சிஎஸ்கே அணியின் கொள்கையை மாற்றிய பிளமிங்.. ஆதரவாக நின்ற தோனி.. ஜடேஜா விலக காரணம் இதுதான்!
மும்பை: சிஎஸ்கே அணியில் சில கொள்கை முடிவுகளை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் எடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இனி வரும் காலங்களில் சீனியர் வீரர்கள் அல்லாமல் முழுக்க முழுக்க இளம் வீரர்களை கொண்டு சிஎஸ்கே அணியை உருவாக்க பயிற்சியாளர் ஃபிளமிங் மற்றும் தோனி ஆகிய இருவரும் முடிவு எடுத்துள்ளனர்.
2025ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சிஎஸ்கே அணிக்கு பல்வேறு பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது. கடந்த சீசன் வரை அனுபவ வீரர்களிடம் அதிக முதலீடுகளை சிஎஸ்கே அணி மேற்கொண்டு வந்தது. ஆனால் கடந்த சீசனில் அந்த திட்டம் பலனளிக்காத சூழலில், வழக்கத்திற்கு மாறாக சில இளம் வீரர்களை மிட் சீசனிலேயே டிரையல்ஸ் செய்தது.

இதனிடையே ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலக, உடனடியாக பேர்ஸ்டோவ்வை ஒப்பந்தம் செய்யலாம் என்று சிஎஸ்கே நிர்வாகம் கருதியது. ஆனால் எஸ்ஏ20 லீக் தொடரில் டிவால்ட் பிரெவிஸ் ஆடிய ஆட்டம் ஃபிளமிங்கை கவர்ந்தது. இதனால் டிவால்ட் பிரெவிஸ்ஸை வாங்கலாம் என்று முதலில் கூறியதே ஃபிளமிங் தான். அவரும் தொடக்கம் முதலே சிஎஸ்கே நிர்வாகத்தின் நம்பிக்கையை காப்பாற்றினார்.
அதேபோல் வைபவ் சூர்யவன்ஷியின் எழுச்சி காரணமாக, தோனி தரப்பில் 17 வயதான ஆயுஷ் மாத்ரே சிஎஸ்கே அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். உர்வில் படேலும் அதிரடியில் வெளுத்து கட்ட, சிஎஸ்கே அணியில் பல்வேறு முடிவுகள் உடனடியாக எடுக்கப்பட்டன. அதாவது இனி வரும் காலங்களில் அனுபவ வீரர்களிடம் முதலீடு செய்வதை குறைத்து இளம் வீரர்களிடம் முதலீடு செய்யலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.
இதனை ஸ்டீபன் ஃபிளமிங் மற்றும் தோனி இருவரும் சேர்ந்து வலியுறுத்த, சிஎஸ்கே நிர்வாகமும் ஒப்புக் கொண்டது. இதன் காரணமாக சஞ்சு சாம்சன் டிரேட்டில் வெளி வர விரும்புகிறார் என்பதை அறிந்து உடனடியாக சிஎஸ்கே அணி பேச்சுவார்த்தையை தொடங்கியது. சஞ்சு சாம்சனை வாங்க சிஎஸ்கே அணி சீனியர் வீரரான ரவீந்திர ஜடேஜாவை கொடுக்க முடிவு செய்ததும் இதன் அடிப்படையில் தான்.
சீனியர் வீரரான ஜடேஜாவுக்கு ரூ.18 கோடி ஊதியம் பெரிய தொகையாகவே பார்க்கப்பட்டது. இதுவே ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் இருந்தால், அவர்களை எளிதாக குறைந்த தொகைக்கு ரீடெய்ன் செய்திருக்க முடியும். இனி சிஎஸ்கே அணியில் சீனியர் வீரர்களுக்கு இடமில்லை என்பதை வலியுறுத்தவும் ஜடேஜா அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
தோனியும் இந்த சீசனில் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டியோடு ஓய்வை அறிவிப்பார் என்று கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. தோனி ஓய்வை அறிவித்தால், அந்த பணத்தின் மூலமாக சில இளம் வீரர்களை சிஎஸ்கே அணி உடனடியாக ஒப்பந்தம் செய்யும் என்று நம்பலாம். இதனால் சிஎஸ்கே அணியின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications