பேட்டிங் செய்ய வராமல் தூங்கிய பாகிஸ்தான் வீரர்.. கடைசியில் இப்படி ஆகிடுச்சு! வறுக்கும் நெட்டிசன்கள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ளூர் போட்டியில் பாகிஸ்தான் தேசிய அணியில் உள்ள வீரர் சவுத் ஷகீல் இடம்பெற்று இருந்தார். அவரது பேட்டிங்கை பார்க்கப் பலரும் ஆர்வமாக மைதானத்திற்கு வந்திருந்தனர். ஆனால், அவர் பேட்டிங் பிடிக்க வராமல் தூங்கியதால் டைம்டு அவுட் முறையில் அவுட் ஆனதாக அறிவிக்கப்பட்டார். வினோதமான இந்தச் சம்பவம் பேசுபொருள் ஆகியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் இப்போது நடந்து வருகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இதன் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இறுதிப் போட்டி துபாயில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து என இரண்டுமே வலிமையான அணிகள் உள்ளதால் இறுதிப் போட்டி கடுமையாக இருக்கும் என்றே தெரிகிறது

சாம்பியன்ஸ் டிராபி
அதேநேரம் இந்தத் தொடரை நடத்திய பாகிஸ்தானுக்கு இது மறக்க வேண்டிய தொடராகவே அமைந்தது. பாகிஸ்தான் லீக் சுற்றில் மூன்று போட்டிகளில் விளையாடிய நிலையில், அதில் நியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிராகத் தோல்வி அடைந்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இப்படி ஒரு வெற்றிகூட பெறாமல் பாகிஸ்தான் பரிதாபமாக வெளியேறியது.
இதனால் ஏற்கனவே பாகிஸ்தான் ரசிகர்கள் தங்கள் அணியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க உள்ளூர் போட்டியில் வீரர் ஒருவர் களத்திற்கு வராமலேயே அவுட் ஆகியிருக்கிறார். அதாவது பேட்டிங் செய்ய வருவதற்குப் பதிலாக அவர் உள்ளேயே படுத்து தூங்கியிருக்கிறார். இதனால் டைம் ஆவுட் முறையில் அவர் அவுட் ஆகியிருக்கிறார்.
சவுத் ஷகீல்
பாகிஸ்தான் அணியின் வீரர் சவுத் ஷகீல் தான் இதுபோல அவுட் ஆடகியுள்ளார். அங்கு நடைபெறும் பிரசிடென்ட்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் விளையாடிய ஷகீல், மூன்று நிமிடங்களுக்குள் கிரீஸுக்கு வரத் தவறியதால் அவுட் ஆகியுள்ளார். இதன் மூலம் முதல் தர கிரிக்கெட்டில் டைம் அவுட் மூலம் அவுட் ஆன ஏழாவது பேட்டர் என்ற மோசமான சாதனையை ஷகீல் படைத்திருக்கிறார்.
ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய ஷகீல் ஐந்தாவது இடத்தில் களமிறங்கி இருந்தார். தனக்கு முன்பு இரு பேட்ஸ்மேன்கள் இருந்ததால் ஷகீல் சற்று ரிலாக்ஸாக இருந்துள்ளார். ஆனால், அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்ந்த நிலையில், ஷகீலால் உடனடியாக களத்திற்குச் செல்ல முடியவில்லை. இதையடுத்து டைம் அவுட் முறையில் அவுட் ஆனதாக அறிவிக்கப்பட்டார்.
தூங்கியதால் அவுட்?
இதற்கிடையே இரண்டு விக்கெட்கள் இருந்ததால் ஷகீல் தூங்கிக் கொண்டு இருந்ததாகவும் இதன் காரணமாகவே அவரால் சரியான நேரத்தில் களத்திற்கு வர முடியவில்லை என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். வழக்கத்திற்கு மாறான நேரத்தில் இந்தப் போட்டி நடந்துள்ளது. இதனால் ஷகீல் தூங்கிக் கொண்டு இருந்ததாகவும் இதன் காரணமாகவே அவர் சரியான நேரத்தில் களத்திற்கு வர முடியாமல் அவுட் ஆனதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
விதிகள் சொல்வது என்ன
கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன் ஒருவர் 10 முறைகளில் அவுட் ஆகலாம். அதில் ஒன்று தான் டைம்டு அவுட். இது 1980ஆம் ஆண்டு விதிகளில் இணைக்கப்பட்டது. ஐசிசி கிரிக்கெட் விதிகள் 40.1.1இன் படி, "ஒரு விக்கெட் விழுந்த பிறகு அல்லது ஒரு பேட்டர் ஓய்வு பெற்ற பிறகு, அடுத்து வரும் பேட்டர் 3 நிமிடங்களுக்குள் அடுத்த பந்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் டைம்டு அவுட் முறையில் அவர் அவுட் என அறிவிக்கப்படலாம்" என்பதே விதியாகும்.
முதல்முறை இல்லை
அதேநேரம் சமீப காலங்களில் வீரர் ஒருவர் இதுபோல டைம்டு அவுட் முறையில் அவுட் ஆவது இது முதல்முறை இல்லை. கடந்த 2023ம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் மூத்த வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் இதேபோல டைம் அவுட் முறையில் அவுட் ஆனார். போட்டியின் 25வது ஓவரில் மேத்யூஸ் பேட்டிங் செய்ய உள்ளே வந்தார். ஹெல்மெட் மற்றும் கிளவுஸ் சிக்கல் இருந்ததால் அவர் பந்தை எதிர்கொள்ள லேட் ஆனது. வங்கதேச வீரர்கள் இதற்கு அப்பீல் செய்த நிலையில் அவுட் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications