இந்திய அணியில் அபிஷேக் சர்மா அவுட், சஞ்சு சாம்சன் இன்? மோர்க்கல் கொடுத்த மெகா அப்டேட்!
மும்பை: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா நீக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் தொடர்பாக பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் பதில் அளித்துள்ளார். அபிஷேக் சர்மா ரன்கள் சேர்க்க முடியாத போது மற்ற பேட்ஸ்மேன்கள் பொறுப்பை எடுத்துக் கொண்டதாக கூறிய மோர்க்கல், டி20 உலகக்கோப்பை தொடரின் மிக முக்கிய இடத்தில் இந்திய அணி இருப்பதாக கூறியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்று போட்டிகள் தொடங்க உள்ளன. இதில் நாளை மறுநாள் நடக்கவுள்ள ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்க உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதனிடையே அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏனென்றால் டி20 உலகக்கோப்பை தொடரில் 3 போட்டிகளில் ஆடிய அபிஷேக் சர்மா, 3லும் டக் அவுட்டாகி வெளியேறி இருக்கிறார். இன்னும் ஒரு ரன் கூட சேர்க்கவில்லை. அதுமட்டுமல்லாமல் கடைசியாக ஆடிய 7 போட்டிகளில் 5 இன்னிங்ஸில் டக் அவுட்டாகி இருக்கிறார் அபிஷேக் சர்மா. இதனால் ரசிகர்கள் பலரும் சஞ்சு சாம்சனை தொடக்க வீரராக களமிறக்க வேண்டும் என்று பேசத் தொடங்கி இருக்கின்றனர்.
இதனால் சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா நீக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியது. இதுகுறித்து பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் பேசுகையில், அபிஷேக் சர்மாவை நீக்குவது தொடர்பாக அணிக்குள் எந்தவித விவாதமும் நடக்கவில்லை. அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர். இந்த தொடரில் இன்னும் ரன் சேர்க்க முடியாமல் இருக்கிறார்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். நிச்சயமாக அபிஷேக் சர்மாவும் ரன்கள் சேர்ப்பார் என்று நம்புகிறோம். டி20 உலகக்கோப்பை தொடரின் மிக முக்கியமான இடத்தில் இந்திய அணி உள்ளது. நிச்சயமாக எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று நம்புகிறேன். அபிஷேக் சர்மா பயிற்சியில் மிகச்சிறப்பாக ஆடி வருகிறார்.
அவருக்கு நல்ல தொடக்கம் மட்டும் கிடைத்தால் போதும்.. அவரின் இன்னிங்ஸை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.. அதேபோல் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு ஆஃப் ஸ்பின்னர்களை எதிர்கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை.. அதனை அணுகுவதில் சில தயக்கம் இருக்கிறது. அதில் முன்னேற்றம் காண வேண்டும்.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணியில் சில ஆஃப் ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். அவர்களை எதிர்கொள்ள திலக் வர்மா, அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் தயாராகி வருகின்றனர். இந்திய அணியிலும் சில ஆஃப் ஸ்பின்னர்கள் இருக்கின்றனர். இதனால் பயிற்சியில் கவனம் செலுத்தி வருவதாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications