ஆஹா.. சிக்னலை கொடுத்துட்டாங்க.. பச்சை ஜெர்சியில் புகுந்த ஆர்சிபி வீரர்கள்.. காரணமே இதுதான்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி வீரர்கள் பச்சை நிற ஜெர்சி அணிந்து களமிறங்கியுள்ளது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பிரச்சனையை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஆர்சிபி அணி, இம்முறை உலகில் மனிதர்கள் நிம்மதியாக வாழ்வதற்கு அதிக செடிகளை நட வேண்டும் என்ற காரணத்திற்காக பச்சை நிற ஜெர்சி அணிந்து விளையாடி வருகிறது.
ஐபிஎல் தொடரின் 28வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து பெங்களூர் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் ரஜத் பட்டிதார் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டியில் ஆர்சிபி அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேபோல் இரு அணிகளும் கடந்த போட்டியில் தோல்வியடைந்ததால், இந்த போட்டியில் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கினர்.

இதனிடையே ஆர்சிபி அணி நிர்வாகம் தரப்பில் இன்று ஆர்சிபி அணியின் வீரர்கள் பச்சை நிற ஜெர்சியுடன் விளையாடி வருகின்றனர். இதனால் ஆர்சிபி அணி ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். ஏனென்றால் பச்சை நிற ஜெர்சியில் ஆர்சிபி அணி இதுவரை விளையாடியுள்ள 14 போட்டிகளில் 9 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. ஒரு போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறுகையில், உலகம் முழுவதும் அதிக செடிகளை நட்டு மக்கள் வளர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பச்சை நிற ஜெர்சியுடன் களமிறங்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி ஆர்சிபி அணி நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும் இப்படி பச்சை நிற ஜெர்சியில் விளையாடுவது வழக்கமான ஒன்றுதான்.
இதனால் ஆர்சிபி அணிக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே ஐபிஎல் கிரிக்கெட் நிர்வாகம் தரப்பில் ஒவ்வொரு டாட் பாலுக்கும் ஒரு செடி நடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிஎஸ்கே அணிதான் இதுவரை அதிக டாட் பால்களை ஆடி இருக்கிறது. இந்த 6 போட்டிகளில் மட்டும் சிஎஸ்கே அணி 245 டாட் பால்களை ஆடி உள்ளது. இதனால் ஆர்சிபி அணியும் செடி நட வேண்டும் என்பதற்காக டாட் பால்களை ஆடிவிட கூடாது என்று ரசிகர்கள் ஜாலியாக கிண்டல் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications