புண்படுத்திட்டே இருக்கீங்களேடா.. அவமானப்படுத்தபட்ட ரோஹித் சர்மா.. மும்பை கேப்டனாக சூர்யகுமார் யாதவ்!
மும்பை: சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படுவார் என்று அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அறிவித்துள்ளார். கடந்த சீசனில் ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக ஹர்திக் பாண்டியாவுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. சூர்யகுமார் யாதவை கேப்டனாக நியமித்ததன் மூலமாக ரோஹித் சர்மாவை கேப்டன்சி யூனிட்டில் இருந்தே மும்பை அணி நிர்வாகம் நீக்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் 3 நாட்களில் தொடங்கவுள்ளது. இதில் மார்ச் 23ஆம் தேதி இரவு நடக்கும் 3வது லீக் போட்டியில் சிஎஸ்கே அணியை எதிர்த்து மும்பை அணி களமிறங்கவுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கப்பட்டு சில நிமிடங்களிலேயே விற்பனையானது.

அதிலும் மொத்தமாக 38 ஆயிரம் டிக்கெட்டுகளில், சுமார் 20 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே ஆன்லைன் விற்பனைக்கு வந்தன. மற்றவை ஸ்பான்சர்கள், விஐபி-க்கள், அணி நிர்வாகங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனால் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் விரக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்கவுள்ள மும்பை அணி தீவிரமாக தயாராகி வருகிறது. இதனையொட்டி செய்தியாளர்களை சந்தித்து மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுகையில், மும்பை அணியில் நான் இல்லையென்றால், சூர்யகுமார் யாதவ் தான் கேப்டனாக இருப்பார். அவர் இந்திய அணியையும் வழிநடத்தி வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலமாக சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படுவார் என்பது உறுதியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் மும்பை அணியின் கேப்டன்சி யூனிட்டில் இருந்தே ரோஹித் சர்மா நீக்கப்பட்டிருப்பதாக புரிய வருகிறது. கடந்த சீசனில் ரோஹித் சர்மாவை மும்பை அணி நிர்வாகம் எந்தவித முன்னறிவிப்பின்றி கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது.
இதற்கு ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா வெளிப்படையாக கொந்தளிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதேபோல் மும்பை வான்கடே மைதானத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிரான கோஷங்கள் எழுந்தன. அதேபோல் ரோஹித் சர்மாவை பவுண்டரி லைனில் ஃபீல்டிங் நிறுத்தியது, இம்பேக்ட் பிளேயராக விளையாட வைத்தது என்று பல்வேறு சர்ச்சைகளும் உருவாகின.
ஆனாலும் இந்திய அணியில் ரோஹித் சர்மா - ஹர்திக் பாண்டியா இடையில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லாமல் இருந்தது. மும்பை அணியின் கேப்டன்சி பொறுப்பில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்ட ரோஹித் சர்மா, ஓராண்டில் டி20 உலகக்கோப்பை மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்று சாதித்துள்ளார். ஆனாலும், மும்பை அணியின் பார்ட் டைம் கேப்டனாக கூட ரோஹித் சர்மாவை மும்பை அணி நியமிக்கவில்லை.
இதனால் இம்முறையும் ரோஹித் சர்மாவுக்கு சில கசப்பான அனுபவம் ஏற்படலாம் என்று விமர்சகர்கள் கூறி வருகின்றனர். அதேபோல் ரோஹித் சர்மாவுக்கு 38 வயதாகிவிட்டதால், இந்த சீசனில் பெரும்பாலான போட்டிகளில் இம்பேக்ட் பிளேயராகவே களமிறங்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications