சிஎஸ்கே அணியின் ஸ்பான்சர் ஒப்பந்த மதிப்பு ரூ.120 கோடி முதல் ரூ.130 கோடி வரை கணக்கிடப்பட்டுள்ள நிலையில், ஆர்சிபி அணியின் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்த மதிப்பு ரூ.140 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.
நேற்று ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து விராட் கோலிக்கு கேப்டன்சி மறுக்கப்பட்டுள்ளதாக மும்பை மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் கிண்டல் செய்தனர். இதனைத் தொடர்ந்து ஆர்சிபி அணி ரசிகர்கள் தரப்பில் கடந்த ஆண்டு மே 19ஆம் தேதி நடந்த போட்டியை நினைவுபடுத்தி பதிலடி கொடுத்தனர்.

இதனிடையே ஐபிஎல் தொடரில் யார் பெரிய அணி என்ற விவாதம் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பொருளாதாரம் மற்றும் ஸ்பான்சர்ஷிப் ஆகிய இரண்டையும் கொண்டு பட்டியலிட்டால், முதலிடத்தில் மும்பை அணி இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 5 ஐபிஎல் கோப்பைகள் இருப்பதோடு, அவர்களின் தற்போதைய ஸ்பான்சர்ஷிப் தொகை மட்டும் ரூ.145 கோடி முதல் ரூ.150 கோடி வரை உள்ளது.
ரோஹித் சர்மா, பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வீரர்கள் இருக்கும் போது மும்பை அணியால் அடுத்த சில சீசன்களில் ரூ.200 கோடி ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களை கூட எளிதாக பெற முடியும். அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் வர்த்தக பொருளாதார மையமான மும்பையின் பெயரில் இயங்கி வருவதும் அந்த அணிக்கு கூடுதல் சாதகம்.
இந்த பட்டியலில் 2வது இடத்தில் இருப்பது ஆர்சிபி அணிதான். இதுவரை நடந்துள்ள 17 சீசன்களில் ஒரு கோப்பையை கூட வெல்லாமல் இருக்கும் போதும், அந்த அணியின் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தின் மதிப்பு மட்டும் ரூ. 140 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு முழுமையான காரணமும் விராட் கோலி மட்டும்தான். சர்வதேச அளவில் விராட் கோலிக்கு இருக்கும் மதிப்பையே இந்த ஒப்பந்தங்கள் காட்டுகிறது.
இதனைத் தொடர்ந்து 3வது இடத்தில் சிஎஸ்கே அணியின் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்த மதிப்பு ரூ.120 கோடி முதல் ரூ.130 கோடி வரை உள்ளது. 5 முறை சாம்பியன் என்ற பட்டன், தோனி உள்ளிட்ட விஷயங்கள் இருந்தும் ஆர்சிபி அணியின் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை சிஎஸ்கே அணியால் முறியடிக்க முடியவில்லை. சிஎஸ்கே அணி தோனியை தொடர்ந்து விளையாட வைப்பதற்கும் இதுவொரு காரணமாக பார்க்கப்படுகிறது.
இது சிஎஸ்கே ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விராட் கோலியின் ரசிகர்கள் ஐபிஎல் தொடரில் நாங்கள்தான் கெத்து என்று கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் விராட் கோலி மற்றும் பெங்களூர் நகரம் இல்லையென்றால் ஆர்சிபி அணியின் மதிப்பு பஞ்சாப் அணிக்கும் கீழ் சென்றிருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications