8 சதங்கள் 15ஆக மாறியிருக்க வேண்டிய ‘மாஸ்’ கதை.. ரிஷப் பண்ட்டை துரத்தும் 90ஸ் சாபம்! ரசிகர்கள் சோகம்
சண்டிகர்: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 8வது முறையாக சதத்தை மிஸ் செய்திருப்பது ரசிகர்களிடையே விவாதமாகி இருக்கிறது. ஏற்கனவே 7 முறை 90 ரன்களுக்கு மேல் சென்ற போது ரிஷப் பண்ட் அவுட்டான நிலையில், இன்றைய ஆட்டத்தில் 81 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார்.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 127 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 564 ரன்களை குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 177 பந்துகளில் 126 ரன்களையும், கேஎல் ராகுல் 165 பந்துகளில் 100 ரன்களையும் விளாசினர்.

அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 81 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் தவறவிடும் 8வது சதம் இதுவாகும். ஏற்கனவே 7 இன்னிங்ஸ்களில் 90 ரன்களுக்கு மேல் அடித்த போது ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். 90 ரன்களை எட்டிய போது கொஞ்சம் நிதானம் காட்டி இருந்தாலே ரிஷப் பண்ட்-டால் எளிதாக 15 ரன்களை இந்நேரம் விளாசி இருக்க முடியும்.
ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போதும் ஒரு 'எண்டர்டெய்னர்'. பந்துவீச்சாளர்களைப் பயமுறுத்தும் அவரது பேட்டிங் பாணி உலகப் பிரசித்தி பெற்றது. ஆனால், அதே அதிரடி ஆட்டம் சில நேரங்களில் அவருக்குப் பெரும் துரதிர்ஷ்டத்தையும் தேடித் தந்துள்ளது. ஆனால், அவர் தனது அதிரடியால் சதத்தை நூலிழையில் தவறவிட்ட இன்னிங்ஸ்களைக் கணக்கிட்டுப் பார்க்கும் போது வியப்பு ஏற்படுகிறது.
பொதுவாக பேட்ஸ்மேன்கள் 90 ரன்களைக் கடந்துவிட்டால் மிகவும் நிதானமாக விளையாடி சதத்தைப் பூர்த்தி செய்ய நினைப்பார்கள். ஆனால், ரிஷப் பண்ட் 90-களில் இருந்தாலும் சிக்ஸர் அடிக்கவே ஆசைப்படுவார். இந்த அதிரடி உத்தியால் அவர் பலமுறை 90-களில் அவுட்டாகியுள்ளார். இந்த 7-8 இன்னிங்ஸ்களில் அவர் சற்றே நிதானம் காட்டியிருந்தால், இந்நேரம் அவரிடம் 13 முதல் 15 டெஸ்ட் சதங்கள் இருந்திருக்கும்.
சொந்த சாதனைகளுக்காக விளையாடாமல், ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் அதிரடியாக விளையாடுவதால் தான், ரிஷப் பண்ட் 90-களில் அவுட்டானாலும்கூட அவர் இந்திய கிரிக்கெட்டின் அசைக்க முடியாத 'மேட்ச் வின்னர்' ஆகக் கொண்டாடப்படுகிறார். ஐபிஎல் தொடரில் ஃபார்மின்றி தவித்த ரிஷப் பண்ட், முதல் டெஸ்ட் போட்டியிலேயே 81 ரன்களை விளாசி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications